சர்வ வல்லபரான நித்திய சர்வேசுரா, ஞானஸ்நானத்தின் வழியாக அடியேனை உமது பிள்ளையாக சுவீகரித்துக் கொள்ளத் தயை செய்தீர். பச்சாத்தாப நியாயாசனத்தில் என் பாவங்களுக்கு மன்னிப்பைத் தேவரீர் எனக்கு வழங்கினீர். உமது பரிசுத்த மேஜையண்டையில் தேவரீர் என்னை அமரச் செய்து சம்மனசுக்களின் அப்பத்தால் என்னைப் போஷித்தீர். இந்த நன்மைகளை எல்லாம் என்னில் நிறைவுபெறச் செய்யும்படியாக உம்மை மன்றாடுகிறேன். இவ்வுலகின் அழியக் கூடிய காரியங்களை நான் நிந்தித்து, நித்தியமானவைகளை நேசிக்கும்படியாக ஞானத்தின் இஸ்பிரீத்துவை எனக்குத் தந்தருளும். என்னை ஒளிர்வித்து உமது வேதத்தைப் பற்றிய அறிவை எனக்குத் தரும்படியாக புத்தியின் இஸ்பிரீத்துவைத் தந்தருளும். சர்வேசுரனை மகிழ்வித்து, பரலோகத்தை அடைய மிக நிச்சயமான வழிகளைக் கவனமாக நான் தேடும்படியாக விமரிசையின் ஸ்பிரித்துவைத் தந்தருளும். என் இரட்சணியத்திற்கு எதிரான சகல தடைகளையும் தைரியத்தோடு நான் மேற்கொள்ள எனக்கு திடத்தின் இஸ்பிரீத்துவைத் தந்தருளும். ஆண்டவரின் வழிகளைப் பற்றிய அறிவை நான் பெற்றுக் கொள்ளும் படியாக அறிவின் இஸ்பிரீத்துவைத் தந்தருளும்.தேவ ஊழியமானது எனக்கு இனிமையாயும் நேசத்திற்கு உரியதாயும் இருக்கும்படியாக எனக்கு பக்தியின் இஸ்பிரீத்துவைத் தந்தருளும். சர்வேசுரன் மீதான ஒரு நேசமரியாதையால் நான் நிரப்பப் படவும், அவர் விரும்பாத எதையும் செய்வதற்கு அஞ்சவும் தேவபயத்தின் இஸ்பிரீத்துவைத் தந்தருளும். உமது இரக்கப் பெருக்கத்தில் நித்திய ஜீவியத்தை நான் அடையும் வரை சேசுநாதருடைய சீடனுக்குரிய முத்திரையால் என்னை முத்திரையிட்டருளும். நெற்றியில் சிலுவையைச் சுமக்கிற நான் அதை என் இருதயத்திலும் சுமக்கும்படியாகவும், எனக்கு முன்பாக உம்மைத் திடதைரியத்தோடு அறிக்கையிட்டு, ஒரு நாள் உமது தேர்ந்து கொள்ளப்பட்டவர்களோடு ஒன்றாக எண்ணப்படும் பாக்கியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளவும் எனக்கு வரமருள்வீராக. ஆமென்.