(எழுந்து நிற்கவும்.)
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பரி: உமது ஆவியோடும் இருப்பாராக.
குரு: உங்களுடைய இருதயங்களை மேலே எழுப்புங்கள்.
பரி: ஆண்டவரை நோக்கி எழுப்பியிருக்கிறோம்.
குரு: நமது தேவனாகிய ஆண்டவருக்குத் தோத்திரஞ் செலுத்துவோமாக.
பரி: அதுவே தகுதியும் நீதியுமாமே.
(இப்போது குரு கரங்களை விரித்து முகவுரை செபிக்கிறார். சாதாரண ஞாயிற்றுக்கிழமைகளில் பின்வரும் பரிசுத்த தமத்திரித்துவத்தைக் குறித்த முகவுரை ஜெபிக்கப் படுகிறது.)
பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபரான பிதாவே, நித்திய சர்வேசுரா, தேவரீருக்கு எக்காலத்திலும் எவ்விடத்திலும் நாங்கள் நன்றியறிந்த தோத்திரஞ் செய்வது மெய்யாகவே தகுதியும், நீதியுமுள்ளதுமாயும், செம்மையுள்ளதும், இரட்சணியத்துக்கு உரியதுமாய் இருக்கிறது. தேவரீர் உமது ஒரே பேறான சுதனோடும், இஸ்பிரீத்துசாந்துவோடும், ஆள்வகையிலே ஒன்றாயிராமல் ஒரே சுபாவத்தில் திரித்துவமாய் ஒரே சர்வேசுரனும், ஒரே ஆண்டவருமாய் இருக்கிறீர். ஆதலால் உம்முடைய அறிக்கைப்படியே உமது மகிமையைப் பற்றி நாங்கள் எதனை விசுவசிக்கின்றோமோ, அதனையே உமது சுதனைப் பற்றியும் இஸ்பிரீத்து சாந்துவைப் பற்றியும் வித்தியாசமும், வேறுபாடுமின்றி விசுவசிக்கின்றோம். உமது மெய்யான நித்திய தெய்வீகத்தை அறிக்கையிட்டு, தேவ ஆள் வகையில் திரித்துவத்தையும், தேவ சுபாவத்தில் ஏகத்துவத்தையும், தேவ மகத்துவத்தில் சமத்துவத்தையும் வணங்கி ஆராதிக்கின்றோம்.
ஆதலால் தேவரீருடைய தேவ மகத்துவத்தைத் தூதர்களும், அதிதூதர்களும், இன்னும் ஞானாதிக்கரும், பத்திச்சுவாலகரும் துதித்து அனுதினமும் முடிவின்றி ஆர்ப்பரித்து ஒரே குரலாய்ச் சொல்லுகின்றதாவது:
பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்! சேனைகளின் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தர். பரலோகமும் பூலோகமும் தேவரீருடைய மகிமையினால் நிறைந்திருக்கின்றன. உன்னதங்களில் தோத்திரம் உண்டாகக் கடவது.
ஆண்டவருடைய நாமத்தினால் எழுந்தருளி வருகிறவர் ஆசீர்வதிக்கப் பட்டவர். உன்னதங்களில் தோத்திரம் உண்டாகக் கடவது.
(தேவ வசீகர வேளை வந்து விட்டதால் இந்நேரமுதல் முழந்தாட்படியிட வேண்டும்).