திருமுழுக்கு - தொடக்கத் திருச்சபை!
திருமுழுக்கின் மாண்பினை புரிந்து கொண்டு அதனை வாழவேண்டுமெனின், தொடக்க கிறிஸ்தவ சமூகம் வரலாற்றில் எவ்வாறு கிறிஸ்தவர்களை உருவாக்கியது என்பதை நாம் அறிய வேண்டும். எப்படி கிறிஸ்தவர்களை உருவாக்க முடியும் என்று வியப்பாக இருக்கின்றதா? கடந்த கட்டுரையின் இறுதியிலே 2ம், 3ம் நூற்றாண்டின் திருச்சபைத்த ந்தை தெர்த்தூலியன் "கிறிஸ்தவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்" என்று கூறுகிறார். என்று எழுதினேன். இதன் பொருள் என்ன? ஒருவர் மனிதராக பிறக்கின்றார். திருமுழுக்கே அவரை கிறிஸ்தவராக்குகின்றது. திருமுழுக்கு வெறுமனே வழங்கப்பட்ட ஓர் அருளடையாளம் அல்ல. மாறாக, கிறிஸ்துவை மீட்பராக ஏற்று, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்வதற்கு மனமுவந்து முடிவெடுக்கின்றபொழுது அருளப்படுகின்றது.
'நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும்சீ டராக்குங்கள். தந்தை மகன் தூய ஆவியார் பெயரால்தி ருமுழுக்கு கொடுங்கள்" (மத் 28:19) என்ற உயிர்த்த இயேசுவின் வார்த்தைகளைத் திருத்தூதர்கள் தங்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியின் மேல் வரிச்சட்டமாகக் கொண்டு செயல்பட்டனர். இதில் நமக்கொரு கேள்வி எழலாம். திருத்தூதர்கள் திருமுழுக்கு பெற்றார்களா? இதிலே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விடயம் யாதெனில் அருளடையாளங்கள் அனைத்தும், அதிலும் குறிப்பாக திருமுழுக்கென்பது கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றில் பங்கேற்று, முதற் சீடர்களைப் போன்று 'பெந்தக்கோஸ்தே" அனுபவத்தைப் பெறுவதாகும்.
அந்த வகையில் திருத்தூதர்கள் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றில் பங்கேற்று, 'பெந்தக்கோஸ்தே" அனுபவத்தைப் பெற்றவர்கள். தொடக்கத் திருச்சபையில் எவ்வாறு திருமுழுக்கு கொடுத்தார்கள்? புதிய ஏற்பாடு இதற்குரிய தெளிவான விபரங்களை தருவதில்லை. அதாவது திருமுழுக்கு சடங்கு எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதற்கான சான்றுகள் புதிய ஏற்பாட்டில் இல்லை. பொதுவாக திருமுழுக்கு யோவான் வழங்கிய திருமுழுக்கு கிறிஸ்தவ திருமுழுக்கின் முன்னோடியாக கருதப்படுகின்றது. திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கு மனந் திரும்புதலின் அடையாளமெனில் பாவமில்லாத இயேசு ஏன் திருமுழுக்கு பெறவேண்டும்? பாவம் அறியாத இறைமகன் இயேசு மனம் திரும்பும் தேவை அற்றவராகின்றார்.
இயேசுவின் திருமுழுக்கு மனிதர்களோடு அவர் கொண்ட தோழமையின் அடையாளமாகின்றது. இத்திருமுழுக்கின் வழியாக இயேசு தூய ஆவியின் அனுபவம் பெறுகின்றார். இதன்மூலம் இயேசு 'இறைமகன்" என்பதை தந்தை வெளிப்படுத்துகின்றார். எனவே இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு அவரை பணிவாழ்வுக்கு அறிமுகப்படுத்திய நிகழ்வாகும். பாதிக்கப்பட்ட மனுக்குலத்தின் பிரதிநிதியாக இறைதந்தையுடன் புதியதோர் அனுபவத்திற்கு தம்மை உட்படுத்துகின்றார். மேலும் இத்திருமுழுக்கானது அவரது இறப்பு - உயிர்ப்பை முன்னறிவிக்கும் நிகழ்வாகவும் அமைகின்றது. அதுசரி திருமுழுக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்பதை இன்னும் எழுதவில்லையே என்று நீங்கள் அங்கலாய்ப்பது எனக்குப் புரிகிறது. திருச்சபை தந்தையர்களின் குறிப்புக்களிலிருந்து நாம் ஒரு சில முறைகளை காணலாம்.
1) தண்ணீரில் மூழ்கச் செய்தல்
2) ஓடுகின்ற தண்ணீர் இருக்குமிடத்தில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று தலையில் தண்ணீர் ஊற்றுதல்
இப்பழக்கம் 14ம் நூற்றாண்டு வரை பின்பற்றப்பட்டு வந்தது. தொடக்கத்தில் கிறிஸ்துவின் பெயராலேயே திருமுழுக்கு கொடுக்கப்பட்டது.
இயேசுக்கிறிஸ்துவை நம்புகிறீரா? நீர் தூய ஆவியாரை நம்புகிறீரா?" ஒவ்வொரு தடவையும் திருமுழுக்கு பெறுபவர் "ஆம்" என்று சொல்லும்போது அவரை நீரில் மூழ்கி எடுப்பர். இம்முறையே பிற்காலத்தில் 'தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுக்கின்றேன்" என்று மாற்றம் கண்டது. சீரியன் மொழியில் முதல் நூற்றாண்டு முடிவில் எழுதப்பட்ட "திதாக்கே" பின்வருமாறு கூறுகிறது; தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் ஓடும் தண்ணீரில் திருமுழுக்கு அளிக்கப்பட்டது. அல்லது தலைமீது மும்முறை தண்ணீர் ஊற்றி அளிக்கப்பட்டது.
தொடக்க காலத்தில் பெரும்பான்மையாக வளர்ந்தோரே திருமுழுக்குப் பெற்றனர். திருத்தூதர்களின் போதனையின் பின் பிற இனத்தவராகிய கொர்னேலியுவும், அவரது குடும்பத்தினரும் திருமுழுக்கு பெற்றனர் (தி.ப 10:47-48) சிறைக்காவலரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்கு பெற்றார்கள் (தி.ப 16:33) இவ்விரண்டு நிகழ்வுகளும் குழந்தைகளும் திருமுழுக்கு பெற்றனர் என்பதைக் காட்டுகின்றது. (வருகிற பதிவில் இதனைப்பற்றி ஆழமாக கற்போம்) வளர்ந்தோர் திருமுழுக்கு பெறுவதற்கு திருச்சபைத் தந்தையர்கள் Catechumente என்றழைக்கப்படும் திருமுழுக்கு முன் ஆயத்தநிலை என்ற படிநிலையினை ஆரம்பித்தார்கள்.
மேலும் அருளடையாள கொண்டாட்டத்தினை அர்த்தத்தோடு கொண்டாடினார்கள். உண்மையிலேயே கொன்ஸ்டன்டைன் மன்னனின் உடன்படிக்கைக்கு முன்னதாக கிறிஸ்தவனாக இருப்பது அபாயகரமானது. காரணம் அது கலாபனையின் காலம், கிறிஸ்தவர்கள் என்ற காரணத்திற்காக துன்புறுத்தப்பட்டக் காலம், பலவித அச்சுறுத்தல்களுக்கு முகங் கொடுக்க
வேண்டியிருந்தது. திருச்சபை தடைசெய்யப்பட்டிருந்தது. ஆகவே இத்துணை அச்சுறுத்தல்கள் மத்தியில் திருமுழுக்கு பெறுவதென்றால் உண்மையிலேயே
அங்கே அர்ப்பணம் உண்டு. சாவுக்கு பயப்படாத அஞ்சா நெஞ்சம் உண்டு.
மேலும் சாகும் வரை பாவ வாழ்வை கைவிட்டு கிறிஸ்துவுக்காக வாழ்வேன் என்ற வைராக்கியம் அதனால் விண்ணக வாழ்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. வெறுமனே திருமுழுக்கு பெறுவதல்ல, அதுவே வாழ்வாக இருக்க வேண்டுமென்பதை ஏற்றுக் கொண்டனர். ஆகவே திருமுழுக்கு பெறுகின்றவர் கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாத முரணான காரியங்களில் ஈடுபடக்கூடாது. இதனிமித்தம் சிலர் திருமுழுக்கு பெறுவதை தள்ளி வைத்தனர். கொன்ஸ்டன்டைன் மன்னனுடைய உடன்படிக்கையின் பிற்பாடு நிலைமாறியது. கிறிஸ்தவ மதத்திற்கு நிறைய சலுகைகள் கிடைத்தன. கிறிஸ்தவம் அரச மதமாகியது. எனவே எதுவித அச்சுறுத்தலும் இருக்கவில்லை. எனவே வீரியம் குறைந்தது.
இந்த இடத்திலே இன்னுமொரு முக்கியமான நிகழ்வை குறிப்பிட்டே ஆகவேண்டும். திருமுழுக்கு பெறவிருப்பவர் தம்மை போதிய அளவு ஆயத்தம்
செய்ய வேண்டும். இந்த ஆயத்தக் காலம் 2 அல்லது 3 வருடமெடுக்கலாம். ஏன் இத்தனை நீண்ட காலம் என்ற கேள்வி எழுப்பலாம். ஒருவருடைய மனமாற்றத்தை மையப்படுத்தி இத்தகைய ஓர் நீண்ட கால பயிற்சி மனமாற்றம் சாகும்வரை நடைபெறவேண்டியதொன்று. இத்தகைய ஆயத்தக் காலத்தில் அவர் தனிமையாக இல்லை. கிறிஸ்தவ சமூகம் அவரோடு பயணிக்கின்றது. அவர்க்கென்று ஓர் ஞானப் பெற்றோர் அவரோடு பயணிப்பார். உறுதுணையாக இருப்பார். தங்களது முன்மாதிரிகையான வாழ்வால் துணைபோவார். கிறிஸ்தவ சமூகம் அவரோடு செபம், வழிபாடு, விசுவாச வாழ்வு, முன்மாதிரிகையான வாழ்வு போன்றவற்றால் பயணிக்கிறது. திருமுழுக்கு பெறவிருப்பவர் தன் பயிற்சியின் பிற்பாடு திருமுழுக்கு பெற விருப்பம் தெரிவித்ததும், ஞானப் பெற்றோரின் வாக்குறுதியுடன், அவர் திருமுழுக்கு பெறுவோரின் பட்டியலில் சேர்க்கப்படுவார். பின் 40 நாட்கள் கடுமையான ஆயத்தத்திற்கு தன்னை உட்படுத்துவார் (இந்த 40 நாட்கள் பிற்காலத்தில் தபசு காலமாக மாற்றம் கண்டது) ஈற்றிலே பாஸ்கா திருவிழிப்பிலே புகுமுக அருளடையாளங்களைப் பெற்று, கிறிஸ்தவராகின்றார். தொடக்கத் திருச்சபையில் பாஸ்கா திருவிழிப்பன்று மாத்திரமே திருமுழுக்கு வழங்கப்பட்டதென்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். இவற்றை ஆயரே வழங்கினார்.
திருமுழுக்கு 6 - 20நூற்றாண்டுகள் வரை
ஏற்கனவே முதியோர் அனைவரும் கிறிஸ்தவர்களாய் இருந்ததால், குழந்தைகள் திருமுழுக்கின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. ஆகவே திருமுழுக்குத் தயாரிப்புக் காலம் குறைக்கப்பட்டது. சடங்குகள் குறைக்கப்பட்டன. குழந்தைகளுக்கு தாமாகவே விசுவாசத்தை அறிக்கையிட முடியாத காரணத்தால் அவர்களின் சார்பாக பெற்றோர், ஞானப்பெற்றோர் பதில் அளித்தனர். மேலும் மத்திய காலத்தில் (7- 12ம் நூற்றாண்டுகள்) பல சடங்குகள் புகுத்தப்பட்டன.
தண்ணீர் ஆசீர்வதித்தல், வெண்ணிற ஆடை அணிவித்தல், எரியும் மெழுகுவர்த்தி கொடுத்தல் போன்ற இக்கால கட்டத்தில் தான் உட்புகுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பாஸ்கா திருவிழிப்பின் போது மாத்திரம் இடம் பெற்ற அருளடையாளக் கொண்டாட்டம் படிப்படியாக மாறி 12ஆம் நூற்றாண்டில் வார நாட்களிலும் கொடுக்கும் பழக்கம் உண்டாயிற்று. 13ஆம் நூற்றாண்டில் இருந்து ஆயர்கள் திருமுழுக்கு கொடுப்பது குறைவடைந்து அவர்கள் உறுதிபூசுதல் மாத்திரம் அளித்தனர்.