(மந்திரமாலை ஒரு குழுவாகச் செபிக்கப் படும்போது, கிருபை தயாபப் பாடல், திருச்சபையின் ஒளி பாடல் போன்றவை பாடப் பட வேண்டும். அவற்றைப் பாடியபடி நடத்தப்படும் அனுதின சிறுபவனியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இதைச் செய்ய முடியாதவர்கள், தனிப்பட்ட முறையில், பின்வரும் முறைப்படி அவற்றைச் சொல்லலாம். அல்லது ஆசீர்வாதத்திற்குப் பிறகு, வழக்கமான அருள்நிறை மந்திரத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். கிருபை தயாபத்துப் பாடலும் திருச்சபை ஒளி என்னும் பாடலும் பரிசுத்த வாரத்தின் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தவிர்க்கப் படுகின்றன.)
கிருபை தயாபப் பாடல்
கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க. எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க. பரதேசிகளாயிருக்கிற நாங்கள், ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயில் நின்று பிரலாபித்தழுது (அனைவரும் முழந்தாளிடவும்.) உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.
இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசு கிறீஸ்து நாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். (அனைவரும் எழுந்திருக்கவும்.) கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னி மரியாயே. (பாஸ்கு காலத்தில்: அல்லேலூயா.)
முதல்: பரிசுத்த கன்னிகையே, உம்மை வாழ்த்தி ஸ்துதிக்க என்னைத் தகுதியுள்ளவனாக்கியருளும். (பாஸ்கு காலத்தில்: அல்லேலூயா.)
பதில்: உமது சத்துருக்களுக்கு எதிராக எனக்கு வல்லமை தந்தருளும். (பாஸ்கு காலத்தில்: அல்லேலூயா.)
பிரார்த்திக்கக் கடவோம்
ஆண்டவராகிய சர்வேசுரா, உமது ஊழியர்களாகிய நாங்கள் எப்போதும் எங்கள் உடலிலும் உள்ளத்திலும் நலமுள்ளவர்களாக இருக்க உம்மை மன்றாடுகின்றோம். எப்பொழுதும் கன்னிகையான முத்திப்பேறு பெற்ற மரியாயுடைய மகிமையுள்ள மன்றாட்டினால் நாங்கள் இப்போதைய துயரத்திலிருந்து விடுவிக்கப் பட்டு, வரவிருக்கும் நித்தியப் பேரின்பத்தை அனுபவிக்கத் தயைகூர்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் வழியாக. ஆமென்.
திருச்சபையின் ஒளி பாடல்
ஓ திருச்சபையின் ஒளியே, சத்தியத்தின் வேதபாரகரே, பொறுமையின் ரோஜாவே, கற்பின் தந்தமே, ஞானத்தின் தண்ணீரை நீர் உதாரமாய்ப் பகிர்ந்தளித்தீர். தேவ வரப்பிரசாதத்தின் தூதரே, முத்திப்பேறு பெற்றவர்களோடு எங்களையும் கூட்டிச் சேர்த்தருளும். (அல்லேலூயா.)
முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,
பதில்: முத்திப் பேறு பெற்ற தந்தை சாமிநாதரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (அல்லேலூயா.)
பிரார்த்திக்கக் கடவோம்
சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா, எங்கள் பாவச் சுமையின் கீழ் நசுக்கப்படுகிற அடியோர்களை உமது ஸ்துதியரும், எங்கள் தந்தையுமாகிய முத்திப்பேறு பெற்ற சாமிநாதரின் மன்றாட்டைக் கேட்டு விடுவித்தருளும்படியாக உம்மை மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் வழியாக.
பதில்: ஆமென்.
முதல்: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.
பதில்: ஆமென்.