பத்துக் கற்பனைகள் - விளக்கம்

"நீ நித்திய ஜீவியத்தில் பிரவேசிக்க விரும்பினால், கற்பனைகளை அனுசரித்துக்கொண்டு வா' (மத்.19:17).

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேதகற்பனைகள் பத்து.

1. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.
2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.
3. சர்வேசுரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.
5. கொலை செய்யாதிருப்பாயாக.
6. மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
7. களவு செய்யாதிருப்பாயாக.
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாதிருப்பாயாக.

இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும். முதலாவது, எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது. இரண்டாவது, தன்னைத்தானே நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.


முதல் கற்பனை

தம்மை ஏக கர்த்தர் என்று சொல்லி, தம்மை விசுவசிக்கவும், நம்பவும், சிநேகிக்கவும், ஆராதிக்கவும் வேண்டுமென்று சர்வேசுரன் முதல் கற்பனையால் நமக்குக் கற்பிக்கிறார்.

விலக்கப்படும் பாவங்கள் : தேவ ஆராதனைக்கு எதிரான விக்கிரக ஆராதனை, அஞ்ஞான சாஸ்திரம், பேய் ஊழியம், தேவத் துரோகம், தேவ ஊழியத்தின் அசட்டைத்தனம், அவநம்பிக்கை, மிதமிஞ்சின நம்பிக்கை முதலியவை. - தேவதூதர்களுக்கும் அர்ச்சிஷ்டவர்களுக்கும் நாம் செலுத்தும் வணக்கம் தேவ ஆராதனை இல்லை. அவர்கள் பரிசுத்தர்களும், சர்வேசுரனுடைய சிநேகிதர்களும் என்ற முறையில் நாம் அவர்களை வணங்கி, அவர்களிடம் வேண்டிக்கொள்கிறோமேயொழிய, அவர்களை சகலத்திற்கும் கர்த்தாக்கள் என்ற முறையில் வணங்குவதில்லை.

திருச்சபையில் படம், சுரூபங்களையும், திருப்பண்டங்களையும் வணங்குவது விக்கிரக ஆராதனை அல்ல. ஏனெனில் அவைகளை வணங்குவது அவைகளால் குறிக்கப்பட்ட அர்ச்சியசிஷ்டவர்கள் முதலானவர்களின் பேரில் வைக்க வேண்டிய பக்தியின் தூண்டுதலே யொழிய, விக்கிரக ஆராதனையல்ல.

இரண்டாம் கற்பனை

விலக்கப்படும் பாவங்கள் : தேவதூஷணமாய்ப் பேசுதல், சாபமிடுதல், பொய்யாணை, பொய்ச் சத்தியம் செய்தல், நியாயமான சத்தியப் பிரமாணிக்கங்களையும், பொருத்தனை களையும் செலுத்தாமல் இருத்தல்.

மூன்றாம் கற்பனை

தேவ ஆராதனை செய்வதற்குக் குறிக்கப்பட்ட நாட்களைப் பரிசுத்தப்படுத்தவும், அந்த நாட்களில் வேலை செய்யாமல் இருக்கவும் வேண்டுமென மூன்றாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளும், கடன் திருநாட்களும் அவருடைய திருநாட்கள் ஆகும். இந்தத் திருநாட்களை அனுசரியாத கிறீஸ்தவர்களின் ஆத்துமத்திற்குப் பாவதோஷம் உண்டாவதும், அவர்களுடைய குடும்பங்களில் நிர்ப்பாக்கியமும் வறுமையும் உண்டாவதும் அவர்களுக்கு வரும் கேடுகளாகும்.

நான்காம் கற்பனை

தாய் தகப்பனுக்கு சங்கை, சிநேகம், கீழ்ப்படிதல், அவசியமான சமயத்திற்கு உதவி இவை முதலிய கடமைகளைச் செலுத்த இக்கற்பனை மூலம் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிறார்.

பிதா, மாதா என்பதால் பெற்ற தாய் தகப்பன் அல்லாமல், ஞான அதிகாரிகளும், உலக அதிகாரிகளும் எஜமானர்களாகிய சிரேஷ்டர்கள் யாவரும் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் ஆகாத காரியம் செய்யக் கற்பித்தால், நாம் கட்டாயம் செய்யக்கூடாது. ஏனெனில் சர்வேசுரனது கற்பனைக்கு விரோதமான காரியங்களைக் கற்பிக்க அவர்களுக்கு அதிகாரமில்லை.

தங்கள் பிள்ளைகளுக்கு வேண்டிய உணவு, உடை கொடுத்துக் காத்து அவர்களுக்குத் தங்கள் நிலைமைக்குத் தக்க உலகியல் கல்வியைப் படிப்பிப்பதும், வேத சத்தியங்களைப் படிப்பித்து, தேவ பயத்தில் அவர்களை வளர்ப்பதும், அவர்களுடைய குற்றங் குறைகளை நியாயமாயும், அன்புடனும் தண்டித்துத் திருத்துவதும், எந்தக் காரியத்திலும் அவர்களுக்கு நல்ல முன்மாதிரிகை காண்பித்து நடப்பதும் பிள்ளைகள் மட்டில் பெற்றோருக்குண்டான கடமைகளாகும்.

முதலாளிகளுக்கும், வீட்டெஜமான்களுக்கும் தங்கள் தொழிலாளர், ஊழியர் மட்டிலுள்ள கடமைகள்: 1. இவர்களுக்கு நியாயமாய்ப் போதுமான ஊதியத்தைத் தருதல்; 2. கிறீஸ்தவக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதில் தடை யொன்றும் செய்யாதிருப்பதோடு, போதுமான நேரமும் வசதியும் அளித்து ஊக்குவித்தல்; ஞாயிறு முதலிய கடன் திரு நாட்களில் இதைப் பற்றி விசேஷ கவனம் செலுத்துதல் ஆகியவை ஆகும்.

ஐந்தாம் கற்பனை

தன்னையாவது (தற்கொலை), பிறரையாவது கொலை செய்வதையும், பிறருடைய ஆத்தும் சரீரத்துக்கு எவ்வித தீங்கு செய்வதையும் இந்தக் கற்பனையால் சர்வேசுரன் விலக்குகிறார்.

பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது என்பதற்கு, மனிதனை அநியாயமாய் அடித்துக் காயப்படுத்தவும், சண்டை போடவும், பகை, பழி, வர்மம் வைக்கவும், கோபித்துத் திட்டவும் கூடாது என்பதாம்.

துர்மாதிரிகை காண்பித்து, அல்லது துர்ப்புத்தி சொல்லி பிறர் பாவத்தில் விழும்படி காரணமாயிருப்பது ஆத்தும் விஷயத்தில் பிறருக்குத் தீங்கு செய்வதாகும்.

பிறர் செய்த குற்றத்தை மன்னிக்கவும், தமது பகையாளிகளோடு சமாதானமாய்ப் போகவும், கூடிய வரையில் எல்லோருக்கும் உதவி தர்மங்களைச் செய்யவும் வேண்டுமென்று சர்வேசுரன் இக்கற்பனையால் கற்பிக்கிறார்.

ஆறாம், ஒன்பதாம் கற்பனைகள்

மோக நினைவு, ஆசை, கெட்ட பேச்சு, சிற்றின்பப் பாட்டு, தகாத பார்வை, கெட்ட செயல், விபச்சாரக் குற்றம் முதலியவைகளை இவற்றின் மூலம் கடவுள் விலக்குகிறார்.

நமது மனதிலும் சரீரத்திலும் நாம் கற்புள்ளவர்களாயும், பரிசுத்தமுள்ளவர்களாயும் இருக்கவும், மோக பாவத்துக்கு ஏதுவான சமயங்களை விலக்கவும் கற்பிக்கிறார்.

தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ப கற்பை அனுசரிப்பது என்பது என்னவெனில், இல்லறவாசிகள் தங்கள் மனைவி கணவனைத் தவிர வேறு யாருடனும் எந்த வித கெட்ட தொடர்பும் கொள்ளா திருப்பதும், தேவ ஊழியர்கள் தங்கள் மனதாலும், சரீரத்தாலும் கன்னிமை (பரிசுத்த கற்பு) வார்த்தைப்பாட்டிற்குப் பிரமாணிக்கமாயிருந்து, கடவுளுக்கு உண்மையாக ஊழியம் செய்வதும் ஆகும்.

நாம் மோக பாவத்திற்கு உள்ளாகாதபடியும், சோதனை சமயத்தில் அதை விலக்கும்படியும் ஜெபம் செய்யவும், பரிசுத்த தேவமாதாவின் பேரில் பக்தியாயிருக்கவும், அடிக்கடி பாவசங்கீர்த் தனம் செய்யவும், நன்மை வாங்கவும் வேண்டும்.

ஏழாம் கற்பனை

விலக்கப்படும் பாவங்கள்: பிறர் பொருட்களைத் திருடுதல், அவைகளை அநியாயமாய் வைத்திருத்தல், திருட்டுக்கு உதவி செய்தல், பிறருக்கு அநியாயமாய் நஷ்டம் வருவித்தல்.

திருடின பொருட்களை உடையவனுக்கு உத்தரிக்கவும், அநீதமாய் வருவித்த நஷ்டத்தைப் பரிகரிக்கவும், வாங்கின கடனைத் திரும்பக் கொடுக்கவும் இக்கற்பனையால் கடவுள் கற்பிக்கிறார். மேலும் முக்கியமாக இலஞ்சம் வாங்கும் பழக்கமும் இக்கற்பனைக்கு எதிரான பாவமாகும்.

திருட்டு முதலிய அநியாயங்களைச் செய்ய ஆசை வைக்கவும், அதற்கு வழி தேடவும் , கூடாதென்று அவர் விலக்குகிறார்.

எட்டாம் கற்பனை

பொய்களையும், பொய் சாட்சிகளையும், பிறருடைய பேரைக் கெடுக்கத்தக்க கோள், குண்டணி, புறணிகளையும், பிறர்பேரில் கெடுதியான வீண் எண்ணங்களையும் தீர்மானங் களையும் இக்கற்பனையால் சர்வேசுரன் விலக்குகிறார்.