சேசுநாதர் உரத்த சத்தமாக இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்று அர்ச். மத்தேயு எழுதுகிறார். அவர் ஏன் இந்த வார்த்தைகளைக் கூறினார்? தமது தெய்வீக வல்லமையை நமக்குக் காட்டும்படியாக அவர் இவ்வாறு கூக்குரலிட்டார், ஏனெனில் அவர் மரிக்கும் தருவாயில் இருந்தாலும், மரிக்கிற மனிதர்களின் அதீத சோர்வின் காரணமாக அவர்களுக்கு அசாத்தியமாக இருந்திருக்கக் கூடிய விதத்தில் இவ்வாறு உரத்த சத்தமாகக் கூப்பிட அவரால் முடிந்தது என்று யூத்திமியுஸ் கூறுகிறார். மேலும் தாம் எத்தகைய கடும் அவஸ்தையில் தாம் மரிக்கிறார் என்பதை நமக்குக் காட்டும் படியாகவும் சேசுநாதர் இவ்வாறு கூக்குரலிட்டார். சேசுநாதர் கடவுளும் மனிதனுமாக இருந்ததால், தமது தெய்வீகத்தின் வல்லமையைக் கொண்டு, தமது வாதைகளின் கடும் வேதனையை அவர் குறைத்திருக்கக் கூடும் என்று ஒருவேளை சொல்லப் பட்டிருக்கலாம்; இந்த சிந்தனையைத் தடுப்பதற்காகவே, தமது மரணம் வேறு எந்த மனிதனுடைய மரணத்தையும் விட அதிகக் கசப்பாக இருந்தது என்று இந்த வார்த்தைகளில் அறிக்கையிடுவது பொருத்தமானது என்று அவர் கருதினார். மேலும் வேதசாட்சிகள் தங்கள் வாதைகளில் தெய்வீக இனிமையால் தேற்றப்பட்டிருக்க, வேதசாட்சிகளின் அரசராகிய அவர் ஒவ்வொரு ஆறுதலும் விலக்கப்பட்டவராக மரிப்பதைத் தேர்ந்து கொண்டார், இதன் மூலம் மனிதர்களின் எல்லாப் பாவங்களாலும் மூண்டெழுந்த தேவ நீதியின் மகா கடுமையை அவர் தணித்தார் என்றும் இந்த வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் அவர் காட்டுகிறார். ஆகவேதான் சேசுநாதர் தமது பிதாவை "பிதாவே!' என்று அழைக்காமல் "சர்வேசுரா!' என்று அழைத்தார், ஏனெனில் அவர் அச்சமயத்தில் அவரை ஒரு நடுவராகவே மதித்தார். ஒரு மகன் என்ற முறையில் அவரை ஒரு தந்தையாக அவர் பார்க்கவில்லை.
ஆண்டவரின் இந்தக் கூக்குரல் ஒரு புலம்பல் அல்ல, மாறாக அது ஒரு வேத சத்தியம், ஏனெனில் தேவ சுதன் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதாகத் தம் மீது சுமந்து கொண்ட பொறுப்பின் காரணமாக, அவர் ஆறுதலின்றி மரிக்கும்படியாக, பிதாவானவர் தமது நேச மகனைக் கைவிட்டு விடும்படி செய்த பாவத்தின் தீமை எவ்வளவு பெரியது என்று இவ்விதமாக நமக்குக் காட்ட அவர் ஆசை கொண்டார் என்று அர்ச். சிங்கராயர் எழுதுகிறார். அதே சமயம், சேசுநாதர் தெய்வீகத்தால் கைவிடப்படவில்லை, அவரது ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்துமம் தான் படைக்கப்பட்ட முதல் கணத்திலிருந்தே அதற்கு வழங்கப்பட்டு வந்த மகிமையையும் அழக்கவில்லை, மாறாக, கடவுள் வழக்கமாகத் தமது பிரமாணிக்கமுள்ள ஊழியர்களின் துன்பங்களில் அவர்களைத் தேற்றும்படி அவர்களுக்குத் தரும் உணரக்கூடிய நிவாரணம் அனைத்தும் அவரிடமிருந்து விலக்கப்பட்டது. நாம் தகுதி பெற்றிருந்த இருள், பயம், கசப்பு, கடும் வேதனைகள் ஆகியவற்றில் அவர் அமிழ்த்தப்பட்டார். தெய்வீகப் பிரசன்னம் தன்னோடு இருப்பதை உணரக்கூடிய தன்மையிலிருந்து விலக்கப்படுவதும் ஜெத்சமெனித் தோட்டத்தில் சேசுநாதரால் அனுபவிக்கப்பட்டது; ஆனால் சிலுவையின் மீது அவர் அனுபவித்தது அதிகப் பெரியதும், அதிகக் கசப்பானதுமாக இருந்தது. நித்தியப் பிதாவே, மாசற்றவரும், பூரண கீழ்ப்படிதல் உள்ளவருமாகிய உமது திருச்சுதனை இவ்வளவு கசப்பான மரணத்தைக் கொண்டு நீர் தண்டிக்கும் அளவுக்கு அவர் உம்மை எந்த விதத்தில் நோகச் செய்து விட்டார்? இந்தச் சிலுவையில் தொங்கும் நிலையில் அவரைப் பாரும். அவருடைய திருச்சிரசு முட்களால் வாதிக்கப்படுகிறது, அவர் மூன்று இரும்பு ஆணிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறார், தமது சொந்தக் காயங்களால் தாங்கப் பட்டிருக்கிறார். அவருடைய சொந்த சீடர்கள் உட்பட அனைவருமே அவரைக் கைவிட்டு விட்டார்கள். எல்லோருமே சிலுவையின் மீதுள்ள அவரை ஏளனம் செய்கிறார்கள், அவருக்கு எதிராகத் தேவதூஷணம் பேசுகிறார்கள். இவ்வளவு அதிகமாக அவர் நேசித்திருக்கிற தேவரீர் ஏன் அவரைக் கைவிட்டு விட்டீர்? சேசுநாதர் மனிதர்கள் அனைவரிலும் மிகப் பரிசுத்தமானவர், அவரே பரிசுத்த தனம் என்ற போதிலும், அகில உலகின் பாவங்களை அவர் தம்மீது சுமந்து கொண்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரம் செய்வதற்காக அவர் அவற்றைத் தம் மீது சுமந்து கொண்டதால், அவரே எல்லாப் பாவிகளிலும் பெரிய பாவியாகத் தோன்றினார். இவ்வாறு அனைத்திலும் தம்மைக் குற்றமுள்ளவராக அவர் ஆக்கிக் கொண்டதால், அனைத்திற்கும் உரிய விலையைச் செலுத்தும்படி அவர் தம்மையே ஒப்புக்கொடுத்தார். நரகத்தில் நித்திய அவநம்பிக்கைக்கு என்றென்றும் கையளிக்கப்பட்டு விட நாம் தகுதி பெற்றிருந்தோம் என்பதால், நித்திய மரணத்தினின்று நம்மை விடுவிக்கும்படி ஒவ்வொரு நிவாரணமும் விலக்கப்பட்ட ஒரு மரணத்திற்குத் தம்மையே கையளிப்பதை அவர் தேர்ந்து கொண்டார்.
அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தைப் பற்றிய தனது விளக்கவுரையில் கால்வின் தேவதூஷணமான முறையில், சேசுநாதர் தமது பிதாவை சாந்தப்படுத்தும்படியாக, கடவுள் பாவிகளுக்கு எதிராக உணரும் கடுஞ்சினம் முழுவதையும் அனுபவித்தார் என்றும், சபிக்கப்பட்டவர்களின் எல்லா வேதனைகளையும், குறிப்பாக அவநம்பிக்கையையும் உணர்ந்தார் என்றும் வலியுறுத்துகிறான். ஓ தேவதூஷணமானதும், அதிர்ச்சி தருவதுமான சிந்தனையே! அவநம்பிக்கை போன்ற மிகப் பெரிதான ஒரு பாவத்தைக் கட்டிக் கொள்வதன் மூலம் அவர் நம் பாவங்களுக்கு எப்படிப் பரிகாரம் செய்ய முடியும்? கால்வின் கற்பனை செய்கிற இந்த அவநம்பிக்கை, ""பிதாவே, உமது கரங்களில் என் ஆத்துமத்தை ஒப்படைக்கிறேன்'' (லூக்.23:46) என்ற சேசுவின் வார்த்தைகளோடு எப்படிப் பொருந்த முடியும்? உண்மை என்னவெனில், அர்ச். ஜெரோமும் மற்றவர்களும் இதை விளக்குவது போல, நம் இரட்சகர் அவநம்பிக்கையை அல்ல, மாறாக ஆறுதலற்ற ஒரு மரணத்தில் தாம் அனுபவித்த கசப்பைக் காட்டும்படியாகவே இந்தப் புலம்பலை வெளியிட்டார். மேலும் தாம் கடவுளால் நேசிக்கப்படுகிறார் என்ற ஓர் அறிவு மட்டுமே சேசுநாதரில் அவநம்பிக்கையை விளைவித்திருக்க முடியும்; ஆனால் தமது திருச்சித்தத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்படி தம்மையே ஒப்புக் கொடுத்தவரான தமது திருமகனைக் கடவுள் எப்படி வெறுக்க முடியும்? இந்தக் கீழ்ப்படிதலுக்குப் பிரதிபலனாகத்தான் பிதாவானவர் அவரைக் கண்ணோக்கி, மனுக்குலத்தின் இரட்சணியத்தை அவருக்குத் தந்தருளினார். இதைப் பற்றியே அப்போஸ்தலரும், ""இவர் தம்முடைய மாம்ச ஐக்கிய நாட்களில் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி உரத்த சத்தத்தோடும், கண்ணீர்களோடும் விண்ணப்பங்களையும், மன்றாட்டுகளையும் ஒப்புக்கொடுத்தபோது, தம்முடைய பயபக்தியைப் பற்றிக் கேட்டருளப்பட்டார்'' என்று எழுதுகிறார் (எபி.5:7).
மேலும், சேசுநாதர் இவ்வாறு கைவிடப்படுதல் அவருடைய திருப்பாடுகள் முழுவதிலும் அதிக அச்சத்திற்குரிய துன்பமாக இருந்தது. ஏனெனில், எந்த முறைப்பாடுமின்றி எத்தனையோ கொடிய கசப்பான வேதனைகளை அனுபவித்த பிறகு, இந்தத் துன்பத்தைப் பற்றி அவர் புலம்பினார் என்றும், உரத்த சத்தமாகவும், அர்ச். சின்னப்பர் சொல்கிறபடி, ஏராளமான கண்ணீரோடும், ஜெபங்களோடும் அவர் தம் மன்றாட்டுக்களை ஒப்புக்கொடுத்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம். இருந்தும் நமக்குத் தேவ இரக்கத்தைப் பெற்றுத் தருவதற்காக அவர் எவ்வளவு அதிகமாகத் துன்பப்பட்டார் என்று நமக்குக் கற்பிப்பதற்காகவும் இந்தக் கண்ணீர்களும் ஜெபங்களும் பொழியப்பட்டன, அதே சமயத்தில் குற்றமுள்ள ஆன்மா கடவுளிடமிருந்து விரட்டப்படுவதும், ""நமது இல்லத்தில் நின்று அவர்களை அகற்றுவோம்... இனி அவர்களை நேசிக்க மாட்டோம்'' (ஓசே.9:15) என்ற தெய்வீக அச்சுறுத்தலின் படி, என்றென்றைக்குமாக அவரது அன்பிலிருந்து விலக்கப்படுவதும் எவ்வளவு அச்சத்திற்குரிய தண்டனையாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளச் செய்யவும் இவை நிகழ்ந்தன.
சேசுநாதர் தமது மரணத்தின் காட்சியைணக் கண்டு கலக்கமுற்றார் என்று அர்ச். அகுஸ்தினாரும் சொல்கிறார். ஆனாலும், தமது ஊழியர்கள் தங்கள் சொந்த மரண நேரத்தில் கலக்கமுற்ற நிலையில் தாங்கள் இருப்பதைக் கண்டால், அவர்கள் தங்களை சபிக்கப்பட்டு விட்டவர்கள் என்று கருதக் கூடாது, அல்லது, அவநம்பிக்கைக்குத் தங்களை அவர்கள் கையளித்து விடக் கூடாது, ஏனெனில் மரணத்தின் காட்சியில் அவரே கூட கலக்கமுற்றார் என்பதைக் கண்டு அவர்கள் தைரியம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, மரண நேரத்தில் அவர்களைத் தேற்றுவதற்காக இது இவ்வாறு நிகழ்ந்தது என்றும் அவர் கூறுகிறார்.
ஆகவே, நமக்குரியவையாயிருந்த வேதனைகளைத் தம் மீது ஏற்றுக்கொள்ளவும், அதன் மூலம் நித்திய மரணத்திலிருந்து நம்மை விடுவிக்கவும் சித்தமாயிருந்ததற்காக நம் இரட்சகரின் நன்மைத் தனத்திற்கு நாம் நன்றி கூறுவோமாக. மேலும் இப்போது முதல், அவருக்குரியதாக இல்லாத நமது ஒவ்வொரு நாட்டத்தையும் நம் இருதயங்களிலிருந்து அகற்றுவதன் மூலம், நம்மை விடுவித்த இவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க நாம் உழைப்போமாக. ஆத்துமத்தில் ஆறுதலற்றவர்களாகவும், தேவ பிரசன்னத்தின் உணர்வு விலக்கப்பட்டவர்களாகவும் நாம் நம்மைக் காணும்போது, நமது இந்த ஆறுதலற்ற நிலையைக் கிறீஸ்துநாதர் தமது மரணத்தில் அனுபவித்த ஆறுதலற்ற நிலையோடு ஒன்றிப்போமாக. சில சமயங்களில் சேசுநாதர் தாம் மிக அதிகமாக நேசிக்கும் ஆத்துமங்களிலிருந்து தம்மை மறைத்துக் கொள்கிறார். ஆனால் அவர் உண்மையில் அவர்களது இருதயங்களை விட்டு விலகுவதில்லை. தமது உள்ளரங்க வரப்பிரசாதத்தைக் கொண்டு அவர் அவர்களுக்கு உதவி செய்கிறார். இத்தகைய ஒரு கைவிடப் படுதலில், அவரே தமது தெய்வீகப் பிதாவிடம்: ""பிதாவே, கூடுமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலக் கடவது'' என்று கூறியது போல நாம் கூறினால், அது அவரை மனநோகச் செய்வதில்லை. ஆனால் அதே சமயத்தில், ""ஆயினும் என் சித்தப்படி அல்ல, உமது சித்தப்படியே ஆகக்கடவது'' என்றும் நாம் சொல்வோமாக (மத்.26:39). இந்த ஆறுதலற்ற நிலை தொடர்ந்து நீடிக்குமானால், அவர் மூன்று மணி நேரமாக ஒலிவத் தோப்பில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்த தேவ சித்தத்திற்குப் பணிந்திருப்பது பற்றிய ஜெபங்களை நாமும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். சேசுநாதர் தம்மைக் காட்டும்போது எப்படி நம் அன்புக்குத் தகுதியுள்ளவராக இருக்கிறாரோ, அப்படியே அவர் தம்மை ஒளித்துக் கொள்ளும்போதும் இருக்கிறார் என்று அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கூறுகிறார். மேலும் நரகத்திற்குத் தகுதியுள்ளவனாக இருப்பவனும், அதிலிருந்து தான் விடுபட்டிருப்பதைக் காண்பவனுமாகிய மனிதன், ""எல்லாக் காலங்களிலும் நான் ஆண்டவரை வாழ்த்திப் போற்றுவேன்'' (சங்.33:2) என்று மட்டும் செல்ல வேண்டும். ஆண்டவரே, ஆறுதல்களுக்கு நான் தகுதியற்றவன்; உம் வரப்பிரசாதத்தின் வழியாக உம்மை நான் நேசிக்கும் வரத்தை எனக்குத் தந்தருளும். நீர் விரும்பும் வரை ஆறுதலற்ற, கைவிடப்பட்ட நிலையில் வாழ்வதில் நான் திருப்தியடைகிறேன்! சபிக்கப்பட்டவர்கள் தங்கள் வேதனையில் தேவ சித்தத்தோடு தங்களை இணைத்துக் கொள்வது சாத்தியமானால், நரகம் கூட அவர்களுக்கு இனி நரகமாக இராது! ஆறுதல்களுக்கு நான் தகுதியற்றவன்; உம் வரப்பிரசாதத்தின் வழியாக உம்மை நான் நேசிக்கும் வரத்தை எனக்குத் தந்தருளும். நீர் விரும்பும் வரை ஆறுதலற்ற, கைவிடப்பட்ட நிலையில் வாழ்வதில் நான் திருப்தியடைகிறேன்! சபிக்கப்பட்டவர்கள் தங்கள் வேதனையில் தேவ சித்தத்தோடு தங்களை இணைத்துக் கொள்வது சாத்தியமானால், நரகம் கூட அவர்களுக்கு இனி நரகமாக இராது!
ஆனால் ஆண்டவரே! நீர் எனக்கு உதவி செய்வதை விட்டு அகலாதேயும்; என்னை ஆதரிக்கக் கிருபையோடு என்னைக் கண்ணோக்கியருளும் (சங்.21:19). ஓ என் சேசுவே, உமது ஆறுதலற்ற மரணத்தின் பேறுபலன்களின் வழியாக, என் மரண நேரத்தில், நரகத்தோடு நான் செய்ய வேண்டிய அந்த மாபெரும் போராட்டத்தில் உமது உதவியை என்னிடமிருந்து விலக்கிக் கொள்ளாதேயும். அந்த நேரத்தில் உலகக் காரியங்கள் அனைத்தும் என்னைக் கைவிட்டிருக்கும், அவை எனக்கு உதவ இயலாதவையாக இருக்கும்; அச்சமயத்தில் எனக்காக மரித்தவரும், என் வாழ்வின் உச்ச நிலையில் எனக்கு உதவக் கூடிய ஒரே ஒருவருமாகிய தேவரீர் என்னைக் கைவிடாதிருப்பீராக. நீர் கைவிடப்பட்டபோது அனுபவித்த வேதனைகளின் பேறுபலன்களின் வழியாக இதைச் செய்தருளும். அதன் வழியாகவே, எங்கள் பாவங்களின் வழியாக நாங்கள் தகுதி பெற்றுள்ளபடி தேவ வரப்பிரசாதத்தால் நாங்கள் கைவிடப்படாதிருக்கும் வரத்தை நீர் எங்களுக்காக சம்பாதித்திருக்கிறீர்.