1) அன்னை மரியாளை ஆராதனை செய்கிறீர்களே! இது பாவம் அல்லவா?
அன்னை மரியாளுக்கு செலுத்துகிறது வணக்கம் மட்டும் தான். கடவுளை மட்டும்தான் ஆராதிக்க வேண்டும் (மத்.4:10 ). திருச்சபையின் சட்டமும் (எண்.1125) அன்னை மரியாளை ஆராதிக்ககூடாது என்றுதான் கூறுகிறது .
கடவுளுக்கு ஆராதனையும், புனிதர்களுக்கு வணக்கமும், அன்னை மரியாளுக்கு மேலான வணக்கமும் செலுத்தவேண்டும் என்பதே திருச்சபையின் போதனை.
அன்னை மரியாளுக்குரிய வணக்கத்தை செலுத்தாமல் இருக்கிறவர்கள், வணக்கம் செலுத்துவதால் கிடைக்கும் அருளை இழக்கிறார்கள். ஏனென்றால் மரியாள் நமக்குத் தாயாக இருக்கும்படி இயேசுவால் கொடுக்கப் பட்டிருக்கிறார்கள் (யோவா.19 :26 ). "தாய் தந்தையரைப் போற்று; தாய்தந்தையரை தூற்றுகிறவன் செத்தொழியட்டும் " என்று கடவுள் கூறியிருக்கிறார்.
2) இயேசுவே மரியாளை "பெண்ணே" என்றுதானே அழைத்தார்?
33 வருடம் இவ்வுலகில் வாழ்ந்த இயேசு, அன்னை மரியாளை "அம்மா” என்று அழைத்தவர், நற்செய்தியில் இரண்டு முக்கிய கட்டங்களில் மட்டும் "பெண்ணே" என்றுஅழைக்கிறார் (யோவா 2:4, 19:26)
"பெண்ணே" என்று அழைத்ததன் மூலம்
* "தொடக்க நூலில் (தொநூ 3:15) குறிப்பிட்டபெண் நீதானம்மா " என்று அறிவுறுத்துகிறார்.
* "மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவளே " என்ற பொருளில் கூறுகிறார்
* "பெண்ணே "எனும் பொழுது யூதப்பண்பாட்டின்படி மாதா தனி நபர் அல்ல, ஒருகுலத்தின் பிரதிநிதி என இயேசு மொழிகிறார்.
3) அன்னை மரியாள் பரலோகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு என்னஆதாரம்?
அன்னை மரியாள் பரலோகத்தில் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம்?. இயேசுவை விசுவசித்த கள்வனே பரலோகம் சென்றான் என்றால்இயேசுவை தன் உதிரத்தில் தாங்கிய மாதா பரலோகம் சென்றிருக்க மாட்டார்களா? உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவர் ஒருபோதும் சாகார் (யோவா11:26). மரியாள் விசுவசித்து பேறுபெற்றவளாக இருந்தார்கள். ஆகவே இயேசுவோடு பரலோகத்தில் இருக்கிறார்கள்.
4) அன்னை ஆத்துமா சரீரத்தோடு விண்ணுக்கு எடுத்து கொள்ளப்பட்டதை மறுக்கிறார்களே?
ஏனோக்கும் (தொநூ-5:24) எலியாசும் (2அர-2:11) எடுத்துக் கொள்ளப்பட்டதை நம்பும் போது, கடவுளின் தாய்க்கு செய்யப்பட்டதை ஏன் மறுக்க வேண்டும். புனிதத்தின் சிகரமான அன்னை மரியாள் விண்ணகம் செல்லாவிட்டால் வேறு யார் தான் விண்ணகம் சென்றிருக்க முடியும்?
5) இயேசுவுக்கு நான்கு சகோதரர்கள் இருந்ததாக விவிலியத்தில் (மாற்-6:3) உள்ளதே?
தமிழ் மொழியை போலவே, இயேசு பேசிய அரமேய்க் மொழியிலும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பதற்கு வார்த்தையே கிடையாது. அவர்கள் "சகோதரர்கள்" என்ற அழைக்கப்பட்டார்கள். மூன்று நான்கு தலைமுறை உறவுக்குள் சகோதர உறவு கொண்டவர்களை குறிக்க "அக்கீம் " என்ற ஒரே வார்த்தையே பயன்படுத்தப்பட்டது. லாபான் தன் மருமகன் யாக்கோபை "என் சகோதரன்" என்கிறார் (தொநூ-29:15 ).
இயேசுவின் சகோதரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள யாக்கோபு, யோசேப்பு என்பவர்களின் தாயின் பெயரும் மரியாள் தான். (மத்-27:56,மாற்-16:40,லூக் 24:10). இந்த மரியாள், இயேசுவின் தாய் மரியாளின் சகோதரி என்று விவிலியம் சொல்கிறது. (யோவா-19:25) இரண்டு தாய்மாரின் பெயரும் மரியாள் என்பதால் இவர்களும்கூட உடன்பிறந்தவர்கள் அல்ல என்று தெரிகிறது.
6) இயேசுவின் சகோதரர்கள் இயேசுவை தேடி வந்ததாக விவிலியத்தில் இருக்கிறதே?
அவர்கள் இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் அல்ல.
உண்மையிலேயே இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் என்றால், உயிரோடு இருக்கும் போது பார்க்க வந்தவர்கள், இயேசு சிலுவையில் மரிக்கும் வேளையில் பார்க்க வராமல் இருந்திருப்பார்களா? உடன் பிறந்த சகோதரர்கள் இருந்திருப்பார்களேயானால், யோவானிடம் இயேசு தம் தாயை ஒப்படைத்திருப்பாரா?(யோவா-19:26)
7) "தலைப்பேறான மகன்" என்று சொல்லும் போது வேறு பிள்ளைகள் இருந்தார்கள் என்று தானே அர்த்தம்?
* "தலைச்சன் மகனை கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பாயாக"(விப-13:13) என்ற வேதவாக்கின்படி, பிறகு பிள்ளைகள் பிறந்தாலும் பிறக்காவிட்டாலும் அது தலைச்சன் பிள்ளைதானே?
*"தலைப் பேறானவர்" என்பது இயேசுவுக்கே உரித்தான பெயர்களுள் ஒன்று (கொலோ-1:15,18, எபி-1:6).
8) (மத்-1:18,25)ன்படி இயேசுவின் பிறப்பிற்குப் பின் மரியாள் கூடி வாழ்ந்தாள் என்று தானே பொருள்? இதை நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்?
(மத்-1:18)இன்படி "அவர்கள் கூடி வாழுமுன்" என்ற வார்த்தையிலிருந்து பிறகு கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது.
"நாம் உம் பகைவரை உமக்கு கால்மனையாக்கும் வரை நீர் எம் வலப்பக்கத்தில் அமரும்"(திபா-110:1) என்ற வசனத்தின்படி, பகைவர்கள் இயேசுவின் கால்மனை ஆக்கப்பட்ட பிறகு, பிதாவின் வலப்பக்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்றா அர்த்தம்?
(தொநூ-8:7)இன்படி பூமியில் வெள்ளம் வற்றும் வரை திரும்பவே இல்லை என்றால், வற்றியபின் திரும்பியது என்று பொருள் அல்ல.
(மத்-28:20) இன்படி "உலகம் முடியும் வரை உங்களோடு இருக்கிறேன்" என்று கூறியதில் இருந்து உலகம் முடிந்தபின் நம்மைவிட்டு நீங்குவார் என்பதா கருத்து?
9) தம் சீடர்கள் பக்கம் கைகாட்டி "இவர்களே ஏன் தாயும் சகோதரரும்" என்று கூறும் போது இயேசு தன் தாயை அவமதிக்கவில்லையா?
இயேசு தம் தாயை அவமதிப்பது போலத் தோன்றலாம். ஆனால்,உண்மையில் இயேசு தம் தாயை இரெட்டிப்பு மடங்கு மதிப்புற்குள்ளாக்கினார். திருத்தூதர்களிடம் உலகப்பற்று இருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னைப் பின்பற்றி வந்த திருத்தூதரை இயேசு இந்த அளவுக்கு பாராட்டினார் என்றால், இறையரசை முன்னிட்டு தன்னை வெறுமையாக்கிய (மத் -19:12, லுக் -1:38 ) மரியாள் எத்துணை மேலானவள்!
10) சிலை வழிபாடு கூடாது என்று சொல்லியிருக்க நீங்கள் மீறுவது ஏன்?
கத்தோலிக்கர்கள் சிலைகளை வணங்கவில்லை. கத்தோலிக்க தேவாலயங்களில் இருப்பது சிலை அல்ல சொரூபம்தான் . சொரூபம் என்றால் கற்பனை தெய்வங்கள் அல்ல.சொருபங்கள் இயேசு, மாதா, புனிதர்களை நினைவுபடுத்துகிற சின்னங்கள். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு சொரூபங்களே வசனம். எடுத்துக்காட்டாக நாம் காலையில் செய்திதாளில் எத்தனையோ பேர் பலி என்று வாசிக்கிறோம். ஆனால், அதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை. அதே விபத்தை நாம் நேரில் பார்த்தால் நாம் அதை நினைத்து கொண்டே இருப்போம். அதுபோல நாம் இயேசுவை, மாதாவை, புனிதர்களை, இயேசுவின் பாடுகளை நேரில் பார்க்க முடியாது. அதனாலே அதை எடுத்துக்காட்டும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் சொரூபங்கள் இடம் பெற்றுள்ளன. அதனால், கத்தோலிக்கர்கள் பத்து கட்டளையை மீறுவது இல்லை.
11) சொருபங்கள் மண்ணால் செய்யப்பட்டவைதானே, முத்தமிடலாமா?
உங்கள் அருமையான தாயின்,தந்தையின் படத்தை முத்தம் செய்வது அந்த அட்டையின் மேல் உள்ள அன்பினாலா? இல்லை. உங்கள் தாய், தந்தை மீது உள்ள அன்பு தான் அதற்கு காரணம். அதுபோல இயேசுவை, மாதாவை,புனிதர்களை நினைத்து அவர்களது நினைவு சின்னமான சொருபத்தை முத்தம் செய்கிறவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
12) சொரூபங்களுக்கு மாலையிடுவதோ காணிக்கை செலுத்துவது அருவருப்பானது அல்லவா?
இல்லை. சொரூபங்களுக்கு மாலையிடுவது, காணிக்கை செலுத்துவது அருவருப்பானது அல்ல. கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாசத்தையும், அன்பையும் காட்டுவதற்கு இவ்வாறு செய்கிறார்கள்.
13) ஆதி திருச்சபைதான் கத்தோலிக்கத் திருச்சபை என்று எப்படி சொல்லலாம்?
வரலாற்று நூலைப் புரட்டிப்பார்த்தால் இதற்குப் போதுமான காரணத்தை அங்கு காணலாம். 'கத்தோலிக்க' என்றால் 'அகில உலக' அல்லது 'அனைத்தையும் உள்ளடக்கிய' என்பது பொருள். எந்தெந்த காலங்களில், எந்தெந்த சபைகள், எந்தெந்த சூழ்நிலையில், தொடக்க காலத் திருச்சபையிலிருந்து பிரித்து சென்றன என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு. எனவே, பிரிந்துபோன சபையினர், இயேசுவின் மறையுடலாம் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து விசுவாச அறிக்கையிட வேண்டும் (எபே-3:16, யூதா-19).