இயேசு பேசுகிறார்.
எனது பிரிய நண்பனே, வாரும், நான் உனக்காக காத்திருக்கின்றேன். என்னுடன் சிறிது நேரத்தைச் செலவிட மனமிசைந்திருக்கின்றாயே, இது எனது திரு இருதயத்திற்கு எவ்வளவோ ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்த மணித்துளிகளை என்னுடன் செலவிட தயாராய் இருக்கின்றாயே. உனது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மேலாக நான் உனக்குச் சம்பாவனை அருளுவேன். துன்புறுகின்ற எனது மக்களை என் இதயம் நாடுகின்றது. உங்கள் துயரங்களை நீக்கிவிடுவதற்காகவே இங்கு நானிருக்கின்றேன். பயப்படாதீர்கள், உங்கள் துன்ப துயரங்களை எனக்கு எடுத்துரையுங்கள். முடிவில்லாத புனிதமான எனதன்பை உங்களுக்குக் காண்பிக்க விடுங்கள். எனதன்பு மாத்திரமே உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும். எனதன்புக்குரியவனே, சமாதானமாய் இரு. நான் ஒருபொழுதும் உன்னைக் கைவிட மாட்டேன். சில வேளைகளில் உங்கள் ஜெபங்களுக்கு நான் பாராமுகமாயிருக்கிறேன் என்றும், எதுவும் நடைபெறாதது போலவும் தோன்றலாம். ஆனால் என் அருமைப் பிள்ளைகளே, என்னில் நம்பிக்கை வையுங்கள். நான் புரணமான அதிகாரத்துடன் இருக்கின்றேன் என்பதை நம்பு. நிபந்தனைகள் எதுவுமின்றி முழுமையாக உன்னை நேசிக்கின்றேன். என்னில் நம்பிக்கை வை. எனதன்பிலும், வல்லமையிலும் நம்பிக்கை வை. எனது அன்பைப் பற்றி அதிகமாக உன்னிடம் பேச முடியாது. அளப்பெரும் எனது தெய்வீக அன்பின் நிமித்தமாகவே நான் உன்னை நேசிக்கிறேன். ஒருபோதும் நான் உன்னை அநாதையாக விட்டுவிட மாட்டேன். உனது ஆன்மாவின் காயங்களை நான் முத்தமிட விட்டுவிடு. எனது ஸ்பரிசமும், எனது முத்தமும் உன்னைக் குணப்படுத்தும். விலைமதிப்பற்ற எனது திரு இரத்தத்தினால் உன்னை மூடிவிட எனக்கு அனுமதி தா. எனது அன்பின் நிமித்தமாகச் சிந்தப்பட்ட எனது இரத்தம் உன்னைக் கழுவிச் சுத்தமாக்கும். எனது பிள்ளைகளுக்கு நான் ஏராளமான அருட்கொடைகளை வழங்கக் காத்திருக்கின்றேன். தாம் குணமடைவதற்காக இந்த அருள் வழங்களை என்னிடம் வந்து பெற்றுக்கொள்ள அநேகர் மறுத்துவிடுகின்றார்கள். நீ அவர்களிடம் சென்று இதை அவர்களுக்கு எடுத்துக் கூறுவாயாக. நான் அவர்களை அணுக உன்னை எனது கருவியாகப் பயண்படுத்த முடியுமா?
சிந்தனை.
1. (எரே. 15:18-19).
ஏன் எனது துன்பம் நீடித்திருக்கின்றது? என் காயங்கள் ஆறாத கொடிய புண்ணாய் இருப்பதேன்? நீர் எனக்கு வஞ்சகக் காணல் நீராயும், பயணற்று வற்றிப்போகும் நீரோடையாயும் இருப்பீரோ? இதற்கு ஆண்டவர் ”நீ திரும்பி வந்தால் நான் உன்னை மீண்டும் எடுத்துக்கொள்வேன். நீ எனது ஊழியனாய் இருப்பாய்” என்கிறார்.
2. (சங். 144:8)
அன்பும் அருளும் உள்வர் ஆண்டவர், சினம் கொள்ளத் தாமதிப்பவர், அருள் உள்ளம் படைத்தவர்.
3. (எசக் 36:33)
உங்கள் எல்லா அக்கிரமங்களில் நின்றும் உங்களை நான் தூய்மையாக்கும் நாளில் நகரங்களில் மக்கள் குடியேறச் செய்வோம். பாழான இடங்கள் திரும்பக் கட்டப்படும்.
4. (எசக் 37:23)
நாம் அவர்களை தூய்மைப்படுத்துவோம். அப்பொழுது அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள், நாம் அவர்கள் கடவுளாய் இருப்போம்.
செபம்.
இயேசுவே, உமது இல்லத்தில் என்னைக் கனிவோடு வரவேற்கின்றீர் என்பதை உணரச்செய்வதற்காக உமக்கு நன்றி. ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் ஆட்களைத் தேடி இடத்துக்கிடம் அடிக்கடி அலைந்தேன். பல சந்தர்ப்பங்களில் நிலைத்திராத அற்ப திருப்திதான் எனக்குக் கிடைத்தது. அவற்றால் தெளிவில்லாத ஒரு வெறுமை நிலையும், நிறைவு காண முடியாத அனுகூலங்களுமே எனக்குக் கிடைத்தன என்பதை உணர்ந்திருக்கின்றேன். சில சந்தர்ப்பங்பளில் எதை நான் விரும்புகின்றேன் என்பதை அடயாளம் காண முடியாதவனாகவும், எதைத் தேடுகிறேன் என்பதை உணர முடியாமலும் இருந்தேன். இயேசுவே, இப்பொழுது எல்லாம் தெளிவாகத் தெரிகின்றது. என்னை உமக்காகவே படைத்தீர் என்பதையும், உம்மில் மாத்திரமே எனது தேவைகள் அனைத்தும் அடைக்கலமாகின்றன என்பதையும் அறிகின்றேன். இயேசுவே, உமது இல்லத்திற்கு வந்து உம்மோடு தங்கியிருக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை இப்போது நான் அடைந்துவிட்டேன். ஆண்டவரே, இங்கே உம்மாலேதான் எனது செபங்கள் யாவும் கேட்கப்படும் என்பதை நான் உணருகின்றேன். எந்த முறையில் எவ்விதம் நீர் எனது செபத்துக்கு பதிலளிப்பீரோ, அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் நீர் என்னை அறிவீர், என்பதை நான் நம்புகின்றேன். எனக்கு எது நல்லது என்பதும், எது தீமையானது என்பதும் உமக்குத் தெரியும். நான் மீனைக் கேட்டால் நீர் எனக்கு ஒருபோதும் தேளைத் தர மாட்டீர், ஏனெனில் என்மீதுள்ள உமது பேரன்பு அதற்கு இடந்தராது. இயேசுவே நான் உம்மை நம்புகின்றேன், நான் உம்மை விசுவசிக்கின்றேன், என்மீதுள்ள உமது அன்பை நான் நம்புகின்றேன். உமது அன்புக்கு நான் முழுமையாகச் சரணடைகின்றேன்.
(உங்கள் கருத்துக்களுக்காகவும், விசேஷமாக சிறையில் உள்ளவர்களுக்காகவும் இறை இரக்கத்தின் செபமாலையைச் செபிக்கவும்)