1. உறுதிப்பூசுதல் வழங்க யாருக்கு அதிகாரம் உண்டு?
அப்போஸ்தலர்களின் ஸ்தானாதிபதிகளாகிய திருச்சபையின் ஆயர்கள்தான் உறுதிப்பூசுதல் வழங்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே உறுதிப் பூசுதல் வழங்கும் சாதாரண தேவ ஊழியர்களாக இருக்கிறார்கள்.
2. உறுதிப் பூசுதல் வழங்கக் கூடிய அசாதாரண ஊழியர்கள் யார்?
அப்போஸ்தலிக்க பீடத்தின் விசேஷ பிரதிநிதித்துவத்தின் மூலம் அதிகாரம் பெற்றுள்ள ஒரு குருவானவர் உறுதிப் பூசுதல் வழங்கக் கூடிய அசாதாரண ஊழியராக இருக்கிறார்.
3. அசாதாரண ஊழியர், உறுதிப் பூசுதலில் பயன்படுத்தப் படும் கிறீஸ்மா தைலத்தை அர்ச்சிக்க முடியுமா?
முடியாது. ஆயரால் அர்ச்சிக்கப்பட்ட கிறீஸ்மா தைலத்தையே அவர் பயன்படுத்த வேண்டும்.
4. உறுதிப்பூசுதல் வழங்கு முன் ஓர் அசாதாரண ஊழியர் என்ன செய்ய வேண்டும்?
ஓர் ஆயர்தான் உறுதிப்பூசுதல் வழங்குவதற்கான சாதாரண ஊழியராக இருக்கிறார் என்றாலும் தாம் இந்த தேவத்திரவிய அனுமானத்தை வழங்க பரிசுத்த பீடத்திடமிருந்து ஒரு விசேஷ அதிகாரத்தைப் பெற்றுள்ளதாக அவர் முன்னதாக அறிவிக்க வேண்டும். மேலும் ஆயர் பயன்படுத்தும் அதே சடங்கு முறையைத்தான் அவரும் பயன் படுத்த வேண்டும்.
5. உறுதிப் பூசுதல் எப்போது வழங்கப் படலாம்?
உறுதிப் பூசுதல் வருடத்தின் எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், ஆயர் விரும்பினால் மாலை நேரத்திலும் கூட வழங்கப் படலாம்.
6. உறுதிப் பூசுதலை ஆயர் எங்கே வழங்க முடியும்?
இந்தச் சடங்கிற்குச் சரியான இடம் தேவாலயம்தான். ஆனால், சரியான காரணம் இருந்தால் ஆயர் எந்த ஒரு தகுதியான இடத்திலும் அதை வழங்கலாம்.