சேசுநாதர் வாக்களிக்கப்பட்ட இரட்சகர்!

வாக்குத்தத்தம்

தேவ அனுக்கிரகம் திரு அருள் சாந்தி; மாசற்ற இருதயம்; மறுவற்ற சரீரம்; மனதுக்கு அடங்கிய புலன்கள்; அறிவுக்கு அடங்கிய மனது; அருளுக்கு அடங்கிய அறிவு. இந்த நல்வரங்களைப் பெற்றிருந்த பாக்கியசாலிகள் யார்? இவர்களே மனுக்குலத்தின் ஆதிப் பிதா, மாதாவான ஆதாமும் ஏவாளும் ஆவர். இவர்களுக்கென தேவன் அளித்த வாசஸ்தலம் சிங்காரவனம். இச்சிங்காரத் தோப்பில் இவர்கள் பூவுலக மன்னர்களாய், பூரண சுதந்திரத்துடன், புனித ஜீவியம் ஜீவிக்க வேண்டியவர்கள்.

ஆனால் அந்தோ! தேன் இனிய அமுதமாம் தேவ இஷ்டப்பிரசாதம், தெவிட்டாத பேரின்பம் தரும் தெய்வ சம்பாஷைனை, பரலோக வாழ்வுக்கு ஒப்பான மரணம் இல்லாமை, இவை அனைத்தையும், ஒரே தினத்தில் அந்த ஆதித் தாய் தந்தையர், தங்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் இழந்தனர். அவர்கள் அவரால் படைக்கப்பட்டவர்கள். தம் கைவேலை யாகிய அம்மானிடருக்கு, இவ்வுலகிலும், பரலோகத்திலும் இணையற்ற பாக்கியத்தைத் தந்தருள வேண்டும் என்பதே அந்த சர்வேசுரனது ஆசை. அவர்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இதுவே சிருஷ்டிகர் சிருஷ்டிகளுக்கு நியமித்த நியதி.

படிப்பில் தேர்ந்தோருக்குப் பட்டம்; வெற்றி பெற்றவர் களுக்கு வெகுமானம்; உழைப்பிற்குத் தகுந்த ஊதியம். முதல் மனிதராகி ஆதாமும் ஏவாளும் ஆண்டவர் கொடுத்த கட்டளையை, இவ்வுலக மோசமாகிய சிங்காரத் தோப்பில், பழுதற நிறைவேற்றியணிருந்தால், பரலோகத் தில் நித்திய பாக்கியத்தைச் சன்மானமாக அடைந்திருப் பார்கள். இது அவர்களுக்குத் தெரியும். தெரிந்திருந்தும், தங்கள் சுதந்திரத்தைத் தீய வழியில் திருப்பினர். தேவ கட்டளையை மீறினர், இவ்வுலக, பரலோக பாக்கியம் இரண்டையும் இழந்தனர். ஆதலால் தேவன் அவர்களை அந்த அற்புத வனத்தினின்று வெளியேற்றினார்.

வெளியேற்றினார் என்றாலும், வெம்பிய அவர் களுடைய மனதிற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத் தருளினார். இவ்வுலக பாக்கியம் இல்லையென்றாலும், பரலோக பாக்கியம் அந்த மனித இனத்திற்குக் கிடைக்கும் என்பதை அவர் முன்னறிவித்தார். அந்தப் பேரின்ப பாக்கியத்தை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்களுடைய சந்ததியார் அனைவருக்கும் அடைந்து கொடுக்கவிருக்கும் அகில உலக இரட்சகருக்காக அவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் அன்று அவர் எச்சரித்தார்.

உலக இரட்சகரைப் பற்றிய இந்த வாக்குத்தத்தம், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் பிதாப்பிதாக்கள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டது. இஸ்ராயேல் மக்களின் எழில் மிகுந்த தீர்க்கதரிசிகளால் இவ்வுண்மை எல்லோருக்கும் எடுத்துக் கூறப்பட்டது.


ஸ்நாபக அருளப்பர்

வரவிருக்கும் ஒருவரால் மனுக்குலம் நலம் அடையும் என்ற எண்ணம் மக்களுக்கு ஒரு மகத்துவ நம்பிக்கையை ஊட்டியது. பல நாட்டினரது பாரம்பரி சரித்திரத்திலும் இவ்வுண்மையைக் காணலாம். இஸ்ராயேல் மக்க்ளின மாகிய யூதர்கள் மத்தியிலோ இந்த விசுவாசம் தெளிவாகவும், பகிரங்கமாகவும் போதிக்கப்பட்டு, விளக்கிக் கூறவும்பட்டது. ஆதலால்தான், அரிய தவக் கோலம் பூண்டு, வனத்து வாழ்வு வாழ்ந் வந்த அர்ச்சியசிஷ்ட ஸ்நாபக அருளப்பர், ""அனைவரும் தவம் செய்து பாவ மன்னிப்பு அடைய வாருங்கள்'' என்று அழைத்தபொழுது, அவரே வாக்களிக்கப்பட்ட கிறீஸ்துவாய் இருக்கலாமோ என்று அநேக யூதத் தலைவர்கள் ஐயம் கொண்டனர் (லூக்.3:15). ஆனால் அதைப் பற்றி அவரை அவர்கள் வினவியபொழுது, ஸ்நாபக அருளப்பர், ""நான் கிறீஸ்து நாதர் அல்ல'' என்றார். ""அப்படியானால் நீர் யார்?'' என்று அவரை அவர்கள் கேட்க, ""ஆண்டவரின் வழியைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறும், இசையாஸ் தீர்க்க தரிசியால் குறிப்பிடப்பட்ட வனாந்தரத்தில் இருந்து வரும் குரல் ஒலி நானே'' என்று பதில் உரைக்கின்றார் (அரு.1:23; இசை.40:3).

அருளப்பர், தாம் கிறீஸ்துவல்ல என மொழிந்தது மாத்திரம் அல்ல, உடனடியாகத் தொடர்ந்து அவர் கூறிய தாவது: ""உங்கள் மத்தியில் ஒருவர் நின்றுகொண்டிருக் கிறார். அவரை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை. அவரே எனக்குப் பின் வரவிருப்பவர்.'' மறு நாள் சேசுநாதர் தம்மிடம் வருவதைக் கண்ணுற்று, அருளப்பர் மீண்டும்: ""இதோ உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையானவர்! இவரே நான் கூறியது போல், எனக்குப் பின் வரவிருப்பவர், என்னிலும் மேலானவர். இவரே தேவகுமாரன்'' (அரு.1:26).


பழைய ஏற்பாடு

ஸ்நாபக அருளப்பரது சாட்சியம் தெளிவானது. அவர் குறிப்பிட்ட தீர்க்கதரிசன வாக்கியங்களின் அர்த்தம் யூதர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டிருக்க வேண்டும். மேலும் கடுந்தவம் புரிந்த, பெரும் துறவியாகிய அருளப்பரைக் கண்ட யூதர்கள் எல்லோரும் அவரை வெகுவாய் மதித்து வணங்கினார்கள். ஆதலால் அவர்கள் சேசுநாதரை வரவிருக்கும் இரட்சகர் என்றும், கிறீஸ்து என்றும் கண்டுணர்ந்து ஏற்றிருக்கலாம்.

யூதர்களுக்கு வேதாகமங்கள் தெரியாதவையல்ல. ஒவ்வொரு வருடமும் வேதாகமங்கள் அனைத்தையும் ஒரு முறை மக்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும் என்பது தேவ கட்டளை. அதே வேதாகமங்கள், வரவிருக்கும் கிறீஸ்து இரட்சகர் எந்தக் கோத்திரத்தில் உதிப்பார், எப்பொழுது, எவ்விடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் பிறப்பால், எவ்வித ஜீவியம் ஜீவிப்பார், என்ன பாடுகள் பட்டு, எத்தகைய மரணம் அடைவார் என்பனவற்றைப் பற்றித் தெளிவாகவும், நுட்பமாகவும் எடுத்துரைத்தன. அந்த உலக மீட்பர் மரித்த பின்பு உயிர்த்தெழுவதும், திரும்ப, பரலோகம் செல்வதும் முதலாய் முன்னறிவிக்கப் பட்டிருந்தது. சேசுநாதரே தம்மைப் பற்றி ஆகமங்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ""வேத புத்தகங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகள் என்னைப் பற்றி சாட்சியம் பகர்கின்றன'' (அரு.5:39) என அவரே கூறியிருக்கிறார்.


தீர்க்கதரிசனங்கள்

தீர்க்கதரிசிகள் என்பவர்கள் யார்? அவர்கள் ஜீவித்தது எக்காலம்? ஏறக்குறைய கி.மு.800ல் இருந்து கி.மு.400 வரை, நானூறு வருடங்களாக, இஸ்ராயேல் மக்களின் ஆயர்களாகவும், ஞான ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள் தீர்க்கதரிசிகள். இவர்களால் கிறீஸ்துநாதரின் வருகையைப் பற்றி எழுதப்பட்டவையயல்லாம் சேசுநாதர் பிறப்பிற்கு நானூறு வருடங்களுக்கு முன்னரே எழுதி முடிக்கப் பட்டவை. ஆதலால் யூதர்கள் அனைவரும் அவைகளை அறிந்திருந்தார்கள்.

இனி, கிறீஸ்துநாதரைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், அவைகள் சேசுநாதரிடத்தில் நிறைவேறின விதம் பற்றியும் சற்று ஆராய்வோம்.

வரவிருக்கும் இரட்சகர், பாபிலோன் அடிமைத் தனத்தினின்று யூதர்கள் மீட்கப்பட்டபின் 490 வருடங் களுக்குப் பிறகு உதிப்பார் என்று தானியேல் தீர்க்கதரிசி கூறுகிறார் (தானி.9:24).

யூதாவின் அரசுரிமை பறிக்கப்பட்டபின்பே அவர் வந்தருள்வார் என்பது ஆதியாகமம் சொல்வது (ஆதி. 49:10).

ஒரு கன்னிகை கற்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள். அவரது நாமம் ஆண்டவர் நம்மோடு என்று அர்த்தம் கொள்ளும் எம்மானுவேல் என்பதாம் என்று இசையாஸ் தீர்க்கதரிசி அறிவித்தார் (இசை.7:14; மத்.1:23).

இக்குமாரன் தாவீதின் கோத்திரத்தில் தோன்றுவார் என்று ஜெரேமியாஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார் (எரே.23:5). 

அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பது மிக்கேயாஸின் கூற்று (மிக்.5:2).

அவருக்குத் தார்சீஸ் நாட்டு மன்னர்கள் காணிக்கை செலுத்த வருவார்கள் என்பது தாவீதரசரின் சங்கீத வாசகம் (சங்.71:10).

அவரால் குருடர் பார்வை அடைவார்கள், செவிடர்; கேட்பார்கள்; இருதயத் தாபமுள்ளவர்கள் குணமடை வார்கள் என்று இசையாஸ் அறிவிக்கிறார் (இசை.35:5; 66:2).

அவர் ஒரு கோவேறு கழுதையின்மீது ஏறி வருவார் என்பது சக்கரியாஸின் சான்று (சக்கரி.9:9).

அவர் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக விற்கப்படுவார் என்று அதே தீர்க்கதரிசி விவரிக்கிறார் (சக்கரி.11:12). மற்றவர்களால் ஏசவும் துப்பவும்படுவார் (இசை.50:6), காடியும் புளித்த ரசமும் கொடுக்கப்படுவார் (சங்.68:22). அவருடைய கால்களும் கைகளும் துளைக்கப்படும். அவருடைய ஆடைகள் பகிர்ந்து கொடுக்கப்படும்; அங்கியை முன்னிட்டு சீட்டுப் போடப்படும் (சங்.21:17).

ஆயினும் உயிரற்ற அவருடைய திருச்சரீரம் அழிந்து போகாது (சங்.15:10). 

பரலோகத்திற்கு ஆரோகணமாவார் (சங்.67:19). அவருடைய கல்லறை மகத்துவம் மிகுந்ததாய் இருக்கும் (இசை.11:10).

அவர் தமது வரப்பிரசாதத்தை எல்லா மாம்சத்தின் மீதும் பொழிந்தருள்வார் (யோவேல். 2:28).

அவர் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பார். அதற்கு அழிவே இராது (தானி.2:44).

ஆனால் இஸ்ராயேல் மக்களோ அரசனும் ஆண்டகையும் இல்லாது, பலிகளும், பீடங்களும் காணாது தத்தளிக்கும் (ஓசே.3:4).


எல்லாம் நிறைவேறின.

முற்கூறிய தீர்க்கதரிசனங்களும், மற்றவையும் சேசுநாதரிடத்தில் நிறைவேறின என்பதை உலகம் அறியும். அவரது பிறப்பும், பாடுகளும், மரணமும், உயிர்ப்பும், பரலோக ஆரோகணமும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதி வைக்கப்பட்டவை என சரித்திர வாயிலாய் அறியலாம். இவை அனைத்தும் அவர் ஒருவரிடத்தில் நிறைவேறிய உண்மையும் அனைவரும் தெளிவாக அறிந்ததுதான்.

ஆதலால், என் சகோதரனே, மகா பரிசுத்த கன்னிகையின் திருவுதரத்தின் கனியாக உதித்த கருணை வள்ளலாகிய சேசுநாதர்தான் ஆதிகாலம் முதல் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட உலக இரட்சகர் ஆவார் என்பதை நீ கண்டுணர்வாய் என்றால், அவருடைய காலடிகளில் விழுந்து, இரட்சணியப் பாதையும் நீயும் செல்வதாக அவருக்கு வாக்குறுதி அளிப்பாயாக.