திவ்விய பலிபூசை என்பது எப்பேர்ப்பட்ட தெய்வீக அதிசயம் என்பதை நாம் மோட்சத்தில் மட்டும்தான் புரிந்து கொள்வோம். நாம் எவ்வளவுதான் நம்மையே பலவந்தப் படுத்தினாலும், நாம் எவ்வளவுதான் பரிசுத்தர்களாகவும், தேவ ஏவுதல் பெற்றவர்களாகவும் இருந்தாலும், மனிதர் களுடையவும், சம்மனசுக்களுடையவும் புத்தியெல்லாம் கடந்து நிற்கிற இந்தத் தெய்வீக வேலையைப் பற்றித் தடுமாற்றமின்றி, தெளிவாக எடுத்துரைக்க நம்மால் ஒருபோதும் இயலாது.
ஒருநாள் பாத்ரே பியோவிடம், "சுவாமி, திவ்விய பலி பூசையை எங்களுக்கு விளக்கிக் கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அர்ச். பியோ பதில் மொழியாக, ''என் குழந்தைகளே, அதை நான் எப்படி உங்களுக்கு விளக்கிக் கூற முடியும்? பூசை சேசுநாதரைப் போலவே அளவற்றதாக இருக்கிறது. பூசை என்றால் என்ன என்று ஒரு சம்மன் சானவரிடம் கேட்டுப் பாருங்கள், "அது என்னவென்றும், அது ஏன் ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்றும் எனக்குப் புரிகிறது, ஆனாலும், அது கொண்டுள்ள மதிப்பு எவ்வளவு பெரியது என்று எனக்குப் புரியவில்லை'' என்று உண்மையுள்ள மனதோடு அவர் பதில் சொல்வார். மோட்சவாசிகள் அனைவருமே இதை அறிந்திருக்கிறார்கள், இப்படியே நினைக்கிறார்கள்'' என்று கூறினார்.
''திவ்விய பலிபூசையை விட அதிக பரிசுத்தமானதும், மேலானதுமான ஒரு செயலைக் கடவுளாலும் கூட நிறைவேற்ற முடியாது'' என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் உறுதிப்படுத்துகிறார். ஏன்? ஏனெனில் திவ்விய பலிபூசை என்பது ஒரு தொகுப்பு என்று சொல்லலாம், ஏனெனில் அது தேவ சுதனுடைய மனித அவதாரம், மனித இரட்சணியம் ஆகிய வற்றின் சுருக்கமாக இருக்கிறது, அது நமக்காக கடவுள் தாமே நிறைவேற்றிய பரம இரகசியங்களான சேசுநாத ருடைய பிறப்பு, திருப்பாடுகள், திருமணம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. சேசுநாதர் தாம் காட்டிக் கொடுக்கப் பட்ட இரவில், கடைசி இராவுணவின்போது, தாம் மீண்டும் வரும் வரையில் வரவிருக்கும் அனைத்து நூற்றாண்டுகளிலும் சிலுவைப் பலி தொடர்ந்து நிகழும் படியாக தம்முடைய திருச்சரீரம் மற்றும் திரு இரத்தத்தின் திவ்விய நற்கருணைப் பலியைத் தொடங்கி வைத்தார். ''திவ்விய பலிபூசை நிறைவேற்றப்படுவது, சிலுவையின் மீது நிகழ்ந்த சேசுவின் மரணத்துக்கு இணையான மதிப்புள்ளது'' என்று அர்ச். அக்குயினாஸ் தோமையார் கூறுகிறார்.
இதே காரணத்திற்காக அர்ச். பிரான்சிஸ் அசிசியார், ''சர்வேசுரனுடைய திருச்சுதன் பீடத்தின் மீது, குருவானவ ருடைய கரங்களில் தோன்றும்போது, மனிதன் நடுங்க வேண்டும், உலகம் அதிர வேண்டும், மோட்சம் முழுவதும் ஆழமாக நெகிழ்ச்சியடைய வேண்டும்" என்று கூறினார்.
உண்மையில், திவ்விய பலிபூசை சேசுநாதருடைய திவ்விய பலியையும், அவருடைய திருப்பாடுகளையும், திருமரணத்தையும் புதுப்பிப்பதால், அது தனியாகவே நின்று தேவ நீதியைக் கட்டுப்படுத்தப் போதுமான அளவுக்கு மேன்மை மிக்கதாக இருக்கிறது. “திவ்விய பலிபூசை இல்லா விடில் நமக்கெல்லாம் என்ன ஆகும்? இங்கே பூமியில் உள்ளதெல்லாம் அழிந்து போகும், ஏனெனில் திவ்விய பலிபூசை மட்டுமே கடவுளின் நீதியின் கரத்தைத் தடுத்து நிறுத்த முடியும்" என்று சேசுவின் அர்ச். தெரேசம்மாள் தன் துறவறக் கன்னியரிடம் கூறினாள். அது இன்றி திருச்சபை நிச்சயமாக நீடித்திருக்க முடியாது, உலகமும் நம்பிக்கையிழந்து என்றோ அழிந்து போயிருக்கும். "பூசை இல்லாமல் பிழைத் திருப்பதை விட, சூரியன் இல்லாமல் பிழைத்திருப்பது பூமிக்கு அதிக எளிதாக இருக்கும்" என்கிறார் பாத்ரே பியோ. இவ்வாறே போர்ட் மவுரீஸின் அர்ச். லியனார்ட் என்பவரும், "பூசை என்பது இல்லாதிருந்தால், பூமி தன் தீச்செயல்களின் பாரத்தின் கீழ், பாதாளத்தினுள் அமிழ்ந்து போயிருக்கும். பூசைதான் அதைத் தாங்கி நிற்கிற வலுவுள்ள ஆதாரமாக இருக்கிறது'' என்கிறார்.
ஒவ்வொரு பூசையும் அதில் பங்கு பெறுபவர்களின் ஆன்மாக்களில் விளைவிக்கிற இரட்சணிய நன்மைகள் அற்புதமானவை. அது பாவங்களின் மீது மனஸ்தாபத் தையும், பாவ மன்னிப்பையும் பெற்றுத் தருகிறது; பாவங் களுக்குரிய அநித்தியத் தண்டனையைக் குறைக்கிறது; சாத்தானின் செல்வாக்கையும், அடக்கப்படாத நம் மாம்சத்தின் தூண்டுதல்களையும் பலவீனப்படுத்துகிறது; கிறீஸ்துநாதருடைய திருச்சரீரத்தில் நம் ஐக்கியத்தின் பந்தனங்களை பலப்படுத்துகிறது; ஆபத்திலிருந்தும், துயர நிகழ்வுகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது; உத்தரிக்கிற ஸ்தலத்தின் தண்டனைக் காலத்தைக் குறைக்கிறது; அது மோட்சத்தில் நமக்கு இன்னும் மேலான மகிமையான ஒரு உயர்நிலையைப் பெற்றுத் தருகிறது. ''திவ்விய பலிபூசை நமக்குப் பெற்றுத் தருகிற நன்மைகளைப் பட்டியலிட எந்த மனித நாவாலும் முடியாது. பாவி , கடவுளோடு மீண்டும் ஐக்கியமாகிறான்; நீதிமானோ மேலும் அதிக நேர்மையுள்ளவனாகிறான்; பாவங்கள் கழுவி போக்கப்படுகின்றன; துர்க்குணங்கள் அளவிலும் கடுமை யிலும் குறைகின்றன; புண்ணியமும், தகுதியும் வளர்ச்சி பெறு கின்றன, பசாசின் திட்டங்கள் தவிடுபொடியாகின்றன'' என்று அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார்.
போர்ட்மௌரீஸின் அர்ச். லியனார்ட் தம் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களிடம், "ஓ சாத்தானின் மாய்கைக்குள் அகப்பட்டுள்ள மனிதர்களே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் முடிந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பூசைகள் காணும்படி நீங்கள் ஏன் ஆலயங்களுக்கு விரைந்து போகக் கூடாது? ஒரு பூசை நடக்கும்போது, பெரும் படையணிகளாக மோட்சத்தில் இருந்து இறங்கி வந்து, நம் பீடங்களைச் சுற்றியிருந்து தேவ நற்கருணையை ஆராதித்து, நமக்காகப் பரிந்து பேசும் தேவதூதர் களை நீங்கள் ஏன் கண்டுபாவிக்கக் கூடாது?'' என்று அறிவுரை கூறினார்.
இந்த உலக வாழ்வுக்காகவும், மறுவுலக வாழ்வுக் காகவும் நம் எல்லோருக்கும் வரப்பிரசாதங்கள் தேவை. இந்த வரப்பிரசாதங்களைக் கடவுளிடமிருந்து பெற்றுத் தருவதில் திவ்விய பலிபூசைக்கு இணையானது வேறெதுவும் இல்லை . 'ஜெபத்தின் மூலம் கடவுளிடமிருந்து நாம் வரப்பிரசாதங் களைக் கேட்கிறோம்; திவ்விய பலி பூசையில் அவற்றை நமக்குத் தரும்படி கடவுளைக் கட்டாயப்படுத்துகிறோம்" என்று அர்ச். பிலிப் நேரியார் கூறுவது வழக்கம். பூசையில் நம் ஜெபம் நமக்காகத் தம்மைப் பலியாக்குகிற சேசுநாதரின் மரண அவஸ்தையின் ஜெபத்தோடு ஒன்றிணைக்கப்படுகிறது. பூசையின் மையப் பகுதியாகிய பலிப்பகுதியின் போது ஒரு விசேஷமான முறையில், நம் எல்லோருடைய ஜெபங்களும் நம் மத்தியில் பிரசன்னமாகியிருக்கிற நம் ஆண்டவராகிய சேசுவின் ஜெபமுமாக இருக்கிறது. ஜீவியரும், மரித்தோரும் நினைவுகூரப்படுகிற பலிப்பாகத்தின் இரண்டு ஞாபக மன்றாட்டுக்கள் நம் விண்ணப்பங்களைக் கடவுள் முன் சமர்ப்பிக்க மிக உத்தமமான நேரமாக இருக்கின்றன. சேசுநாதர் குருவானவரின் கரங்களில் தமது திருப்பாடு களுக்கும், மரணத்திற்கும் உட்படும் உன்னதமான நேரத்தில், நாம் நம் சொந்தத் தேவைகளை இரந்து மன்றாட முடியும்; நமக்குப் பிரியமான ஜீவியர்களுக்காகவும், மரித்தவர்களுக்காகவும் நாம் பரிந்து பேசி ஜெபிக்கவும் முடியும். இதை நமக்கு ஆதாயமாக்கிக் கொள்வதில் நாம் கவனமாயிருப்போம். அர்ச்சியசிஷ்டவர்கள் இந்த நேரத்தை மிக முக்கியமானதாக மதித்தார்கள். தங்களுக்காக ஜெபிக் கும்படி குருக்களிடம் கேட்டுக்கொண்ட போது அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக பலிப்பாகத்தில் தங்களை நினைவுகூரும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.
குறிப்பாக நம் மரண வேளையில் நாம் பக்தியோடு கண்ட பூசைகள் அனைத்திலும் மேலான ஆறுதலையும், நம்பிக்கையையும் நமக்குக் கொண்டு வரும். வாழ்நாளின் போது நாம் பங்குபெறும் ஒரு பூசை, நம் மரணத்திற்குப் பிறகு, நமக்காக மற்றவர்கள் கண்டு ஒப்புக்கொடுக்கும் பல பூசைகளை விட அதிக பலனுள்ளதாக இருக்கிறது.
''திவ்விய பலிபூசையில் பக்தியோடு பங்கு பெறும் ஒருவனுடைய மரணத் தறுவாயில், அவன் பக்தியோடு எத்தனை பூசைகள் கண்டானோ, அத்தனை அர்ச்சியசிஷ்டவர்களை அவனைத் தேற்றுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் நான் அனுப்புவேன் என்பதில் நீ நிச்சயமாயிருக்கலாம்" என்று நம் ஆண்டவர் அர்ச். ஜெர்ரூத்தம்மாளிடம் கூறினார்.
எவ்வளவு ஆறுதல் தரும் வார்த்தைகள்! ஆர்ஸின் பரிசுத்த பங்குக் குருவானவரான அர்ச். மரிய வியான்னி அருளப்பர், "பூசையின் உண்மையான மதிப்பை நாம் அறிவோமானால், அதில் பங்கு பெற நாம் இன்னும் எவ்வளவு அதிகமாக முயற்சி எடுப்போம்!'' என்கிறார். இதனாலேயே அர்ச். பீற்றர் ஜூலியன் எம்மார்ட் , " கிறீஸ்தவனே, வேத காரியங்களில் பூசையே அனைத்திலும் அதிக பரிசுத்தமான செயலாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள். அதில் பக்தியோடு பங்கு பெறுவதையும், முடிந்த வரை அடிக்கடி பங்கு பெறு வதையும் தவிரகடவுளை அதிகமாக மகிமைப்படுத்த, அல்லது உன் ஆத்துமத்தை ஆதாயமாக்கிக் கொள்ள, வேறு எதையும் உன்னால் செய்ய முடியாது" என்று அறிவுறுத்துகிறார்.
இந்தக் காரணத்தினால், பூசை காண நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாம் பாக்கியம் பெற்றவர்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்புகளைத் தவற விடாதபடி, சில பரித்தியாகங்களைச் செய்யவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
அர்ச். மரிய கொரெற்றியம்மாள் ஞாயிறு பூசை காண போக வர 15 மைல் தூரம் கால்நடையாகச் சென்று வருவாள். சான்ட்டினா கேம்ப்பானாவைப் பற்றியும் நாம் நினைத்துப் பார்ப்பது நல்லது. அவள் கடுமையான காய்ச்ச லோடு கடுங்குளிரில் பூசைகாணச் சென்றாள். மாக்ஸிமிலியன் கோல் பேயைப் பற்றி நினைத்துப் பாருங்கள்: அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு, சரியாக நிற்கக் கூட முடியாத நிலையிலும் கூட, தாம் கீழே விழுந்து விடாதபடி தம் துறவற சகோதரர் ஒருவர் தம்மைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள, அந்த நிலையிலேயே பூசை நிறைவேற்றினார்.
பியெத்ரெல்சினாவின் பாத்ரே பியோ எத்தனை தடவை கடுங்காய்ச்சலோடும், கைகளிலும் பாதங்களிலும், விலா விலும் இரத்தம் வடிந்து கொண்டிருந்த நிலையிலும் பூசை நிறைவேற்றியிருக்கிறார்! . நம் அன்றாட வாழ்வில், திவ்விய பலிபூசையை வேறு எந்த ஒரு நன்மைக்கும் மேலான நன்மையாக நாம் மதித்து நடக்க வேண்டும். ஏனெனில் அர்ச். பெர்னார்ட் சொல்வது போல், "ஒருவன் தனக்குள்ளதையெல்லாம் ஏழை களுக்குப் பகிர்ந்தளித்தும், உலகமெல்லாம் சுற்றி திருயாத்திரைகள் செய்தும் சம்பாதிப்பதை விட அதிகப் பேறுபலன்களை பக்தியோடு ஒருபூசை காண்பதன் மூலம் சம்பாதித்துவிடுகிறான்!" இது வேறு எப்படியும் இருக்க முடியாது. ஏனெனில் உலகத்தில் உள்ள எதுவும் ஒரு திவ்ய பலிபூசையின் அளவற்ற மதிப்பைக் கொண்டிருக்க முடியாது.
நாம் நம் நேரத்தை வீணடிப்பவையும், நம் ஆன்மா வுக்கு எந்த ஆதாயமும் தராதவையுமான வெறும் கேளிக்கைகளுக்கு மேலாக திவ்விய பலிபூசையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். பிரான்ஸின் அரசரான அர்ச். ஒன்பதாம் லூயிஸ் ஒவ்வொரு நாளும் பல பூசைகள் காண்பார்.
அவருடைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ஒருமுறை பூசை காணும் நேரத்தில் அவர் பல அரசாங்க வேலை களைச் செய்து முடித்து விடலாம் என்று முறையிட்ட போது, அர்ச்சியசிஷ்டவரான அரசர், "வேட்டையாடுதல் போன்ற கேளிக்கைகளில் நான் இதை விட இரு மடங்கு நேரத்தை வீணாக்கினேன் என்றால், அப்போது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள்'' என்று கூறினார்.
இவ்வளவு பெரிதான ஒரு நன்மையை இழந்து போகாதபடி தேவைப்படுகிற பரித்தியாகங்களை நாம் தாராளத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் செய்வோம். 'பூசை காணச் செல்லும் ஒருவன் எடுத்து வைக்கிற காலடிகள் அனைத்தும் ஒரு தேவதூதரால் எண்ணப்படுகின்றன. இவற் றிற்குப் பிற்பாடு கடவுளால் இந்த ஜீவியத்திலும், நித்தியத்திலும் ஒரு மிக உயர்ந்த சன்மானம் வழங்கப்படும்" என்று அர்ச். அகுஸ்தீனார் தம் கிறிஸ்தவர்களிடம் கூறினார். அர்ச். மரிய வியான்னி அருளப்பர் இதன் தொடர்ச்சியாக, "திவ்விய பலிபூசை காணச் செல்லும் ஓர் ஆத்துமத்தோடு செல்கிற அதன் காவல் தூதர் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறார்!'' என்கிறார்.
ஆனாலும் அவர் பூசையில் பங்குபெறும்போது அனுபவித்த துன்பத்தை அனைத்து அர்ச்சியசிஷ்டவர் களுமே அனுபவித்திருக்கிறார்கள். பாத்ரே பியோவின் கண்ணீர்கள், அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (இவர் சில சமயங்களில் இரத்தக் கண்ணீரும் வடித்திருக்கிறார்.), அர்ச். வின்சென்ட் ஃபெரர், அர்ச். இஞ்ஞாசியார், அர்ச். பிலிப் நேரியார், அர்ச். ப்ரிந்திஸி லாரென்ஸ் (இவர் சில சமயங் களில் தம் கண்ணீரால் ஏழு கைக்குட்டைகள் வரைக்கும் ஈரமாக்கி விடுவார்!), அர்ச். வெரோனீஸ் ஜூலியானி, அர்ச். குப்பர்த்தீனோ சூசை, அர்ச். அல்போன்ஸ் லிகோரியார், அர்ச். ஜெம்மா கல்கானி ஆகியோரின் கண்ணீரைப் போன்றவையாக இருந்தன.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, சேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதையும், மரண மடைவதையும் பார்த்துக்கொண்டு அவர் மட்டில் அசட்டையா யிருப்பது எப்படி சாத்தியம்? பூசையின்போது, ஜெத்ச மெனியில் சேசுவின் மரண அவஸ்தையில் அவரை மறந்து உறங்கிக் கொண்டிருந்த அப்போஸ்தலர்களைப் போல நாம் இருக்கக் கூடாது. அல்லது சிலுவையின் மீது மரித்துக் கொண்டிருந்த சேசுவின் கொடுமையான மரண இழுப்புகளைப் பற்றி எந்த இரக்கமும், கவலையுமின்றி, சிலுவையடியில் அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்த சேவகர்களைப் போலவும் நாம் இருக்கக் கூடாது.
(என்றாலும் தேவ நிந்தையானதும், மட்டரகமானதுமாகிய ராகங்களை இசைக்கும் கிட்டார் கருவிகளின் அதிர்வோடும், மிக விநோதமான பாணிகளில் அநாகரீகமாக, அருவருப்பாக உடையணிந்த, முக்காடு அணியாத பெண்களோடும், இளைஞர்களோடும் நடத்தப்படும் ராக் பூசைகளைக் காணும்போது நாம் மேற்கூறிய உதாரணங்கள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. ''ஆண்டவரே, அவர்களை மன்னியும்!'')
நாமோ மகா பரிசுத்த கன்னிகையையும், அர்ச்சிய சிஷ்டவர்களையும் உற்றுநோக்குவோம். அவர்களைக் கண்டுபாவிப்போம். அவர்களைப் பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே சரியான பாதையில், கடவுளை மகிழ்வித்துள்ள (1 கொரி. 1:21) பாதையில் நம்மால் செல்லமுடியும்.