பூசையில் பங்கு பெறும்போது நாம் நான்கு காரியங்களைச் செய்ய வேண்டும்:
1. ஒரு குறிப்பிட்ட நாளில், நம் ஆண்டவரின் வாழ்வில் காணப்படும் ஒரு நிகழ்ச்சி, அல்லது அந்த நாளில் நினைவுகூரப்படுகிற அர்ச்சிஷ்டவரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியின் வரலாற்று அமைப்பை ரூபிகரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் உடுப்புகள், பாடல்கள், பிரவேச வாக்கியம், நிரூபம் மற்றும் சுவிசேஷம் போன்ற, மாறுபட்ட அம்சங்களோடு கூடிய ஞானஸ்நான ஆயத்தக்காரர்களுக்கான பூசையிலிருந்து ஏராளமான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
2. அன்றைய நாளில் நினைவுகூரப் படுகிற நம் இரட்சகரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை, அல்லது அன்றைய புனிதர் கிறீஸ்து நாதரிடம் கண்டு பாவித்த புண்ணியச் செயல்களை, சர்வேசுரனுடைய அதிமிக தோத்திரத்திற்காக அவருக்கு ஒப்புக்கொடுங்கள். பூசையின் பலிப்பாகத்தில் இது செய்யப் பட வேண்டும். சர்வேசுரனது கோபத்தைத் தணித்து, நமக்குத் தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு வருகிற இந்த ஒப்புக்கொடுத்தலைச் செய்யாமல், திவ்ய நன்மை வாங்குவது தகுதியானதல்ல.
3. கிறீஸ்துநாதருடையவும், அவருடைய அர்ச்சிஷ்டவர்களுடையவும் பேறுபலன்கள் மற்றும் பரிந்துரைகளின் வழியாக, அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தபோது பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை சர்வேசுரனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். (இதை பரலோக மந்திரம் சொல்லும்போது செய்ய வேண்டும்.)
4. ஒவ்வொரு பூசையிலும் அந்தரங்கமான முறையில், அல்லது ஞான முறையில் பங்கு பெறுவதற்கான இந்த மூன்று வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவற்றோடு, சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, வெளியரங்கமான முறையில் பங்கு பெறும் முறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அவற்றில் குருவோடு வழிபாட்டு ஜெபங்களை வாசிப்பது, பொதுப் பாடல்களையும், பாடற்பூசைகளில் கிரகோரியன் பாடல்களையும் பாடுவது, ஜெபப் பூசையில் பதில்களைச் சத்தமாகக் கூறுவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பூசையின் போது குருவுடன் சேர்ந்து திவ்ய நன்மை உட்கொள்வது ஆகியவை அடங்கும். இம்முறையில், அர்ச். பத்தாம் பத்திநாதர் விரும்பியது போல, உண்மையான கிறீஸ்தவ உணர்வு, அதன் மூலாதாரமாகிய பூசையிலிருந்து அபரிமிதமாகவும், புத்தம்புதியதாகவும் நம் மீது பெருவெள்ளமெனப் பொழியப்படுகிறது.
பூசையின் சில குறிப்பிட்ட ஜெபங்கள் குருவானவரால் மாத்திரமே சொல்லப்பட வேண்டியவை. விசுவாசிகள் அவற்றைச் சத்தமாகச் சொல்லக் கூடாது. ஆனால் செயல் முறையில் அல்லாமல், இந்த ஜெபங்களில் வெளிப்படுகிற சிந்தனைகளை வணக்கத்தோடும், ஆழ்ந்தும் தியானிப்பதன் மூலம் நாம் இந்தப் பகுதிகளையும் நமக்குரிய ஜெபங்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
பூசையின் மற்ற பாகங்கள் தொடக்கத்திலும், இப்போதும் கூட மக்களால் சொல்லப்படக்கூடியவையாக இருக்கின்றன. அவை இரண்டு வகைப்படும். பாடற் பூசையில் பூசையில் பங்கு பெறுவோரால் பாடப் படுகிற பகுதிகள் ஒரு வகை; நம் சார்பாக பூசை நிறைவேற்றும் குருவாலோ, அல்லது பீடப் பரிசாரகராலோ கூறப் படுகிற பகுதிகள் மற்றொரு வகை.
பூசை சார்ந்த மினவுதலின் முதல் நிலை, பரிசாரகரோடு சத்தமாகப் பதில் சொல்வதை உள்ளடக்கியதாகும். மிஸ்ஸா ரெச்சித்தாத்தா என்ற பெயரால் முறையாகக் குறிப்பிடப் படத் தகுதியுள்ள இரண்டாம் நிலையில் விசுவாசிகள் பாடற்பூசைகளில் குருவானவருடன் சேர்ந்து ஜெபங்களைச் சொல்கிறார்கள், (அல்லது பாடுகிறார்கள்). இந்த இரண்டாம் நிலையில் க்ளோரியா, க்ரேதோ (பாத்ரெம் ஓம்னிப்பொத்தெந்தெம். . .), சாங்க்த்துஸ், மற்றும் ஆஞ்ஞஸ் தேயி ஆகியவை அடங்கும்.
திவ்ய நன்மை வாங்குவதற்கு முன்பாக, பரிசாரகருடன் சேர்ந்து சொல்லும் கொன்ஃபித்தேயோர் மட்டுமின்றி, குருவானவர் நம் சார்பாகச் சொல்லுகிற தோமினே நோன் சும் ஜெபமும் அவருடன் மூன்று முறைகள் சொல்லப் படலாம்.
இம்முறையில் பூசையில் பங்கெடுப்பது திவ்ய நன்மை வாங்குவதற்கான மிகச் சரியான ஆயத்தமாக இருக்கிறது. ஏனென்றால் பாப்பரசரும், மேற்றிராணிமார்களும் மற்றும் அனைத்து குருக்களும் எப்போதெல்லாம் பூசை நிறைவேற்றுகிறார்களோ, அப்போதெல்லாம் திருச்சபையானது இந்த ஒரே விதமான ஆயத்த முறையையே அவர்கள் மேல் சுமத்துகிறது. இது (பிரவேச வாக்கியத்திலிருந்து சபைச் செபம் வரை) ஆத்துமத்தில் உத்தம மனஸ்தாப உணர்வையும், (சபைச் செபம் முதல் விசுவாசப் பிரமாணம் வரையிலும்) விசுவாச உணர்வையும், (பூசையின் பலிப்பாகத்தில்) தேவ நம்பிக்கை உணர்வையும், (திவ்ய நன்மை வாங்கும் போது) தேவ சிநேக உணர்வையும், திரு இரத்தப் பாத்திர சுத்திகரம் முதல் பூசை முடிவு வரை) நன்றியுணர்வையும் வளர்க்கிறது. திவ்ய நன்மை பலனுள்ள முறையில் உட்கொள்ளப் படுவதற்கு இந்த உணர்வுகள் இன்றியமையாதவை. இத்தகைய ஆயத்தத்தின் மூலமாக, திவ்ய நன்மை உட்கொள்வது பூசையில் பங்குபெறும் செயல்பாடுகளில் எல்லாம் மிகச் சிறந்ததாக இருக்கிறது. இந்த ஆயத்தமானது திவ்ய நன்மை வாங்குவதன் முழுப் பலன்களையும் நமக்குப் பெற்றுத் தருகிறது. ஏனென்றால் திவ்ய நன்மை வாங்குவதற்குக் கவனமான முறையில் ஆயத்தம் செய்வதும், இந்த மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தைப் பெற்றுக் கொண்டதற்கான முறையான நன்றியறிதலும்தான், திவ்ய நன்மை வாங்குவதால் ஏற்படும் நல்ல விளைவுகளை அபரிமிதமான முறையில் பெற்றுக் கொள்ளும் முறையாகும் என்று அர்ச். பத்தாம் பத்திநாதர் கூறினார். அவரது இந்த ஆணையின் மூலம் நமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மிக உன்னதமான முறையில் செயற்படுத்துகிற முறைகளில் ஒன்றாக இந்த ஆயத்த முறை விளங்குகிறது.