இதனால்தான் மாமரி லூர்துபதியில், தன் திருப்பெயரை, "நானே அமல உற்பவி" என்று சொல்லாமல், "நாமே அமல உற்பவம்" என்று அறிவித்தார்கள். சர்வேசுரன் ஒருவரே பெயர்ச் சொற்களைத் தமக்கெனப் பயன்படுத்த வல்லவர்.
உதாரணமாக, மனிதன் "நான் ஜீவிக்கிறேன்'' என்று சொல்லலாம். ஆனால் 'நானே ஜீவியம்" "நாமே இருக்கிறவர்" என்று சொல்ல கடவுளால் மட்டுமே முடியும். அப்படியிருக்க, தேவ அன்னை "நாமே அமல உற்பவம்'' என்று ஏன் சொல்கிறார்கள் என்பதை அர்ச். மேக்ஸிமிலியன் கோல்பே பின்வருமாறு விளக்குகிறார்:
"பிதா ஜெனிப்பிக்கிறார்; சுதன் ஜெனிப்பிக்கப்படுகிறார்; இஸ்பிரீத்து சாந்துவானவர் (அவர்களது நேசத்தினின்று புறப்படும்) "உற்பவமாக" இருக்கிறார்; இது மூன்று தேவ ஆட்களையும் பிரித்துக் காட்டுகிறது, ஆயினும் ஒரே (தேவ) சுபாவம், அதாவது அவர்களுடைய தெய்வீக சாராம்சம், அவர்களை இணைக்கிறது. ஆகவே, இஸ்பிரீத்து சாந்துவானவர் மகா பரிசுத்த, அளவற்ற பரிசுத்ததனமுள்ள, கறைதிரையற்ற, மாசற்ற உற்பவமாக, அமல உற்பவமாக இருக்கிறார்.
மாமரி வாக்குக்கெட்டாத முறையில் இஸ்பிரீத்து சாந்துவின் மணவாளி என்ற முறையில் அவரோடு இணைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் வேறு எந்த சிருஷ்டியையும் விட ஒப்பற்ற விதத்தில் அதிக உத்தமமான முறையில் அவர்கள் "மணவாளியாக" இருக்கிறார்கள்.
உலகத் தன்மையான திருமண ஒன்றிப்பைப் பற்றி நம் ஆண்டவர், "இனி அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருப்பார்கள்'' என்கிறார்... இதற்கு ஒப்பற்ற விதமாக அதிக அந்நியோந்நியமானதும், அதிக உள்ளரங்கமானதும், அதிசய சாரமுள்ளதுமான முறையில் இஸ்பிரீத்துசாந்து அமல உற்பவியின் ஆத்துமத்தில், அவர்களுடைய சொந்த இருத்தலின் உள்ளாழங்களில் வாழ்கிறார்..... இது அவர்களுடைய ஆன்மாவின் திருவுதரத்தில் (அல்லது உள்ளாழங்களில்) இருக்கிற நித்திய "அமல உற்பவமாக" (அதாவது இஸ்பிரீத்து சாந்துவாக) இருக்கிறது - அவர்களுடைய அமல உற்பவம் தெய்வீக வாழ்வை ஒரு மாசற்ற விதத்தில் கருத்தரிக்கிறது. மரியாயின் திருச்சரீரத்தின் கன்னிமையுள்ள திருவுதரம் அவருக்காக (இஸ்பிரீத்து சாந்துவுக்காக) மட்டுமே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவராலேயே அவர்கள் குறித்த காலத்தில் (எல்லா உலகக்காரியங்களும் உரிய காலத்தில் நிகழும் அதே முறையில்) தேவ மனிதரின் தேவ-மானிட வாழ்வைக் கருத்தரிக்கிறார்கள்.''
இவ்வாறு இஸ்பிரீத்து சாந்துவாகிய தேவனுடன் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிற தேவமாதா இதனாலேயே லூர்து நகரில் தன் தெய்வீகப் பத்தாவின் திருப்பெயரைத் தம்முடைய பெயராகவே அறிவிக்கிறார்கள்: "நாமே அமல உற்பவம்" என்று! எனவே அமல உற்பவி என்பது மாதாவின் ஜென்ம மாசற்ற உற்பவத்தையும், அமல உற்பவம் என்பது அவர்கள் தெய்வீகத்தன்மைக்கு உயர்த்தப்பட்டிருப்பதையும் குறிக்கின்றன.