மகிமை மிக்க அர்ச். சாமிநாதரே! எங்கள் நேசமுள்ள பரிசுத்த தந்தையே! என் முழு இருதயத்துடன் உம்மை நேசிக்கிறேன். மிகுந்த நேசமும், இனிமையும் நிறைந்த தந்தையான உம்மை எவ்வாறு நான் நேசிக்காமல் இருக்கக்கூடும்? மிகவும் அன்புள்ள நேசத் தகப்பனே! நீர் உன்னதமாக கடைப்பிடித்துவந்த அழகிய நற்புண்ணியங்களை உமது பிள்ளைகளாகிய எங்களுக்கும் பெற்றுத்தரும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம். எங்களையும் உம்மைப் போல் கனிவும் நற்குணமும் மகிழ்ச்சியுமுடையவர்களாக மாற்றியருளும். எங்களுடைய ஆத்துமங்களை சர்வேசுரனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட சமாதானத்தாலும், நேசத்தாலும் நிரப்பியருளும். எங்கள் இருதயங்களை பனியைப்போல் தூய்மையாகவும் வெண்மையாகவும் ஆக்கியருளும். துன்பங்கள் எங்களை உபாதிக்கும்போது எங்களை அமைதியும் பொறுமையும் உள்ளவர்களாக ஆக்கியருளும். பசாசின் தீய சோதனைகளை வெறுப்புடன் அகற்றிப்போடத் தேவையான வல்லமையை எங்களுக்கு அளித்தருளும்.
நமது பரிசுத்த மாதாவான அர்ச். கன்னிமரியம்மாளிடம் கனிந்த நேசத்தையும் எல்லையில்லா நம்பிக்கையையும் நாங்கள் கொண்டிருக்கும்படியாக, அவற்றை எங்களுக்கு பெற்றுத் தாரும். மிகுந்த பக்திபற்றுதலுடனும் ஆர்வத்துடனும் அனுதினம் எங்கள் கட்டளை ஜெபத்தையும் ஜெபமாலையையும் சொல்வதற்கு எங்களுக்கு உதவி புரிந்தருளும். தேவ நற்கருணையில் உள்ள சேசுநாதரின் பிரசன்னத்தின் மீது தெளிந்ததும் உயிருள்ளதுமான விசுவாசத்தை எங்களுக்குப் பெற்றுத் தாரும். திவ்யபலிபூசையின் மாட்சிமை மற்றும் அதன் அளவற்ற பேறுபலன்களை நாங்கள் புரிந்துகொள்ளும்படியாக எங்களுக்குக் கற்பியும். எங்களைப் பற்றிய சர்வேசுரனுடைய திருச்சித்தத்தை எங்களுக்கு வெளிப்படுத்தியருளும். அவருடைய திருச் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு உதவிபுரியும்.
நேசமுள்ள பரிசுத்த தந்தையே, ஓ மகிமையிற் சிறந்த அர்ச். சாமிநாதரே! சர்வேசுரன் உமக்களித்த வியப்புக்குரிய சகல தேவ வரப்பிரசாதங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் நாங்கள் சர்வேசுரனைப் புகழ்கிறோம், வாழ்த்துகிறோம், மகிமைப்படுத்துகிறோம்.
எங்களுக்கு உதவியருளும். எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எப்பொழுதும் எங்களை வழிநடத்திப் பாதுகாத்தருளும். மேலும் சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காகவும், புகழ்ச்சிக்காகவும் மட்டுமே நமது சபை தேவ வரப்பிரசாதத்திலும், அளவிலும் வளரும் படியாகத் தயை செய்து உதவியருளும். ஆமென்.