தம்மைச் சூழ்ந்து நின்ற மக்கள் கூட்டத்தை நோக்கின சேசுவின் முதற்கவலை, தம்மைக் கொலை செய்யும் பாதகர்கள் மீது சென்றது. தவறிப்போன ஆடுகளைத் திரும்ப மந்தையில் கொண்டு வந்து சேர்ப்பிப்பதே அந்த நல்ல ஆயரின் முதன்மையான நோக்கம். அன்பர்களுக்காகத் தமது ஆருயிரைத் தியாகம் செய்வதை விட அரியதொரு நேசம் வேறு உண்டா? அதை விடப் பெரியதொரு நேசம் உண்டு எனக்காட்டுகிறார் இந்த அதீதக் கருணை வள்ளல். அது என்னவெனில் தமது விரோதிகளை நேசிப்பதே. உடலை வதைப்பவர்களுக்காக உயிரைத் தியாகம் செய்வதே. ஆதலால்தான் தம்மைக் கொலை செய்யும் அந்தக் கொடிய பாவிகளுக்காகப் பரிந்து பேசுகிறார் இந்தத் தயாபர சேசு.
“பிதாவே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.''
என்ன கனிவுள்ள இனிய வசனம்! இந்த அமுத மொழி சிலுவையில் அறையுண்டிருப்பவரின் முதல் வசனம். இந்தப் பொன்மொழியானது போர்ச் சேவகர்களின் செவிகளில் ஏறவில்லை. அவர்களது கவனம் எல்லாம் அவருடைய உடைகளின்மீது இருந்தது. சேசுவின் போர்வையை நான்கு பாகங்களாகப் பிரித்துத் தங்களுக்குள் பகிர்ந்துகொண் டார்கள். அவரது அங்கியோ தையல் இல்லாமல் ஒரே பின்னலால் ஆனது. இதைத் துண்டுகளாய்க் கிழிப்பதால் எவருக்கும் பயன்படாமல் போகும். “இதன்மீது திருவுளச் சீட்டுப் போடுவோம்'' என்று கூறி அவ்விதமே செய்தனர். “என்னுடைய ஆடைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்; என் அங்கியின் மீதும் சீட்டுப் போட்டார்கள்'' என்ற தீர்க்க தரிசனம் இவ்விதமாய் நிறைவேறியது. சேவகர்களின் செவிகளில்தான் சேசுவின் இனிய முதல் வசனம் ஏறவில்லை என்றால், அவர்களை அடுத்து நின்ற யூத குருக்களுடைய காதுகளிலுமா இவ்வார்த்தை விழவில்லை? அகம்பாவமும் அக்கிரம வைராக்கியமும் அதிகரித்தால் கண்கள் இருந்தும் காண முடியாது, காதுகள் இருந்தும் கேட்க இயலாது. தங்களுடைய மனச்சாட்சியை வேண்டுமென்றே விபரீதப்படுத்திக்கொண்ட விரியன் பாம்பின் சந்ததிகள் அல்லவா அவர்கள்? ஆதலால் அவர்கள் அவ்வசனத்தைக் கவனிக்க வில்லை. அதற்கு விரோதமாக அவர்கள் ஏதோ ஓர் ஆவேசம் கொண்டவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். சேசுவின் முன்னே, இப்பக்கமும் அப்பக்கமும் நடக்கிறார்கள். “சர்வேசுரனுடைய ஆலயத்தை இடித்து, மூன்று நாட்களில் திரும்பக் கட்டு கிறவனே, சிலுவையை விட்டு இறங்கி உன்னைக் காப்பாற்றிக்கொள், பார்ப்போம்'' என்று ஏளனம் செய்கிறார்கள். “நீ தேவசுதனாய் இருந்தால் சிலுவையை விட்டுக் கீழே இறங்கு'' என்று கூவுகிறார்கள். மூர்க்கம் கொண்ட இந்தப் பரிகாசத்தைக் கேட்ட மக்கள் கூட்டம் மவுனம் சாதிக்கிறது. அதைக் கவனித்த யூதத் தலைவர் களின் ஆவேசம் மட்டுக்கு மீறுகிறது. அவர்கள் கூட்ட மாய் சேசுவின் முன்வந்து, “மற்றவர்களைக் காப்பாற்றி னான்; தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை,'' “இஸ்ராயேலின் இராஜாவான இந்தக் கிறீஸ்து உடனே சிலுவையை விட்டு இறங்கி வரட்டும், நாங்கள் விசுவசிப்போம்,'' “இவன் சர்வேசுரனை நம்பினானே; தேவன் இவனை நேசித்தால், அவர் இவனைக் காப்பாற் றட்டும்'' என்று இவ்வாறு எள்ளி நகையாடிக் கூச்சலிடு கிறார்கள். தேவன் இவனை நேசித்தால், அவர் இவனைக் காப்பாற்றட்டும்'' என்று இவ்வாறு எள்ளி நகையாடிக் கூச்சலிடு கிறார்கள்.
கூச்சலும், கோஷமும், தொற்றுநோய் போலப் பரவ வல்லது. அதனால் கீழே உட்கார்ந்திருந்த போர்ச் சேவகரும் குதித்தெழுந்து, “நீ யூதர்களின் இராஜாவாயிருந்தால், உன்னையே காப்பாற்றிக்கொள்'' எனக் கூட்டத்தோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கிறார்கள். சேசுவின் இரு பக்கங்களிலும் அறையுண்டிருந்த கள்வரையும் இந்தத் தொற்றுநோய் பீடிக்கின்றது. “நீ கிறீஸ்துவாயிருந்தால், உன்னையும் எங்களையும் காப்பாற்றுவதுதானே?'' என அவர்களும் பிதற்றுகிறார்கள். இத்தனை அநியாய ஆரவார தூஷணங் களையும் கேட்டுப் பொறுçம்யோடு மவுனம் சாதிக்கிறார் சேசுநாதர். இந்த அற்புத அமைதியையும் மவுனத்தையும் ஆழ்ந்து கவனிக்கின்றான் ஒரு கள்வன். ஆச்சரியமும் பிரமிப்பும் அனுதாபத்தை உண்டாக்குகிறது. அனுதாபம் அன்பை மூட்டுகிறது. அன்பு விசுவாசத்தை வளர்க்கிறது. விசுவாசமானது அவனுடைய ஞானக் கண்களைத் திறக் கின்றது. ஞானமில்லாத கொலை பாதகன் சிறிது நேரத்தில் மாறி ஞானத்தைக் கண்டடைகிறான். மற்றொரு கள்வன் திரும்பவும் சேசுவைத் தூஷணிப்பதைக் கேட்டு அவனைக் கண்டிக்கிறான். “உனக்குத் தேவபயம் என்பது இல்லையா? நாம் மூவரும் அதே தண்டனைக்குத் தானே ஆளாயிருக் கிறோம். ஆனால் நாமோ, நியாயப் பிரகாரம் தண்டனை அடைகிறோம். இவரோ ஒரு குற்றத்தையும் செய்தவர் அல்லவே'' என அறிவுறுத்துகிறான். இந்தப் பாவசங்கீர்த் தனமும், பகிரங்க சாட்சியமும் தேவ வரப்பிரசாதத்தை அவனுடைய இருதயத்தில் பொழிகின்றன. உடனே, தன்னைப் போல் அறைபட்டிருக்கும் இந்த சேசு சாதாரண மனிதன் அல்ல, அவரே தேவன் என்று கண்டுணர்கிறான். அதனால் அவன் அவர் பக்கம் திரும்பி, “ஆண்டவரே, தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்'' என மன்றாடுகிறான். அந்நேரமே சேசு இரட்சகர் அவன் பக்கம் திரும்பி, “இன்றுதானே நம்மோடு பரகதியில் இருப்பாய்'' எனத் திருவுளம்பற்றுகிறார். மனந்திரும்பிய எந்தப் பாவியும் இந்த நல்ல கள்ளன் அடைந்த பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இந்தக் கடைசி வேளையிலும் போதிக் கின்றார் நமது தெய்வீக ஆசிரியர்.
இது வரைக்கும் சேசுவின் சிலுவையைச் சுற்றிப் பெரும் புயலைப் போல் எழுந்த நிந்தை தூஷணமும், கேலி பரிகாசமும் கொஞ்சங்கொஞ்சமாய்க் குறைகின்றன. தம் பழியைத் தீர்த்துக்கொண்ட சேசுவின் விரோதிகள் வீடு திரும்புகின்றார்கள். அவர்கள் சிலுவையில் உயர்த்தப் பட்டதிலிருந்து வானத்தில் தோன்றிய ஒரு காரிருள் மேக மண்டலம், வர வர அதிகமாகப் பரவி, எருசலேம் பட்டணத்தையும், யூதேயா நாட்டையும், ஏன், உலகத் தையுமே மூடுகிறது. இனி வேடிக்கை பார்ப்பதற்கு ஒன்று மில்லை என்று எண்ணிய மக்கள் கூட்டமும் கலைகிறது. அவ்வேளையில் சேசுநாதருடைய தாயாரும், அவர்களது சகோதரியான கிளேயோப்பாஸ் மரியம்மாளும், முன்பு பாவியாயிருந்த மரிய மதலேனம்மாளும், அருளப்பரும் சிலுவையை நெருங்குகிறார்கள். தங்களால் நேசிக்கப் பட்டவர் அடையும் நிகரற்ற வேதனையைக் கண்டு அவர்களுடைய அங்கம் துடிக்கின்றது. இருதயம் உருகிப் போகின்றது. கண்ணீர் ஆறாகப் பெருகுகின்றது. மனங்கரைந்து தம்மைப் பார்த்து அழுது நிற்கும் அவர்களை சேசுநாதர் கிருபாகடாட்சத்தோடு நோக்குகின்றார். தம்மைப் பெற்ற மாதரசியின் பக்கம் திரும்புகின்றார். தாயே என்ற அமுத மொழியால் அவர்களைக் கூப்பிட்டழைத்தால், பக்கத்தில் காவல் செய்யும் கொடியவரான போர்ச் சேவகர் களால் பங்கம் ஏதும் நேரிடும் என நினைத்து, “ஸ்திரீயே,'' என்று அழைத்து, அருளப்பரைக் காண்பித்து, “இதோ உம் மகன்'' என்றும், அருளப்பர் பக்கம் திரும்பி, “இதோ உன் தாய்'' என்றும் ஒருவரை ஒருவரிடம் ஒப்படைக்கிறார்.
என்ன பரிவுள்ள நெஞ்சம்! என்ன கனிவுள்ள அன்பு! சாகும் வேளையில் தம் வேதனையை மறந்து, தமது அன்னைக்கும் தமது ஊழியர்களுக்கும் புதியதொரு உறவை ஏற்படுத்து கின்றார்.
மனந்திரும்பாத பாவிகளுக்காக முதல் வார்த்தை, மனந்திரும்பிய ஒரு பெரும் பாவிக்கு இரண்டாவது வார்த்தை, பிரமாணிக்கமுள்ள உத்தமமான ஊழியர்களுக்கு மூன்றாவது வார்த்தை. அவரது உள்ளத்திலிருந்து வெளி வரும் இக்கடைசி வார்த்தைகளே அவர் ஒரு மனிதனல்ல, தேவனே என்று நிரூபிக்கின்றன.
சிலுவை மரணம் மிகவும் கொடிதானது. நிமிடத்திற்கு நிமிடம் ஆணிகளால் ஏற்பட்ட காயங்கள் பிய்ந்து கொண்டே வருவதாலும், நரம்புகள் பிசகி, தசைகள் சுருங்கு வதாலும், இரத்தத் தாரைகள் அறுபட்டு, ஜூரம் உண்டாகி, சகிக்க முடியாத தாகம் மேலிடுவதாலும், வேதனை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இவ்விதமாய்த் துன்ப துயரக் கடலில் அமிழ்ந்திருந்த சேசு, தமது பரம பிதாவைக் கூவியழைக்கிறார்.
“என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?'' என்று பிரலாபிக்கிறார். இந்தப் பிரலாபக் கூக்குரல் தாவீதரசர் எழுதிய இருபத்தொன்றாம் சங்கீதத்தின் முதல் வசனம். சேசுவின் திருப்பாடுகளை முன்னறிவிக்கும் சங்கீதங் களில் ஒன்று அது.
ஆ என் சகோதரனே! நமது அன்பரின் துன்ப வெள்ளம் கரைகாணாததாயினும், இந்தப் பிரலாபக் கூக்குரலின் அர்த்தம் என்ன? இந்நேரம் தேவபிதா தமது திருக் குமாரனைக் கைவிட்டனரா? அதாவது, நமது கணக்கற்ற பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய முன்வந்த திவ்விய திருச்சுதனார் நரகத்தில் பாவிகள் சர்வேசுரனால் கைவிடப் பட்டு அனுபவிக்கும் பெரும் தண்டனையைப் போல் ஒரு தண்டனையை அனுபவித்தாரா? நமக்காக அவர் அந்நேரம் “சபிக்கப்பட்டவர்'' ஆனாரா? நினைவுக்கெட்டாத வியாகுலத்தில் மூழ்கிய நம் சேசு, தம் திருப்பாடுகளால் பலனடையாமல், பாதாள நரகத்தில் விழும் கோடான கோடி பாவிகளை நினைந்து, அவர்கள் தம்முடைய ஞான சரீரத்தின் அவயவங்கள் ஆதலால், அந்த அவயவங்கள் தம்மை விட்டு வலுவந்தமாய்ப் பிரிந்து, சர்வேசுரனால் கைவிடப்படுவதை அறிந்து, இந்தப் பிரலாபக் கூக்குரலை எழுப்பினாரா? காரணம் என்னவாயினும், நமது அன்பர் நமது பாவங்களுக்காக அனுபவித்த ஆத்தும சரீர வேதனை அளவுகடந்தது என்று இந்த வசனம் நமக்கு வெளிப்படுத்து கின்றது.
இரட்சகர் தம் சரீரத்திலும் உயிரிலும் அடைந்த வாதை அளவற்றது என்றாலும், நம்மை முன்னிட்டு, இன்னும் அதிகமாக அனுபவிக்கவும் சித்தமாயிருந்தார். இந்த ஆவலே அவர் வாய்விட்டுக் கூறிய ஐந்தாம் வசனத்தின் உட்பொருளாகும்:
“தாகமாயிருக்கிறேன்'' என்ற இவ்வார்த்தை காரிருள் சூழ்ந்த கல்வாரி மலையில் சப்தித்து ஒலிக்கிறது. தாகமா? என்ன தாகம்? சரீர தாகம் என்றால், இரத்தத்தை வெள்ளமாய்ச் சிந்திய பிலாத்துவின் பிரட்டோரியம் என்ற முற்றத்திலல்லவா அவருக்கு உண்டாகியிருக்க வேண்டும்? சரீர தாகமென்றால், சிலுவையில் அறையப்பட்டு உயர்த்தப்பட்டவுடனேயே அவர் திருவாய் மலர்ந்து அதை வெளிப்படுத்தியிருக்க முடியாதா? இல்லை, இது சரீர தாகம் இல்லை. முன்பு ஒரு நாள் சமாரிய நாட்டுப் பெண்ணிடம் தாகத்திற்குத் தண்ணீர் கேட்ட இவர், “உன்னிடம் கேட்பவர் இன்னார் என்று நீ அறிந்திருந்தால், நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் ஜீவிய தண்ணீரை உனக்குக் கொடுத்திருப்பார்'' என்று கூறித் தம் சரீர தாகத்தை மறந்து விடவில்லையா? ஆதலால் இது அவரது சரீர தாகமல்ல; ஆத்தும தாகமே. என் சகோதரனே! தீராத ஆத்தும தாகம் கொண்ட இந்த உன் அன்பர்மீது இரக்கம் வைத்து உன் ஆத்துமத்தை அவருக்குக் கையளிக்க மாட்டாயா?
அவருடைய தாகம் பெரிதுதான். நம்மை இரட்சிக்க இன்னும் அதிகம் பாடுபடவும் தாகமாய் இருந்தார் நமது அன்பர். ஆனால் அத்தாகத்தைத் தீர்க்க, பிதாவினால் குறிக்கப்பட்ட சகலமும் அணுப்பிசகாமல் நிறைவேறி விட்டன. அதனால்:
“எல்லாம் நிறைவேறிற்று'' என முடிவுரை கூறுகின்றார் தேவசுதன். பிதாவின் சித்தம் நிறைவேறியது; தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின; சேசுவின் ஆசையும் நிறைவேறியது. சகலமும் சம்பூரணமாயள் முடிவுற்றது கண்டு:
“பிதாவே! என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன்'' என்று உரத்த சத்தமாய்த் திருவுளம்பற்றி, தமது திருச்சிரசு சாய்த்து உயிர்விடுகிறார்.
ஜீவிய ஊற்றான தேவசுதன், மனிதர்கள் ஜீவிப்பதற்காகத் தமது ஜீவனைப் பலியாக்கி மரணம் அடைகின்றார்.
என் அன்பார்ந்த சகோதரனே, மவுனம் நிலைகொள்ளும் இந்த அற்புத மரணத்தின் முன்பாக, நீயும் மவுனமாய் முழந் தாளிட்டு, உன் அன்பர் அறையுண்டிருக்கும் திருச்சிலுவை யையும், அவரது திருப் பொற்பாதங்களையும் பக்தியுடன் முத்தி செய்வாயாக.