மனுஷர் எல்லாரும் சாகிறது நிச்சயம் . ஒவ்வொருவன் ஒரு முறை மாத்திரம் சாகிரதொழிய இரண்டு மூன்று முறை மரிப்பாரில்லை . சாவுக்குப் பின் தீர்வை நடக்கும் என்பது உறுதியான சத்தியமாகையால் இந்தத் தீர்வைக்குத் தப்பிப் போக வழி காணோம் . இந்தத் தீர்வையிலே சர்வ நீதியுள்ள சர்வேசுரன் ஒவ்வொருவன் புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் சம்பாவனையாவது ஆக்கினையாவது கட்டளை இடுவாரென்கிறதற்குச் சந்தேகம் இல்லை. சில புண்ணியாத்துமாக்கள் முழுமையும் பரிசுத்தராய் இஷ்டப் பிரசாதத்தோடே மரணத்தை அடைந்து விக்கினம் ஏதுமின்றி உடனே அளவில்லாத பேரின்ப பாக்கியம் நிறைந்த நித்திய மோட்சத்தில் என்றென்றைக்கும் வாழப் போவார்களாமே.
இஷ்டப்பிரசாதமில்லாமலும் மனந்திரும்பாமலும் சாவான பாவத்தோடு சாகிற பாவிகள் நித்திய நரகத்திற்குத் தள்ளுண்டு அவியாத நெருப்பிலே ஊழி ஊழிக்காலம் வெந்து சொல்லிலும் நினைவிலும் அடங்காத வேதனைகளை அனுபவிக்கப் போவார்கள் . அப்படி என்றென்றைக்கும் நிலை நிற்கும் மோட்சமென்றும் நரகமென்றும் இரண்டு ஸ்தலமுண்டு .
ஆயினும் அநேகம் பேர்கள் நரகத்தை வருவிக்கும் சாவான பாவமில்லாமல் செத்தாலும் அவர்களுக்குச் சொற்பப் பாவங்கள் இருக்கிறதினால் ஆனாலும் , மன்னிக்கப்பட்ட தங்கள் சாவான பாவத்திற்கு சரியான பரிகாரம் அவர்கள் பண்ணாதிருக்கிறதிலென்கிலும் அவர்கள் எங்கே போவார்கள் என்றால் , சாவான பாவத்தோடே செத்த துர்மனப் பாவிகளின் இருப்பிடமாகிய நித்திய நரகத்துக்குப் போகாமலும் ,எவ்வித பாவக் குற்றமுமின்றி பழுதுமின்றி கறையுமின்றி முற்றும் பரிசுத்தமுள்ள ஆத்துமாக்களின் இராச்சியமாகிற மோட்சத்தில் உடனே பிரவேசிக்காமலும் ஒரு நாடு ஸ்தலத்துக்கு அனுப்பப்படுவார்களாமே.
இந்த ஸ்தலத்தில் தாங்கள் செய்த அற்பப்பாவங்களுக்காக தண்டனையும் பட்டு , பொறுக்கப்பட்ட சாவான பாவங்களுக்கு வேண்டிய பரிகாரமும் செலுத்தி திவ்விய நீதியின் கட்டளைப்படியே உத்தரிப்பார்கள் . அப்படி சரியான விதமாய் உத்தரித்த பிற்பாடு இந்த ஆத்துமாக்கள் மோட்ச பேரின்பத்தைச் சுதந்தரித்து மற்ற மோட்ச வாசிகளுடனே என்றென்றைக்கும் வாழ்வார்கள் என்பது பரம சத்தியமாமே .
மேற்சொன்ன இந்த ஆத்துமாக்கள் சுத்திகரமாகிற ஸ்தலம் உத்தரிக்கிற ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது . இவ்வண்ணமே செத்த ஆத்துமாக்களுக்கு மூன்று ஸ்தலம் உண்டென்று சத்திய திருச்சபை போதித்துக் கொண்டு வருகிறதுமல்லாமல் அது புத்தியுள்ள எந்த மனுஷனுக்கும் காணப்படுகிற நியாயமுமாம் . மூர்க்கரான பாவிகளுக்கு நரகமும் , முற்றும் பரிசுத்த ஆத்துமாக்களுக்கு மோட்சமும் , இன்னம் உத்தரிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலமும் உண்டென்று விசுவசித்து சொல்லக்கடவோம்.
நித்திய நரகத்தில் நித்தியாக்கினை அனுபவிக்கிரவர்களுக்கு மனுஷராலே ஒரு அற்ப ஆறுதலும் உதவியும் பரிச்சேதமும் வரப்போகிறதில்லை. பேரின்ப வீட்டில் வாழும் மோட்ச வாசிகளை வாழ்த்திப் புகழ்ந்து ஸ்துதித்து அவர்கள் நமக்காக சர்வேசுரநிடத்தில் மன்றாடும்படிக்கு அவர்களை வேண்டிக் கொள்ளுகிறதே உத்தம வேத முறையாம் . உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிற ஆத்துமாக்களுடைய வேதனைகளை நம்முடைய ஜெப தவ தர்மத்தினாலும் , திருச்சபையின் வேண்டுதலினாலும் , விசேசமாய் திவ்விய பூசையின் பலியினாலும் அமர்த்தி குறைக்கக்கூடுமென்று சகலமான கிறிஸ்துவர்கள் அக்காலத்திலும் விசுவசித்து அனுசரித்த சத்திய வேதமென்று சொல்லக் கடவோம்
கிறிஸ்துவர்களே ! மோட்ச நரகம் உத்தரிக்கிற ஸ்தலமென்னும் இம்மூன்று ஸ்தலங்களை அடிக்கடி நினைத்து தியானித்தால் , அநேக ஞான பிரயோசனம் வரும் என்கிறதினாலே இவைகளை ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும் . நரகத்தையும் , நரகத்தின் அவியாத நெருப்பையும் , ஊழியுள்ள கால வேதனைகளையும் , பொறுக்க முடியாத பசி தாகத்தையும் ஒருபோதும் முடியாத நித்தியத்தையும் கவனித்து தியானித்தால் அதற்கு பயப்படாமலும் , அதற்கு வழியாயிருக்கிற சாவான பாவத்துக்கு அஞ்சாமலும் இருக்கக் கூடுமோ ?
மோட்சமானது எவ்வித நன்மை பாக்கியமுள்ள ஸ்தலமென்றும் இந்த சர்வ பாக்கியம் ஒருபோதும் முடிவு பெற போவதில்லை என்றும் அதிலே தனக்கு சிம்மாசனம் ஸ்தாபித்து இருக்கிறதென்றும் நன்றாய் நினைத்து உறுதியாய் விசுவசித்து அடிக்கடி தியானிக்கிற மனுஷன் அதற்கு ஆசைப்படுவானல்லோ?
உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைக்கிரவனுக்கும் அப்படியே அநேகம் நன்மைகள் வருமென்கிறது தப்பானது . அவன் அதில் படப்போகிற வேதனைகளுக்கு தப்பும்படியாகத் தன்னாலே ஆனமட்டும் சொற்பப்பாவங்களை விலக்குவான். தான் கட்டிக் கொண்ட சாவான பாவங்களுக்கு பாவ சங்கீர்த்தனத்தின் வழியாய் மன்னிப்பை அடைந்திருந்தாலும் அவைகளுக்குப் பரிகாரமாக தவக்கிரியைகளை அனுசரிப்பான் . மீண்டும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்க செபங்களையும் தர்மங்களையும் செய்வான் . திவ்விய பூசையைக் காண்பான் , அல்லது ஒப்புக் கொடுக்கப் பண்ணுவான் . அப்படி இம்மூன்று ஸ்தலங்களை நினைக்கிறவனுக்கு அநேக சுகிர்த நன்மைகள் வருமென்று அறியக் கடவீர்களாக.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
சாவுக்குப் பின் மூன்று ஸ்தலம் உண்டு!
Posted by
Christopher