இயேசு பேசுகிறார்.
எனது சிறிய மகனே, மகளே, மகிழ்ச்சியாயிருந்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்து. நீ என்னுடன் செலவிட்ட நேரம் வீணாகவில்லை. நீ உயிர்வாழ்ந்து கொண்டிருக்க பேறுபெற்றவன். நீ பெற்றுக்கொண்ட மிகப்பெரும் ஆசீர்வாதம் விசுவாசம் என்னும் கொடையாகும். அதுவே உன்னை முழுமைபெறச் செய்யும். நீ கேட்ட வரங்களை பெற்றுக்கொண்ட அனுபவம் உனக்குண்டு. நீ முன்வைத்த ஏனைய வேண்டுதல்கள் கேட்கப்படுவதோடு விரைவில் கிடைக்கப்பெறும். நான் விரும்பியவாறு எனது நேரம் வரும்வரை உனது செபங்களுக்கு அனுக்கிரகம் செய்ய விட்டுவிடு. என்னில் நம்பிக்கை வை. எல்லா நிலைபரங்களைப் பற்றியும் மேலோட்டமாக நான் பார்க்கிறேன். எதிர்காலத்தையும் என்னால் பார்க்க முடியும். உனக்குத் தேவையற்ற துன்பங்கள் ஏற்பட விடமாட்டேன். கூடுமானவரை அடிக்கடி என்னிடம் வா. உனக்கு வேலைச்சிரமம் இருப்பின் சில நிமிடங்களாவது என்னைச் சந்திக்க வா. உன்னை வரவேற்க எப்பொழுதும் நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன். உனக்குக் கற்றுக்கொடுத்து, என்வயப்படுத்தி உன்னை விடுதலை செய்வேன்.
எனது ஆவியால் உன்னை நிரப்புவேன். அப்போது நீ சமாதானத்தோடும் அமைதியுடனும் உனது சுற்றாடல்களுக்குப் போக முடியும். அந்த நாளில் நீ எதிர்கொள்ளும் வாழ்க்கைப் புயல் அனைத்தின்போதும் உன்னோடிருந்து உனக்கு அமைதியளிப்பேன். இந்த நவநாளின் இறுதி நாட்களில் எனது வல்லமையின் செயற்பாட்டை கண்டிருப்பாய். எனது அன்பிற்கும் வல்லமைக்கும் நீ சாட்சியாய் இரு. தேவ நற்கருணையில் வீற்றிருக்கும் எனது அன்பையும் வல்லமையையும் எல்லோருக்கும் எடுத்துச்சொல். இதில் மிகவும் முக்கியமானது யாதெனில் மிருதுவான எனதன்பையும் வல்லமையையும், அவர்களும் கண்டுகொள்ளச் செய்வாயாக. எனது அழைப்பை ஏனையோரும் அறியச்செய். மீண்டும் என்னிடம் திரும்பி வா. இன்னும் எவ்வளவோ உனக்குத் தர காத்திருக்கின்றேன்.
சிந்தனை.
(மத்தேயு 11:28,29)
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள், உங்களை நான் இளைப்பாற்றுவேன். உங்கள் மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் சாந்தமும், மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவுக்கு இளைப்பாற்றி கிடைக்கும்.
1. (இரா 5:6-7)
கடவுளின் கைவன்மைக்குப் பணிந்து உங்களைத் தாழ்த்துங்கள், குறித்த காலத்தில் அவர் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர்மேல் சுமத்திவிடுங்கள், ஏனெனில் உங்கள்மீது அவருக்கு அக்கறை உண்டு.
2. (எண்ணாகமம் 6:24-26)
ஆண்டவர் உனக்கு ஆசீரளித்து காப்பாற்றுவாராக. ஆண்டவர் உன்மேல் இரக்கமும் கருணையுமுடையவராய் இருப்பாராக. ஆண்டவர் உன்பக்கம் ஆதரவோடு தமது திருமுகத்தைத் திருப்பி உனக்கு சமாதானம் அருளுவாராக.
3. (யோசுவா 1:9)
உறுதியும் மனத்திடனும் கொண்டிரு என்று இதோ நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். திகைக்கவோ, மதிகலங்கவோ வேண்டாம். ஏனெனில் நீ போகுமிடமெல்லாம் ஆண்டவராகிய கடவுள் உன்னோடிருப்பார்.
செபம்.
ஆண்டவரே, நான் உம்மோடு செலவிட்ட இந்த ஒன்பது நாட்களிலும் எனது இதயத்தைத் தொட்டிருக்கின்றீர். எனது ஆண்டவரின் இல்லத்தில் வசிப்பது எத்துணை நன்று. ஆண்டவரே, நாம் உம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட சமாதானத்துக்காகவும், உமது ஆசீர்வாதங்கள் அனைத்துக்காகவும் உம்மைப் போற்றுகின்றேன்.
(ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளை நினைத்துப்பார்)
வாழ்வுதரும் ஆவியின் உயிர்தரும் வார்த்தைகளை எனக்கு நீர் அருளினீர். ஆண்டவரே, உண்மையாகவே நான் உயர்த்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கின்றேன். நான் பாவியாகவே உம்மிடம் வந்தேன். எனது மனம் கவலைகளால் அலைக்களிகப்பட்ட நிலையிலும் தனிமையில் தவித்த எனது உயிருடனும், புண்பட்ட உள்ளத்துடனும், எனது அன்புக்குரியவர்களைப்பற்றிய கவலைகளுடனுமே உம்மிடம் வந்தேன். இளைத்துக் களைத்து வருந்திய உடல்நிலையிலேதான் உம்மிடம் வந்தேன். இயேசுவே நீர் என்னை வரவேற்று தேவ நற்கருணையில் இருக்கும் உமது அன்பின் இருதயத்தில் எனக்குப் புகலிடம் தந்தீர். என்னை நேசித்து குணப்படுத்தி உமது ஆவியை என்மீது மழைபோல் பொழிந்தீர். இவ்வேளையில் நன்றிப்பெருக்கால் நிரம்பி வழியும் எனது உள்ளத்துடன் உமது சந்நிதியில் சிரம் பணிந்து நிற்கின்றேன்.
(மின்மினிகள்போல் ஒளிர்கின்ற ஆன்மாக்களுக்காகவும், இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி தெரிவித்து இறை இரக்கச் செபமாலையைச் செபிக்கவும்.)