சர்வேசுரனை தரிசிக்கும் பாக்கியத்தை இழந்து போவதுதான் சபிக்கப்பட்டவர்கள் நரகத்தில் அநுபவிக்கும் சகல தண்டனைகளிலும் அதிக அகோரமான தண்டனையாக இருக்கிறது.
ஆன்மா சர்வேசுரனால் உண்டாக்கப்படுகிறது. அது அவரிடமிருந்தே பிறக்கிறது. சர்வேசுரனாகிய அந்தப் பெருங்கடலில் அது ஒரு துளியாக இருக்கிறது. மனிதக் கருவோடு இணைக்கப் படும் வரை, அது தன்னைப் படைத்தவரை முழுமையாக அறிந்திருக்கிறது.
அவரே தன் இறுதிக் கதி என்பதையும் அது நன்றாக உணர்ந்திருக்கிறது. ஆனால் மனிதக் கருவோடு அது இணைக்கப்படும் விநாடியில், ஜென்மப் பாவத்தின் கொடூர நஞ்சு அதைத் தீண்டுவதால், அது வரை தான் கொண்டிருந்த நித்திய நன்மையானவரைப் பற்றிய அறிவையும், காட்சியையும் ஆத்துமம் முழுமையாக இழந்து போகிறது. ஜென்மப் பாவ தோஷங் களில் ஒன்றாகிய இருட்டடிக்கப்பட்ட அறிவு, கடவுளை ஆத்துமம் "மறந்து போகச் செய்கிறது. ஞானஸ்நானத்தின் மூலம் இந்த ஜென்மப் பாவம் ஆன்மாவிலிருந்து கழுவி அகற்றப்பட்ட பிறகும், ஜென்மப் பாவ தோஷம் அதை விட்டு விலகாதிருப்பதால், தொடக்கத்தில் தான் கொண் டிருந்த கடவுளைப் பற்றிய துலக்கமான அறிவை ஆத்துமமானது உடலை விட்டுப் பிரியும் வரை மீண்டும் பெற்றுக் கொள்வதில்லை.
இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. ஓர் ஆத்துமம் எந்த அளவுக்கு, சர்வேசுரனை அறிந்து, நேசித்து, அவருக்கு ஊழியம் செய்து அவரை நெருங்கிச் செல் கிறதோ, அந்த அளவுக்கு அது கடவுளை அதிகமாக ஞாபகப்படுகிறது, கடவுளின் கண நேர, கடந்து போகிற ஒரு காட்சியும் கூட அவ்வப்போது பரிசுத்தமுள்ள ஆன்மாவுக்கு அருளப்படுகிறது. எனினும், எந்த விதமான மூடுதிரையுமின்றி, ஆன்மா கடவுளை முழுமையாக மீண்டும் அறிந்து கொள்ள, மரணத்தால் அது தன் உடலிலிருந்து பிரிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.