இயேசு, கடவுளும் மனிதனுமானவர், இந்த உலகில் இயேசு முழு மனிதனாக அவதரித்தார்.
அவர் கடவுளாயிருந்தாலும், இந்த உலகின் மனிதரைப் போல் மனிதராக வாழ்ந்தார். அவர் இறை தந்தையைச் சார்ந்து வாழ்ந்தார். எல்லாவற்றிலும் இறை தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றார். இறை தந்தையை முழுமையாக அன்பு செய்து அவரில் வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு உரையாடுவதில் அதிக நேரத்தை கழிக்கின்றதை நாம் நற்செய்திகளில் காண்கின்றோம்.
"அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்றவல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்."
~~ எபிரேயர் 5:7-8
கடவுள் நம் தேவைகளையும் அறிந்திருப்பவர். பின்னர் நாம் ஏன் நம் தேவைகளுக்காக செபிக்க வேண்டும்? ஏன் மீண்டும் மீண்டும் செபிக்கவேண்டும்?
நாம் செபம் செய்யும்போது, தாழ்ச்சியான உள்ளத்தையும் கடவுள் முன் நம்முடைய இயலாமையையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு செய்வது கொடுத்துக்கொண்டே இருக்கின்ற கடவுளின் கொடைகளை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும் கருவியாக செபம் அமைகின்றது.
ஆகவே நாம் தொடாந்து செபிக்க வேண்டும்.
"உம் அடியானின்; மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர்."
~~ சங்கீதம் 86:4-7