"மீளவும் சேசுநாதர், எல்லாம் முடிந்ததென்று அறிந்து, வேத வாக்கியம் முற்றும் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்'' என்று அர்ச். அருளப்பர் எழுதுகிறார் (அரு.19:28). இதில் வேதவாக்கியம் என்பது ""என் ஆகாரத்திற்குப் பிச்சைக் கொடுத்தார்கள்; என் தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்'' (சங்.68:22) என்ற தாவீதின் வார்த்தைகளைக் குறிக்கிறது.
முதலில் தோட்டத்திலும், பிற்பாடு தீர்வை மண்டபத்தில் தாம் கசையால் அடிக்கப்பட்டதிலும், முள்முடி சூட்டப்பட்டதிலும், இறுதியாக சிலுவையின் மீதும் அவர் ஏராளமான இரத்தத்தை இழந்ததன் காரணமாக, சிலுவையின் மீது சேசுநாதர் அனுபவித்த இந்த உடல் ரீதியான தாகம் மிகக் கடுமையானதாக இருந்தது. சிலுவையின் மீதிருந்து அவரது துளைக்கப்பட்ட கரங்களிலும், பாதங்களிலும் இருந்த காயங்களிலிருந்து, நான்கு ஊற்றுக்களிலிருந்து புறப்படுவது போல நான்கு இரத்தத் தாரைகள் பொங்கி வழிந்தன. ஆனால் அவரது ஆன்ம தாகம், அதாவது மனுக்குலம் முழுவதையும் இரட்சிக்கவும், அர்ச். ப்ளோஸியுஸ் கூறுவது போல, தமது அன்பை நமக்குக் காட்டும்படி இன்னும் அதிகமாகத் துன்புறவும் அவர் கொண்டிருந்த பற்றியெரியும் தாகம், இன்னும் எவ்வளவோ அதிக பயங்கரமானதாக இருந்தது. இதைப் பற்றி அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் எழுதும்போது, ""இந்த தாகம் அவரது பிறர்சிநேகத்தின் கடும் வேட்கையிலிருந்து வந்தது.''
ஓ என் சேசுவே, நீர் இவ்வாறு எனக்காகத் துன்புறுவதை ஆசித்தீர். நானோ, என் துயரம் அதிகரிக்கத் தொடங்கியவுடனேயே, எவ்வளவு பொறுமையற்றவனாக ஆகிறேன் என்றால், மற்றவர்களாலும், என்னாலுமே கூட, நான் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவனாக ஆகிவிடுகிறேன். என் சேசுவே, உமது பொறுமையின் பேறுபலன்களின் வழியாக, எனக்கு நேரிடும் நோய்களிலும், சிலுவைகளிலும், பொறுமையும் அமைந்த மனமும் உள்ளவனாக என்னை மாற்றும்; நான் சாகுமுன் உம்மைப் போல் என்னை ஆக்கியருளும்.
சேசுநாதர் மரணத்தை நெருங்கி வருகையில், ""ஸீத்ஸியோ - தாகமாயிருக்கிறேன்!'' என்றார். ஓ´யாவின் லியோ என்பவர் இதைப் பற்றி, ஆண்டவரே, எதற்காக தாகமாயிருக்கிறீர்? சிலுவையின் மீது நீர் அனுபவிக்கிற மிகக் கொடிய வேதனைகளைப் பற்றி நீர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் தாகத்தைப் பற்றி மட்டுமே முறையிடுகிறீர் என்கிறார்: ""ஆண்டவரே, எதற்காக தாகமாயிருக்கிறீர்? சிலுவையைப் பற்றி மவுனமாயிருக்கிறீர், தாகத்தைப் பற்றியே கதறுகிறீர்.'' இதற்கு சேசுவின் சார்பாக அர்ச். அகுஸ்தின், ""என் தாகம் உங்கள் இரட்சணியத்தைப் பற்றியது'' என்கிறார். ""ஆத்துமமே, என்னுடைய இந்த தாகம், உங்கள் இரட்சணியத்தின் மீது எனக்குள்ள ஆசையேயன்றி வேறு எதுவுமில்லை'' என்கிறார் சேசு. ஆம், நேச இரட்சகர், அளவுக்கு மீறிய நேசப் பற்றுதலோடு நம் ஆன்மாக்களை ஆசித்தார். ஆகவே தமது மரணத்தின் மூலம் தம்மையே முழுமையாக நமக்குத் தர அவர் ஏக்கம் கொண்டார். இதுவே அவரது தாகம் என்று அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார்: ""அவர் நமக்காகத் தாகம் கொண்டார், தம்மை நமக்குத் தர ஆசித்தார்.'' மேலும், தாம் தாகமாயிருப்பதாகக் கூறுவதில், நம் மீதுள்ள அன்பிற்காக தாம் அனுபவித்ததை விட அதிகம் துன்பப்படும் ஆசையோடு இறந்து கொண்டிருந்தார் என்கிறார் அர்ச். செலூசியா பேசில்: ""ஓ, திருப்பாடுகளை விடப் பெரிதான அவருடைய ஆசையே!'' ஓ அனைவரிலும் அழகானவரான சர்வேசுரா, நீர் எங்களை நேசிக்கிறீர் என்பதால், நாங்களும் உம்மை ஆசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்! ""அர்ச். கிரகோரியார் கூறுகிறபடி, ""ஆ, என் ஆண்டவரே, மிக அசுத்தப் புழுவாகிய எனக்காக தாகமாயிருக்கிறீரா? என் அளவற்ற தேவனாகிய உமக்காக நான் தாகம் கொள்ளாதிருப்பேனா? ஓ, சிலுவையின் மீது நீர் அனுபவித்த இந்த தாகத்தின் பேறுபலன்களைக் கொண்டு, உம்மை நேசிக்கவும், எல்லாவற்றிலும் உம்மை மகிழ்விக்கவும் ஒரு பெரும் தாகத்தை எனக்குத் தந்தருளும்'' உம்மிடமிருந்து நாங்கள் தேடுவது எதுவாயினும், அதைத் தந்தருள்வதாக நீர் வாக்களித்திருக்கிறீர்: ""கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்'' (அரு.16:24). உம்மை நேசிப்பதாகிய ஒரே ஒரு கொடையை நான் உம்மிடம் கேட்கிறேன். உண்மையில் இதைப் பெற்றுக்கொள்ள நான் தகுதியற்றவன், ஆனால் இதில், அதாவது, ஓர் இருதயத்தை, ஒரு காலத்தில் உம்மை மிக அதிகமாக நிந்தித்து வந்த ஓர் இருதயத்தை, உம்முடைய பெரும் அன்பனாக மாற்றுவதில், முழுவதும் அசுத்தமும், பாவங்களும் நிறைந்திருக்கும் ஒரு பாவியை தேவசிநேகத்தின் உத்தமமான தீச்சுவாலையாக ஆக்குவதில்தான், உமது திரு இரத்தத்தின் மகிமை இருக்க வேண்டியுள்ளது. எனக்காக மரித்ததில் நீர் இதை விட மிக அதிகமாகவே செய்து விட்டீர். ஓ அளவற்ற நன்மைத்தனமாகிய ஆண்டவரே, உமக்குத் தகுதியுள்ள அளவுக்கு என்னால் மட்டும் உம்மை நேசிக்க முடியுமானால்! உம்மால் வசீகரிக்கப்பட்ட ஆன்மாக்கள் உம்மீது கொள்ளும் அன்பிலும், இன்னும் அதிகமாக உம்மீதே நீர் கொள்ளும் அன்பிலும் நான் இன்பம் காண்கிறேன். இத்துடன் என் சொந்த ஈனமுள்ள அன்பையும் நான் இணைக்கிறேன். ஓ நித்திய தேவனே, உம்மை நான் நேசிக்கிறேன்; ஓ அளவற்ற அழகே, நான் உம்மை நேசிக்கிறேன். அடிக்கடி அன்பின் வார்த்தைகளை உம்மிடம் கூறிக் கொண்டும், இடைவெளியோ ஒதுக்கமோ இன்றி எல்லாவற்றிலும் உம்மை மகிழ்விக்கப் பாடுபட்டுக் கொண்டும் உமது அன்பில் நான் எப்போதும் அதிகரிக்கச் செய்தருளும். அடியேன் அற்பனும், நீசப் பாவியுமாக இருந்தாலும், குறைந்த பட்சம் என்னை முழுவதும் உம்முடையவனாக்கியருளும்.அடியேன் அற்பனும், நீசப் பாவியுமாக இருந்தாலும், குறைந்த பட்சம் என்னை முழுவதும் உம்முடையவனாக்கியருளும்.