பலிப் பொருட்களை ஒப்புக்கொடுத்தல்
ஆகையால் ஆண்டவரே, தேவரீருடைய அடியார்களும், உமது பரிசுத்த சனங்களுமாகிய நாங்கள், தேவரீருடைய குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய அதே கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளை மட்டுமின்றி, அவர் பாதாளங்களிலிருந்து உயிர்த்ததையும், பரலோகத்திற்கு மகிமையோடு எழுந்தருளிப் போனதையும் நினைவு கூர்ந்தவர்களாய் தேவரீர் தந்தருளிய கொடைகள், நன்மைகள் மூலமாகவே ஒரு தூய்மையான பலியும், மாசற்ற பலியுமாக நித்திய சீவியத்தின் பரிசுத்த அப்பத்தையும், நித்திய இரட்சணியத்தின் பாத்திரத்தையும் தேவரீருடைய உந்நத மகத்துவத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
இவற்றின் மீது தேவரீர் இரக்கமும் சாந்தமுமுள்ள முகத்தோடு கண்ணோக்கியருளி, நீதிமானாகிய உமது தாசன் ஆபேலின் காணிக்கைகளையும், எங்கள் பிதாப்பிதாவாகிய ஆபிரகாமின் பலியையும் உமது பெரிய குருவாகிய மெல்கிசெதெக் தேவரீருக்கு ஒப்புக்கொடுத்த பரிசுத்த பலியையும், மாசற்ற பலிப் பொருளையும் ஏற்றுக் கொள்ளத் தயைகூர்ந்தது போல், இவற்றையும் ஏற்றுக் கொள்ளத் தயைசெய்தருளும்.
சர்வ வல்லபரான சர்வேசுரா, இவைகளைத் தேவரீருடைய பரிசுத்த சம்மனசானவரின் கரங்களினாலே உமது தெய்வீக மகத்துவத்தின் சன்னிதானத்தில் உமது உன்னத பீடத்திற்குக் கொண்டு போகும்படி கட்டளையிட்டு, எங்களில் யார் யார் இந்தப் பீடத்தினின்று பங்கு அடைவதினால் உமது குமாரனின் அதிபரிசுத்த சரீரத்தையும், இரத்தத்தையும் உட்கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் சகலவிதப் பரலோக ஆசீர்வாதத்தாலும் வரப்பிரசாதத்தாலும் நிரப்பப்படும்படி தேவரீரைத் தாழ்மையாய் இரந்து மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய அதே கிறீஸ்து நாதர் பேரால். ஆமென்.
மேலும் ஆண்டவரே, விசுவாசத்தின் முத்திரையோடு எங்களுக்கு முந்திப் போய், சமாதான நித்திரையில் இளைப்பாறுகிறவர்களும், தேவரீருடைய ஊழியர்களுமான ஸ்திரீ பூமான்கள் இன்னார் இன்னாரையும் நினைவுகூர்ந்தருளும். (குரு சற்று நேரம் மரித்தவர்களை நினைவுகூர்கிறார்.) ஆண்டவரே, இவர்களுக்கும் கிறீஸ்துநாதரிடம் இளைப்பாறுகிறவர்கள் எல்லோருக்கும் இளைப்பாற்றியும், பிரகாசமும், சமாதானமுமுள்ள இடத்தைக் கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரைக் கெஞ்சி மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய அதே கிறீஸ்து நாதர் பேரால். ஆமென்.
தேவரீருடைய இரக்கங்களின் பெருக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ள உமது ஊழியர்களும், பாவிகளுமான எங்களுக்கும் தேவரீருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களும் வேதசாட்சிகளுமான தீர்க்கதரிசியான ஸ்நாபக அருளப்பர், தியாக்கோன் முடியப்பர், அப்போஸ்தலரான மத்தியாஸ், சீடரான பர்னபாஸ், மேற்றிராணியாரான இஞ்ஞாசியார், பாப்பானவரான அலெக்சாந்தர், குருவான மார்செலினுஸ், குருமாணவரான இராயப்பர், குடும்ப ஸ்திரீகளான பாக்கியம்மாள், பெர்பேத்துவம்மாள், கன்னியர்களான ஆகத்தம்மாள், பிரகாசியம்மாள், அஞ்ஞேசம்மாள், செசிலியம்மாள் மற்றும் விதவையான அனஸ்தாசியம்மாள் ஆகிய இவர்களோடும், உம்முடைய அர்ச்சிஷ்டவர்களோடும் ஒரு பங்கும் கூட்டுறவும் தந்தருளக் கிருபை கூரும். எங்கள் பேறுபலன்களை மதியாது, எங்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுடைய கூட்டத்தில் எங்களைச் சேர்த்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் பேரால் ஆமென்.
அவர் மூலமாகவே, ஆண்டவரே, இந்த நற்கொடைகளையெல்லாம் தேவரீர் எப்போதைக்கும் சிருஷ்டித்து, அர்ச்சித்து, உயிரளித்து, ஆசீர்வதித்து எங்களுக்குத் தந்தருளுகிறீர்.
அவராலும் அவரோடும், அவரிலும் சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரனாகிய தேவரீருக்கு இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் சகல வணக்கமும், மகிமையும் உண்டாவதாக.
குரு: என்றென்றைக்கும் சதாகாலமும்.
பரி: ஆமென்.