திவ்ய பலிபூசையின் உன்னத மகத்துவம்

"அதிசயத்திற்குரிய திவ்விய பலிபூசை" என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.


குருக்கள் மற்றும் குருநிலையினரின் ஆடம்பர அபிஷேகத்திலிருந்தும் திவ்விய பலிபூசை எவ்வளவு உன்னத மகத்துவமுள்ளது என்று நாம் அறிந்து கொள்ளலாம். (பாரம்பரிய குருத்துவ அபிஷேக ரீதிப்படி) ஒவ்வொரு குருவும் திவ்விய பலிபூசை நிறை வேற்ற அதிகாரம் பெறுமுன் ஏழு குருத்துவப் பட்டங்களைப் பெற வேண்டும்.

முதல் நான்கு சிறிய பட்டங்கள், அவற்றைப் பெறுபவர் திருச்சபையின் ஊழியத்தில் ஏற்றுக்கொள்ளப் படுவதையும், அவர் பூசை வைக்கும் குருவுக்கு உதவி செய்யலாம் என்பதையும் குறித்துக் காட்டுகின்றன. ஆனால் அவை இரசக் கிண்ணம், அப்பத்தட்டு, திருமேனித் துகில் அல்லது சுத்திகரத் துகில் போன்றவற்றைத் தொடும் உரிமையைத் தருவதில்லை . இவற் றிற்கு, ஐந்தாவது பட்டம், அதாவது உபதியாக்கோன் பட்டம் பெறப்பட வேண்டும்.

உபதியாக்கோனும், தியாக்கோனும், குருவும் மட்டுமே பலிபீடத்தில் பயன்படுத்தப் படும் திருப்பாத்திரங்களைக் கையாளவும், அவற்றைச் சுத்திகரிக்கவும் உரிமை பெற்றிருக்கிறார்கள். திவ்ய பலிபூசை நிறைவேற்றப்படுவதற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் நுணுக்கமாக சுத்திகரிக்கப்பட்டு, நல்ல நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவை தேவ வழிபாட்டில் அனைத்திலும் உயர்ந்த ஒரு செயலில் பயன்படுத்தப்படுகின்றன, அவை நம் ஆண்டவரின் மகா பரிசுத்த திருச் சரீரத்தாலும், திரு இரத்தத்தாலும் தொடப்படுகின்றன. முறையான, சுத்தமான உடுப்புகளும், பாத்திரங்களும் பயன்படுத்தப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

பரிசுத்த பூசைப்பலியின் உன்னத மகத்துவம், அப்பலியை நிறைவேற்ற அவசியமானவையாக இருக்கும் காரியங்களிலிருந்தும் தெளிவாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. பூசை ஒப்புக் கொடுக்கப் படுவதற்கு :

1) கிறீஸ்து நாதரின் இடத்திலிருந்து பலி நிறைவேற்றும் அபிஷேகம் பெற்ற ஒரு குருவானவர் தேவைப்படுகிறார்;

2) அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு பலிபீடம் தேவைப்படுகிறது. அது ஒவ்வொரு தேவாலயத்திலும், பிற பகுதிகளை விட உயரமான இடத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் அது மாசு மறுவற்ற செம்மறிப்புருவையாகிய கிறீஸ்துநாதர் சிலுவையில் அறையப்பட்டு, பலியிடப்பட்ட கல்வாரியைக் குறிப்பதாக இருக்கிறது;

3) பல வகையான குருத்துவ உடுப்புகள் தேவைப்படுகின்றன. அவை:

அ) அமீஸ் என்னும் தோள்பட்டு, இதைக் குரு முதலில் தம் தலை மீது வைத்து, அதன்பின் கழுத்தைச் சுற்றிக் கட்டிக் கொள்கிறார்; இது, கைப்பாஸின் வீட்டில் யூதர்கள் சேசுநாதரின் திருமுகத்தை மூடி, ''உன்னை அடித்தவன் யார் என்று எங்களுக்குச் சொல்" என்று கூறி அவரைப் பரிகாசம் செய்யப் பயன்படுத்திய லினன் துணியைக் குறிக்கிறது;

ஆ) ஆல்ப் என்னும் நெடு வெண்ணங்கி, இது ஏரோதின் வீட்டில் ஒரு பைத்தியக்காரனாக ஏளனம் செய்யப்படுமாறு சேசுநாதருக்கு அணிவிக்கப்பட்ட வெண்ணாடையைக் குறிக்கிறது. குறிக்கிறது;

இ) இடைக்கச்சை குருவானவர் இதைக் கொண்டு தம் இடையைக் கட்டிக் கொள்கிறார்; இது ஒலிவத் தோட்டத்தில் கிறீஸ்துநாதரைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கயிற்றைக் குறிக்கிறது:

ஈ) கைப்பட்டு, இது குருவானவரின் இடது கரத்தில் அணியப்படுகிறது. இது கிறீஸ்து நாதரின் கரங்களைக் கட்டப் பயன்படுத்தப் பட்ட கயிறுகளைக் குறிக்கிறது;

உ) கழுத்துப் பட்டு, இதைக் குருவானவர் தம் கழுத்தில் அணிந்து, அதன் முனைகளை ஒன்றுக் கொன்று குறுக்காக வைத்துக் கட்டிக் கொள்கிறார். இது, கிறீஸ்துநாதர் மரணத்திற்குத் தீர்வையிடப்பட்ட போது, அவரைப் பிணைத் திருந்த சங்கிலிகளைக் குறிக்கிறது :

ஊ) பூசை ஆயத்தம் ; இது சேசுநாதருக்கு அஞ்ஞான சேவகர்கள் முள்முடி சூட்டிய போது, அவருக்கு அணிவித்த இரத்தாம்பர உடையைக் குறிக்கிறது; பூசை ஆயத்தத்தின் மீதுள்ள சிலுவை, கிறீஸ்துநாதர் ஆணிகளால் அறையப்பட்ட சிலுவையைக் குறிக்கிறது; அதிலுள்ள தூண், சேசுநாதர் கசைகளால் அடிக்கப்படுவதற்காகக் கட்டப்பட்ட தூணைக் குறிக்கிறது;

1) மந்திரிக்கப்பட்ட திருக்கிண்ணம் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை, அல்லது அவர் பருக வேண்டியிருந்த கசப்பான கிண்ணத்தைக் குறிக்கிறது,

2) கிண்ணத்தை மூடப் பயன்படுத்தப்படும் பல்லா; இது அவரது கல்லறையை மூடிய பெரிய கல்லைக் குறிக்கிறது;

6) அப்பத் தட்டு, அல்லது சிறிய வெள்ளித்தட்டு, அவரது திருச் சரீரம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன், அதில் பூசப்பட்ட தைலங்கள் இருந்த பாத்திரங்களைக் குறிக்கிறது;

7) ஒரு திருமேனித் துகில், அல்லது மெல்லிய, சதுர வடிவிலான லினன் துகில், இது சேசு நாதரின் திருச்சரீரத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட அடக்கத்துகிலைக் குறிக்கிறது; மேலும்,

8) ஒரு சுத்திகரத் துகில் உள்ளது, அது திருக்கிண்ணத்தைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் சிறுதுணியாகும், இது அவரது அடக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட மற்ற துணிகளைக் குறிக்கிறது;

9) திருக்கிண்ணத்தை மூடப் பயன்படுத்தப்படும் பட்டுத் துணி. இது அவரது மரணத்தின்போது, மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்த தேவாலயத் திரையைக் குறிக்கிறது;

10) இரு சிறு குடுவைகள்; இவை, சிலுவையின் மீது அவருக்குக் குடிக்கத் தரப் பட்ட பிச்சுக் கலந்த காடி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களைக் குறிக்கிறது; இவை தவிர,

11) ஒரு பெரிய அப்பமும்,

12) திராட்சை இரசமும்,

13) தண்ணீ ரும்,

14 ) இரு மெழுகு வர்த்திகளும்;

15) இரு மெழுகுவர்த்தித் தண்டுகளும்;

16) ஒரு பூசைப் புத்தகமும்,

17) அதை வைக்க ஒரு சட்டம் அல்லது திண்டும்;

18) பீடத்தின் மீது விரிக்க, மூன்று பீடத்துகில் களும்;

19) ஒரு லாவாபோ, அல்லது குரு கைகளைக் கழுவிய பின் விரல்களைத் துடைக்கப் பயன்படுத்தும் சிறு துகிலும் ;

20) ஒரு மணியும்;

21) பீடத்தின் நடுவில் ஒரு பாடுபட்ட சுரூபமும் ;

22) குருவுக்குப் பதில் கூற ஒரு பீடப் பரிசாரகனும் பூசைக்குத் தேவை.

ஏறக்குறைய இந்த எல்லாமே பூசைக்கு அவசியமானவை. எந்த அளவுக்கு என்றால், அவசியமின்றி இவற்றில் எதையாவது அலட்சியம் செய்யும் குருவானவர் ஒரு கனமான பாவம் கட்டிக் கொள்கிறார். இதற்கு ஓர் உதாரணத்தை நாம் அடுத்த இதழில் தருகிறோம்:

ஸ்பெயின் நாட்டின் பெரும் பகுதியை மூர் இனத்தவர்கள் அடக்கியாண்டு கொண்டிருந்தபோது, பெரும் எண்ணிக்கையிலான கிறீஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருந்த கேரவாக்காவின் அரசன் ஒருவனின் இருதயம் அவர்கள் மீது ஒரு பரிதாப உணர்வால் தொடப் பட்டது.

அவன் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கட்டளையிட்டு, அவர்கள் அனைவரும் தன் முன் வரும்படி கட்டளையிட்டான். அதன்பின் அவன் அவர்கள் ஒவ்வொரு வரிடமும் தனித்தனியாக அவனவன் தொழில் அல்லது கைவேலை என்ன என்று விசாரித்து, அந்த வேலையைச் செய்ய அனுமதியும் கொடுத் தான். விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒரு குருவும் இருந்தார்.

தம்மிடமும் இதே கேள்வி கேட்கப்பட்ட போது, எல்லாம் வல்ல சர்வேசுரனையே பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இழுத்து வர வல்லமை பெற்றது தமக்குத் தரப்பட்ட தேவ அழைத்தல் என்று அவர் கூறினார். இந்த வல்லமை தமக்கு இருப்பதை அவர் எண்பிக்க வேண்டும் என்ற தன் ஆசையை அரசன் வெளியிட, திவ்விய பலிபூசை நிறைவேற்ற கிறீஸ்தவ குருக்களுக்குத் தேவையான அனைத்தும் தமக்குக் கிடைத்தாலன்றி, தம்மால் அரசனது ஆசையை நிறை வேற்ற இயலாது என்று குருவானவர் பதிலளித்தார்.

எனவே தேவையான அனைத்தையும் எழுதித் தரும்படி அரசன் கட்டளையிட்டான். குரு ஒன்றைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் எழுதினார். பாடுபட்ட சுரூபத்தை அவர் அடியோடு மறந்து விட்டார். அனைத்தும் கொண்டு வரப்பட்டு, தாம் பூசை தொடங்கத் தயாராகும் வரை அவர் இதைக் கண்டுபிடிக்கவில்லை. பிறகு பாடுபட்ட சுரூபம் இல்லாததைக் கண்டு மிகுந்த கவலையடைந்த குரு, அது இல்லாமல் பூசை வைப்பதா கூடாதா என்ற குழப்பத்திற்கு உள்ளானார்.

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்ட அரசன், அவரது குழப்பத்திற்குக் காரணத்தை வினவினான். குரு தம் கலக்கத்திற்கான காரணத்தை மறைக்காமல், தாம் பாடுபட்ட சுரூபத்தைக் குறிப்பிட மறந்து விட்டதாகவும், அது இல்லாமல் பூசை வைப்பது சரியா இல்லையா என்பது தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.

இந்தப் பிரச்சினையில் தமக்கு உதவுமாறு அவர் கடவுளை மன்றாடிக்கொண்டிருக்க, இதோ, பீடம் அமைக்கப்பட்டிருந்த அறையின் கல்லாலான வளைவான கூரை திறந்தது. சூரியனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்த இரு தேவதூதர்கள், விலையேறப் பெற்ற ஆடைகள் அணிந்தவர்களாக, மரத்தாலான ஒரு சுடர் வீசும் மிகப் பெரிய பாடுபட்ட சுரூபம் ஒன்றைத் தாங்கியபடி இறங்கி வந்தார்கள்.

அவர்கள் அதைப் பீடத்தின் மேல் வைத்து, பூசையைத் தொடங்கும்படி குருவிடம் கூறினார்கள்! அரசனும், கூடியிருந்த அனைவரும், அச்சத்தால் நிரப்பப்பட்டவர்களாக முகங்குப்புறத் தரையில் விழுந்தார்கள், மோட்சத்திலிருந்து வந்தவர்கள் மறைந்து போகும் வரை, இவர்கள் அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியவில்லை.

சம்மனசுக்களை இவர்கள் தெய்வங்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். அதன்பின் சர்வ வல்லப தேவனைப் பரலோகத்தில் இருந்து இறங்கி வரச் செய்ய குருவானவருக்கு இருந்த வல்லமையை அவர்கள் சந்தேகிக்கவேயில்லை.

கிறீஸ்தவ வேதமே உண்மையான வேதம் என்பதை அவர்கள் மனதார ஏற்றுக் கொண்டார்கள். இந்தத் திருச்சிலுவை இன்றும் ஸ்பெயினிலுள்ள கேரவாக்காவில் பாதுகாக்கப்பட்டு, பெரிதும் மதித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது.