1. ஆதாம் பாவத்தில் விழுந்த பிறகு சர்வேசுரன் மனிதனைக் கைவிட்டு விட்டாரா?
ஆதாம் பாவத்தில் விழுந்த பின் சர்வேசுரன் மனிதனைக் கைவிட்டு விடவில்லை. மாறாக, மனிதனை அவனது பாவங்களிலிருந்து விடுவித்து, மோட்சத்தின் கதவுகளை மீண்டும் திறக்கும் படியாக உலகிற்கு ஒரு இரட்சகரை அனுப்புவதாக அவர் வாக்களித்தார்.
2. சகல மனிதர்களுக்கும் இரட்சகராக இருக்கிறவர் யார்?
சேசுக் கிறீஸ்து நாதர்.
3. கத்தோலிக்கத் திருச்சபை சேசுகிறீஸ்து நாதரைப் பற்றிப் போதிக்கிற பிரதான போதனை என்ன?
சேசுக் கிறீஸ்து நாதர் மனிதனாக அவதரித்த சர்வேசுரனாக இருக்கிறார் என்பதுதான் கத்தோலிக்கத் திருச்சபை சேசுகிறீஸ்து நாதரைப் பற்றிப் போதிக்கிற பிரதான போதனை ஆகும்.
4. சேசுக்கிறீஸ்து நாதர் ஏன் சர்வேசுரனாக இருக்கிறார்?
ஏனென்றால் அவர் சர்வேசுரனுடைய ஏக சுதனாகவும், தமது பிதாவின் தேவ சுபாவத்தையே தாமும் கொண்டிருக்கிறவராகவும் இருக்கிறார்.
5. சேசுக்கிறீஸ்து நாதர் ஏன் மனிதனாக இருக்கிறார்?
ஏனென்றால் அவர் மகா பரிசுத்த கன்னி மாமரியின் திருக்குமாரனாகவும் நம்மைப் போல் ஒரு சரீரத்தையும் ஆத்துமத்தையும் கொண்டிருக்கிறவராகவும் இருக்கிறார்.
6. சேசுக்கிறீஸ்து நாதரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்கள் இருக்கிறார்களா?
இல்லை. அவர் ஒரே ஒரு ஆளாக இருக்கிறார். அந்த ஆள் பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாவது ஆள்தான்.
7. சேசுக் கிறீஸ்து நாதருக்கு எத்தனை சுபாவங்கள் உண்டு?
சேசுக் கிறீஸ்து நாதருக்கு தேவ சுபாவம், மனித சுபாவம் என்ற இரண்டு சுபாவங்கள் உண்டு.
8. தேவ சுதனானவர் எப்போதும் ஒரு மனிதனாக இருந்தாரா?
இல்லை. தேவ சுதன் எப்போதும் ஒரு மனிதனாக இருக்கவில்லை. மனித அவதாரத்தின் நேரத்தில் இருந்துதான் மனிதன் ஆனார்.
9. மனிதாவதாரம் என்பதன் அர்த்தம் என்ன?
தேவ சுதனானவர் தமது தேவ சுபாவத்தை இழக்காமலே தம்மோடு மனித சுபாவத்தை, அதாவது நாம் கொண்டிருப்பது போல ஒரு சரீரத்தையும் ஆத்துமத்தையும் இணைத்துக் கொண்டார் என்று அர்த்தமாம்.
10. சர்வேசுரனுடைய திருச்சுதன் எப்படி மனிதன் ஆனார்?
சர்வேசுரனுடைய திருச்சுதன் இஸ்பிரீத்து சாந்துவின் வல்லமையால் மகா பரிசுத்த கன்னி மாமரியின் திருவுதரத்தில் கற்பமாய் உற்பவித்து மனிதன் ஆனார்.
11. தேவ சுதன் இப்படி உற்பவித்து மனிதன் ஆனது எப்போது?
மிகப் பரிசுத்த கன்னி மாமரி சர்வேசுரனுடைய திருமாதாவாக ஆகப் போகிறார்கள் என்பதைக் கபிரியேல் சம்மனசானவர் அவர்களுக்கு அறிவித்த மங்கள வார்த்தைத் திருநாளன்று தேவசுதன் உற்பவமாகி மனிதன் ஆனார்.
12. அர்ச். சூசையப்பர் சேசுக் கிறீஸ்துநாதரின் தகப்பனா?
சேசுக் கிறீஸ்து நாதருக்கு மனித சுபாவத்தின்படி, தகப்பன் யாரும் கிடையாது. அர்ச். சூசையப்பர் மிகப் பரிசுத்த கன்னி மாமரியின் கணவராகவும், சேசுக்கிறீஸ்து நாதரின் பாதுகாவலராகவும், அதாவது வளர்ப்புத் தந்தையாகவும் இருக்கிறார்.
13. கிறீஸ்துநாதர் எப்போது பிறந்தார்?
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கிறீஸ்துநாதர் பெத்லகேமில் கிறீஸ்துமஸ் திருநாளன்று மகா பரிசுத்த கன்னி மாமரியிடமிருந்து பிறந்தார்.
14. பரம இரகசியம் ஆவதென்ன?
நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாததும், சர்வேசுரன் தாமே அறிவித்திருக்கிற படியால் நாம் உறுதியாக விசுவசிக்கிறதுமான ஒரு சத்தியமே பரம இரகசியம் ஆகும்.
15. இரட்சணியம் என்பதன் அர்த்தம் என்ன?
மனுக்குலம் முழுவதின் இரட்சகர் என்ற முறையில் சேசுக்கிறீஸ்து நாதர் மனிதர்களுடைய பாவங்களுக்குத் தகுதியுள்ள பரிகாரமாகத் தமது திருப்பாடுகளையும், மரணத்தையும் தமது பிதாவுக்கு ஒப்புக் கொடுத்து, மனிதர்கள் திரும்பவும் கடவுளின் பிள்ளைகளாகவும், பரலோகத்திற்கு வாரிசுகளாகவும் ஆகும் உரிமையை அவர்களுக்குப் பெற்றுத் தந்தார் என்பதே இரட்சணியம் என்பதன் அர்த்தமாகும்.