முதல் வாசகம் (Lectio-I)
பரிசுத்த மரியாயே, கன்னியர்களின் கன்னிகையே, அரசர்க்கரசரின் தாயும், குமாரத்தியுமானவர்களே! உமது ஆறுதல்களை எங்கள் மீது பொழிந்தருளும். உமது வழியாகவே பரலோக ராஜ்யத்தின் சம்பாவனையையும், சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்டவர்களுடன் நித்திய காலம் அரசு புரியும் பாக்கியத்தையும் நாங்கள் பெறுவோமென்கிற உமது ஆறுதலை எம்மீது பொழிந்தருளும். ஆனாலும், ஓ ஆண்டவரே! தேவரீர் எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முதல்: சர்வேசுரனுக்கு நன்றி உண்டாவதாக!
பதில்: ஓ பரிசுத்தமும், அமலோற்பவமுமான கன்னிகையே! உம்மை எப்படி புகழ்ந்தேத்துவேன் என்பதை அறியாமலிருக்கிறேன். ஏனெனில் பரமண்டலங்களே கொள்ள முடியாதவருக்கு நீர் அமுதூட்டினீர்!
முதல்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.
பதில்: ஏனெனில், பரமண்டலங்களே கொள்ள முடியாதவருக்கு நீர் அமுதூட்டினீர்!
முதல்: பிதாவே, உமது ஆசீரை அளிக்குமாறு மன்றாடுகிறோம்.
ஆசீர்: தேவதாயார் நமக்கு சகாயஞ் செய்கிறவர்களாக இருப்பார்களாக.
பதில்: ஆமென்.
இரண்டாம் வாசகம் (Lectio-II)
ஓ பரிசுத்த மரியாயே! இரக்கங் காட்டுபவர்கள் அனைவரிலும், மேலான இரக்கம் காட்டுபவர் நீரே! எல்லாப் பரிசுத்தரிலும் மகா பரிசுத்தமானவர் நீரே! எங்களுக்காக மன்றாடும். ஓ பரிசுத்த கன்னிகையே! உம்மிடமிருந்து பிறந்தவரும் பரமண்டலங்களுக்கு மேலாக ஆட்சி புரிபவருமானவர், உமது வழியாக எங்களது ஜெபத்தை ஏற்றுக் கொண்டு, அவரது நேசமுள்ள இரக்கத்தால் எங்களது பாவங்களையயல்லாம் நீக்கி, எங்களைச் சுத்தப்படுத்துவார். ஆனாலும் ஓ ஆண்டவரே! தேவரீர் எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முதல் : சர்வேசுரனுக்கு நன்றி உண்டாவதாக!
பதில்: ஓ கன்னிமரியாயே, நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர். நீரே பூவுலகை சிருஷ்டித்த ஆண்டவரைத் தாங்கினீர். நீரே உம்மை உண்டாக்கினவருக்கே பிறப்பையளித்தீர். எப்பொழுதும், என்றென்றும் கன்னிகையாயிருக்கின்றீர்.
முதல் : அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே.
பதில்: நீரே உம்மை உண்டாக்கினவருக்கே பிறப்பையளித்தீர். எப்பொழுதும், என்றென்றும் கன்னிகையாக இருக்கின்றீர்.
முதல் : தந்தையே, உம்மை மன்றாடுகிறோம். உமது ஆசீர் அளித்தருளும்.
ஆசீர்: கன்னித்தாயான பரிசுத்த மாமரி, தமது திவ்ய பாலனுடன் நம்மை ஆசீர்வதிப்பார்களாக.
பதில் : ஆமென்.
மூன்றாவது வாசகம் (Lectio-III)
ஓ கடவுளின் பரிசுத்த மாதாவே, நீரே பூவுலகம் அனைத்தும் கொள்ள முடியாதவரை கர்ப்பந்தரித்து உற்பவிக்கும் பாக்கியம் பெற்றவர். உமது அன்பான பரிந்துரையினால் எங்கள் பாவங்களைப் போ க் கி ய ரு ளும்; அதனால் மீட்டு இரட்சிக்கப்பட்ட நாங்கள், தேவரீர், உமது திவ்ய சுதனுடன் முடிவில்லாத காலங்களுக்கும் ஆட்சி புரிந்து வரும் நித்திய மகிமையின் சிம்மாசனத்திற்கு உம்மால் ஏறிச் செல்வோமாக! ஆனாலும் ஓ ஆண்டவரே! தேவரீர் எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முதல்: சர்வேசுரனுக்கு நன்றி உண்டாவதாக!
பதில் : ஆம், சர்வேசுரனின் பரிசுத்த மாதாவே! நீர் மகிழ்ச்சியுடையவர்; எல்லா புகழ்ச்சிக்கும் தகுதியானவர். ஏனெனில், உம்மிடமிருந்தே நீதியின் சூரியனும் கிறீஸ்துவுமான எங்கள் கடவுள் எழுந்தருளினார்.
முதல்: ஜனங்களுக்காக வேண்டிக்கொள்ளும், குருக்களுக்காக மன்றாடும். பக்தியுள்ள பெண்களுக்காக பரிந்துபேசும். உமது சகாயத்தின் வல்லமையை அனைவரும் உணர்ந்து உமது ஆசீர்வதிக்கப்பட்ட நினைவைக் கொண்டாடுவார்களாக!
பதில்:ஏனெனில் உம்மிடமிருந்தே நீதியின் சூரியனும், கிறீஸ்துவுமான எங்கள் கடவுள் எழுந்தருளினார்.
முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமையுண்டாவதாக.
பதில்: எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதருக்கும் மகிமை உண்டாவதாக.
(ஞாயிறு மற்றும் திருநாட்களில் தே தேயும் தவிர்க்கப் படும் போது கீழே காணும் பகுதியைச் சேர்த்துக் கொள்ளவும்.)
பதில்: ஓ சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! நீர் மகிழ்ச்சியுள்ளவர். எல்லாப் புகழ்ச்சிக்கும் தகுதியானவர். ஏனெனில் உம்மிடமிருந்தே நீதியின் சூரியனும் கிறீஸ்துவுமான எங்கள் கடவுள் எழுந்தருளினார்.
(கட்டளை ஜெபத்தில் தே தேயும் பாடல் எப்பொழுதெல்லாம் குறிக்கப் படவில்லையோ, அப்பொழுதெல்லாம் தவிர்க்கப் படும்).1