கத்தோலிக்கர்கள் அதிக அளவில் புரியும் அற்ப பாவங்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அது மிகக் கடினம்.
அ. சுய அன்பு, சுயநலம், எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் பலவிதமான மோக பாவங்கள், சிந்தனை, சொல், செயல்களில் பிறர் நலம் பேணாமை, சோம்பல், தற்பெருமை, பொறாமை, எரிச்சல் ஆகியவைகளால் இழைக்கும் பாவங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
ஆ. நாம் புரியும் பல பாவங்கள் நம் கவனத்தில்கூட இருப்பதில்லை. பல ஆயிரம் மடங்கு அன்பு செலுத்த கடமைப்பட்டுள்ள நம் கடவுளுக்கு மிகச் சிறிய அளவிலேயே அன்பை செலுத்துகிறோம். குறைந்தபட்ச நன்றியுணர்வுகூட இன்றி அவரை பொருட்படுத்தாமலேயே இருந்துவிடுகிறோம்.
இ. நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் மரித்தார். இதற்காக நாம் செலுத்த வேண்டிய அளவு நன்றியினை அவருக்கு செலுத்தியுள்ளோமா? நமக்கு உதவி செய்யும் ஆவலோடு இரவும் பகலுமாக பலிபீடத்தில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எவ்வளவு அரிதாக நாம் அவரிடம் செல்கிறோம் திவ்ய நற்கருணை மூலமாக நம் உள்ளத்தில் எழுந்தருளிவர ஆசையோடு இருக்கிறார் . ஆனால் நாம் அவர் வரவை அனுமதிப்பதில்லை. தினமும் திருப்பலியில் நமக்காக பல்பீடத்தில் மரித்து, அப்பலியில் பங்கேற்கிற அனைவரும் அளவற்ற அருட்கொடைகளை வாரி வழங்கினாலும் இக்கல்வாரி பலிக்குச் செல்ல பலருக்கு சோம்பேறித்தனம் இதனால் இறையருளை வீணடிக்கிறோம்.
ஈ. நமது இருதயத்தை தன்னலம், சுயவிருப்பம் மற்றும் இழிசெயல்கள் என கடினப்படுத்தி வைத்துள்ளோம். நமக்கு போதிய உணவு, அருமையான உறைவிடம், தேவைக்கேற்ப உடைகள் என அளவற்ற வசதிகள் உள்ளன. நம்மைச் சுற்றி பலரும் ஏழ்மை நிலையிலும், பசியிலும் வாழ்கின்றபோது அவர்களுக்கு மிகக் குறைந்த உதவிகளே செய்துவிட்டு, நமக்காக ஆடம்பரமாகவும் , தேவையற்ற செலவு செய்துகொள்கிறோம்.
கடவுளுக்கு ஊழியம் புரிந்து, நமது ஆன்மாவை இரட்சித்துக் கொள்ளவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் காலை 5 நிமிடம், இரவு 5 நிமிடம் செபிப்பதில் திருப்தியடைந்து விட்டு, 24மணி நேரத்தில் மீதமுள்ள நேரத்தை வேலை, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக செலவிடுகின்றனர். 10நிமிடம் மட்டுமே கடவுளுக்கு ஒதுக்கிவிட்டு, அதாவது நமது அழியாத ஆன்மாவின் இரட்சிப்புக்கு நாம் செய்ய வேண்டிய மிகப் பெரிய பணிக்கு 10 நிமிடத்தை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 23 மணி மற்றும் 50 நிமிடங்களை நிலையற்ற உலக வாழ்விற்காக செலவு செய்கிறோமே, இது கடவுளுக்கு ஏற்புடைய செயலா?
நமது வேலை, ஓய்வு மற்றும் கஷ்டங்கள் அனைத்தையும் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பெரிதாக இருக்கும். ஆனால் பகல் பொழுதில் மிக அரிதாகவே கடவுளை நினைக்கின்றனர் என்பதே உண்மை. அவர்களது நினைவை பெரிதும் ஆக்கிரமிப்பது தங்களைப் பற்றிய நினைவுகளே.தங்களது எண்ணம், வேலை, ஓய்வு மற்றும் உறக்கம் அனைத்தையுமே தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ளவே மேற்கொள்கின்றனர். அவர்களது எண்ணங்களிலும், செயல்களிலும், கடவுளுக்கு மிகச் சிறிய இடமே ஒதுக்கப்படுகிறது. இது எப்பொழுதும் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் தேவனின் அன்பான இருதயத்திற்கு இழைக்கப்படும் துரோகம். என்பது நாம் அறிகின்றோமா???
சிந்திப்போம் மிஞ்சிய நாட்களில் நம்மை நாம் இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ தேவமாதாவின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக மூவொரு இறைவன் பாதம் ஒப்புக் கொடுப்போம். ஆமென்.