கத்தோலிக்க திருச்சபை அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். டிசம்பர் 31, 2008 ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயப்பிரிவாகும். ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். திருத்தந்தை கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார்.
கத்தோலிக்க திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.
இத்திருச்சபை ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகும்.
கிரேக்கத்தில் எக்ளேசியா (ekklesia - ἐκκλησία) என்றும் இலத்தீனில் ecclesia என்றும் அமைந்த மூலச் சொல்லுக்கு மக்கள் கூட்டம்/குழு/அவை/சபை (assembly, congregation, church community) என்பது பொருள். ஆங்கிலத்தில் church என்றுள்ள சொல் பழைய ஆங்கிலத்தில் இருந்த "cirice" என்னும் சொல்லின் திரிபு. அச்சொல் "kirika" என்னும் மேற்கு செர்மானிய மூலத்திலிருந்து வருவது. அதற்கும் அடிப்படையாக இருப்பது கிரேக்க மூலம். கிரேக்க மொழியில் kurios (κύριος) என்பது ஆண்டவர், தலைவர், மேல்நர் என்னும் பொருள்தரும். இச்சொல் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு கிறித்துவைக் குறிக்க கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆண்டவராகிய இயேசு கிறித்துவைச் சார்ந்தவர் குழு/சபை என்பது கிரேக்கத்தில் ekklēsia kuriakē (ἐκκλησία κυριακή =congregation of the Lord). இவ்வாறு church என்னும் சொல் திருச்சபை என்றும், திருச்சபையினர் கூடி வந்து வழிபாடு நடத்துகின்ற கோவில் என்றும் இருபொருள்கள் பெறலாயிற்று.
கத்தோலிக்க என்னும் சொல்லும் கிரேக்க மொழியிலிருந்து வருவதே. இலத்தீனில் catholicus என்பதன் கிரேக்க மூலம் katholikos (καθολικός). அதன் பொருள் பொதுவான, எங்கும் பரந்த, அனைத்தையும் உள்ளடக்குகின்ற என்பது. உரோமையை மைய இடமாகக் கொண்ட கிறித்தவ திருச்சபை கத்தோலிக்க என்னும் பெயரைத் தன் அடைமொழியாகக் கொண்டது. எனவே அத்திருச்சபை உரோமை கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church = R.C. Church) என்னும் பெயராலும் அழைக்கப்படுவதுண்டு. இன்றைய உலகில் கத்தோலிக்க திருச்சபையே பிற கிறித்தவ சபைகளைவிட விரிந்து பரந்து காணப்படுகிறது. அதன் தலைவராகிய போப்பாண்டவரும் உலகறிந்த தலைவராக உள்ளார்.
இக்கட்டுரையில் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் நிகழ்ந்த முதன்மை நிகழ்ச்சிகள் கால வரிசையில் (Timeline) பட்டியலிடப்படுகின்றன. பொது நிகழ்ச்சிகளே குறிக்கப்படுவதால் இந்தியா, இலங்கை போன்ற தனி நாடுகளின் திருச்சபை வரலாறு பற்றிய விவரமான வரலாற்றினை வேறு இடங்களில் காணலாம்.
இயேசு கிறித்துவால் தோற்றுவிக்கப்பட்ட சபை திருச்சபை என்று அழைக்கப்படுகிறது. அத்திருச்சபை கத்தோலிக்க திருச்சபையில் உறைகிறது என்பது கத்தோலிக்க கொள்கை. பிற கிறித்தவ சபைகளிலும் கிறித்தவக் கொள்கைகளும் பண்புகளும் உள்ளன என்பதைக் கத்தோலிக்கர் மறுப்பதில்லை. என்றாலும், தன்னகத்தே கிறித்தவ வெளிப்பாட்டின் முழுமை உள்ளது என்பது கத்தோலிக்க சபையின் உறுதிப்பாடு.