நித்திய பிதாவே, தேவரீருடைய அதிமிக நேச குமாரனாகிய சேசுநாதர் சிலுவையில் நிறைவேற்றி, இப்போது இந்தப் பரிசுத்த பீடத்தில் புதுப்பிக்கும் அவருடைய பலியை, உலகத்தின் எத்திசையிலும் இதுவரை செய்யப்பட்டதும், இனி செய்யப்படப் போவதுமான பூசைப் பலிகளோடும், அடியேன் கல்வாரி மலையின் மேல் எங்கள் வியாகுலத் தாயானவள் கொண்டிருந்த கருத்துகளோடும், பற்றுதல்களோடும் ஒன்றித்து, படைக்கப்பட்ட எல்லாவற்றின் பேரால் தேவரீருக்கு ஒப்புக் கொடுத்து:
முதலாவது: தேவரீர் எல்லாப் படைப்புகள் மீதும் சர்வ அதிகாரம் உடையவர் என்றும், எங்களுடைய ஒரே கடைசிக் கதியாகிய உமக்கு சகலமும் முழுதும் கீழ்ப்பட்டவை என்றும் விசுவசிக்கிற நான் தேவரீரை ஆராதித்து, உமக்கு உரிய ஆராதனையைச் சமர்ப்பிக்கின்றேன்.
இரண்டாவது: தேவரீரிடம் நான் பெற்றுக் கொண்ட எண்ணிறந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்துகிறேன்.
மூன்றாவது: நான் செய்த கணக்கற்ற பாவங்களால் கோபங் கொண்டிருக்கும் உமது தேவ நீதியைச் சாந்தப் படுத்தி, அவைகளுக்காகப் பரிகாரமுஞ் செய்கிறேன்.
நான்காவது: எனக்காகவும், திருச்சபைக்காகவும், (இன்னாருக்காகவும்) துன்பப் படுகிறவர்கள், வருந்துகிறவர்கள் அனைவருக்காகவும் பாவிகள் எல்லோருக்காகவும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப் படுகின்ற பரிசுத்த ஆத்துமங்களுக்காகவும், வரப்பிரசாதத்தையும் இரக்கத்தையும் மன்றாடுகிறேன். ஆமென்.