உறுதிப்பூசுதல் சடங்குகள்

1. உறுதிப் பூசுதல் எவ்வாறு வழங்கப்படுகின்றது?

(1) உறுதிப் பூசுதல் வழங்க இருக்கும் ஆயர், அதைப் பெற இருப்பவர்களை நோக்கித் தமது கரங்களை நீட்டியபடி, இஸ்பிரீத்து சாந்துவானவர் தமது ஏழு கொடைகளோடு அவர்கள் மீது இறங்கி வருமாறு ஜெபிக்கிறார்.

(2) அவர்கள் ஒவ்வொருவர் மீதும் தமது கரத்தை வைக்கிறார். உறுதிப் பூசுதல் பெறுபவரின் நெற்றியில் கிறீஸ்மா தைலத்தால் சிலுவை அடையாளம் வரைந்த படி, அனுமான வார்த்தைகளை உச்சரிக்கிறார்.

(3) அவர்கள் ஒவ்வொருவரின் கன்னத்திலும் மெதுவாகத் தட்டுகிறார். இறுதியாக உறுதிப் பூசுதல் பெற்ற அனைவருக்கும் தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்.


2. ஏன் நெற்றியில் கிறீஸ்மா தைலம் கொண்டு சிலுவை அடையாளம் வரையப் படுகிறது?

(1) சிலுவைப் பலியின் பலனாக மட்டுமே தேவத்திரவிய அனுமான வரப்பிரசாதம் வழங்கப் படுகிறது என்பதை நமக்குக் கற்பிப்பதற்காகவும்,

(2) சிலுவையில் அறையுண்ட கிறீஸ்துநாதரின் மீது தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தைத் தைரியமாக அறிக்கையிடுவதில் அவர்கள் வெட்கப் படக் கூடாது என்பதை அவர்களுக்கு நினைவுறுத்தும் படியாகவும், ஒரு அழியாத ஞான முத்திரையைக் கொண்டு இஸ்பிரீத்து சாந்துவில் முத்திரையிடப் படுகிறது. இதன் மூலம் அவர்கள் கிறீஸ்துவின் ஊழியத்தில் எக்காலத்திற்குமாக சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு அறிவிக்கும்படியாகவும் நெற்றியில் கிறீஸ்மா தைலம் கொண்டு சிலுவை அடையாளம் வரையப் படுகிறது.


3. தாம் உறுதிப்படுத்துகிற ஒரு விசுவாசியின் மீது எண்ணெய் பூசும் போது ஆயர் உச்சரிப்பது என்ன?

“சிலுவை அடையாளத்தை உன் மீது வரைகிறேன். பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்துவின் நாமத்தினாலே, இரட்சணியத்தின் கிறீஸ்மாவைக் கொண்டு நான் உன்னை உறுதிப் படுத்துகிறேன்” என்று அவர் கூறுகிறார்.


4. உறுதிப் பூசுதல் பெற்றவர்களின் கன்னத்தில் தட்டும்போது, ஆயர் என்ன கூறுகிறார்?

“உனக்கு சமாதானம் உண்டாவதாக” என்று கூறுகிறார்.


5. இப்படி கன்னத்தில் தட்டுவது எதைக் குறிக்கிறது?

துன்பப் படுவதற்காகவும், தேவையானால் கிறீஸ்துநாதருக்காக மரிக்கவும் கூட தயாராக இருக்க உறுதிப் பூசுதல் மூலம் தாங்கள் பலப்படுத்தப் பட்டுள்ளதை அது நினைவூட்டுகிறது.


6. உறுதிப்பூசுதல் பெறுபவர்கள் வெளியரங்கமாகத் தங்களை எவ்வாறு ஆயத்தம் செய்ய வேண்டும்?

(1) அவர்கள் ஒழுங்காகவும் அடக்கமாகவும் உடைகள் அணிந்திருக்க வேண்டும்.

(2) அவர்கள் தங்கள் நெற்றிகளைச் சுத்தமாக வைத்திருப்பதோடு, தங்கள் நெற்றியைத் தலைமுடி மறைக்காதபடி தலைசீவி இருக்க வேண்டும்.

(3) தங்கள் கரங்களை நெஞ்சின் மீது குவித்தபடி, உரிய வணக்கத்தோடும் பக்தியோடும் அவர்கள் பீடத்தை அணுகிச் செல்ல வேண்டும்.


7. உறுதிப்பூசுதல் பெற முழந்தாளிடும் போது ஆயரின் உதவியாளரிடம் நாம் கொடுக்க வேண்டியது என்ன?

உறுதிப் பூசுதலின்போது நாம் தேர்ந்தெடுக்கும் புனிதரின் பெயர், நமது ஞானஸ்நானப் பெயர், குடும்பப் பெயர் மற்றும் ஞானத்தாய் அல்லது ஞானத் தந்தையின் பெயர் ஆகியவை அடங்கிய ஒரு சிறு அட்டையை நாம் அவரிடம் கொடுக்க வேண்டும்.


8. உறுதிப்படுத்தப் பட இருக்கும் வேளையில் அதைப் பெற இருக்கிறவர்கள் என்ன செய்யவேண்டும்?

(1) அவர்கள் அதிகப் பக்திப் பற்றுதலோடும் ஆர்வத்தோடும் இஸ்பிரீத்து சாந்துவின் கொடைகளுக்காக மன்றாட வேண்டும்.

(2) கிறீஸ்துவின் பிரமாணிக்கமுள்ள வீரர்களாக வாழ்வதாகவும் சாவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும்.

(3) இந்தப் பரிசுத்த சடங்கின் தொடக்கத்திலிருந்து, ஆயர் இறுதியாக ஆசீர்வாதம் வழங்கும் வரை அவர்கள் அங்கு இருக்க வேண்டும்.


9. உறுதிப்பூசுதலின் போது ஒரு புதுப்பெயர் ஏற்றுக் கொள்ளப்படுவது எதனால்?

(1) கடவுளுக்கு முன் தனக்காகப் பரிந்து பேசுபவராகத் தான் தேர்ந்து கொள்ளும் மற்றொரு பாதுகாவலரான அர்ச்சிஷ்டவரின் பாதுகாவலில் தன்னை வைக்கும்படியாகவும்,

(2) இந்தப் புதிய பாதுகாவலரின் உன்னதமான வாழ்வைக் கண்டு பாவித்து, தனது மரணம் வரையிலும் அதில் நிலைத்திருக்கும் படியாகவும் அவர் ஒரு புதுப் பெயரைப் பெற்றுக் கொள்கிறார்.


10. தாம் உறுதிப் படுத்தியுள்ளவர்கள் எந்தப் பரிகாரத்தைச் செய்யும் படி ஆயர் அவர்களிடம் கூறுகிறார்?

அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம், பரலோக மந்திரம் மற்றும் அருள் நிறை மந்திரம் ஆகியவற்றைப் பரிகாரமாக ஜெபிக்கும் படி அவர்களிடம் அவர் கூறுகிறார்.