அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரின் பிறப்பின் வரலாறு:
புனிதர்களின் சமூக உறவையும் விசுவசிக்கிறேன் என்று நாம் விசுவாசப் பிரமாணத்திலே அறிக்கையிடுகின்றோம். ஏனென்றால் புனிதர்கள் என்பவர்கள் இறைவனின் பல்வேறு கொடைகளால் நிரப்பப்பட்டவர்கள். வாழ்வின் நிறைவிற்கு உயர்த்தப்பட்டவர்கள். நித்திய மீட்பு பெற்று விண்ணகத்திலே இறைவனின் நிறைவான புகழினை பாடுகிறார்கள். அத்தோடு, நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுபவர்கள். இந்த அரும்பெரும் நிலைக்கு உயர்த்தப்பட அவர்கள் இறைவனின் திருவுளத்தை மட்டுமே நிறைவேற்றினார்கள். இந்த புதிய பயணத்திலே புனிதர்கள் அனைத்தையும் துறந்து இறைவனே எனது சரணாலயம் என்று வாழ்ந்தவர்கள். அந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் நம் புனிதர் ஆரோக்கியநாதர்.
பிரான்ஸ் நாட்டிலே மாண்ட்பெல்லியர் என்ற இடத்திலே கி.பி. 1295–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16–ம் தியதி நம் புனிதர் அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர் பிறந்தார். சரியாக இந்த நாளில்தான் பிறந்தார் என்ற வரலாற்றுக் குறிப்பு அதிகமாக இல்லாதபொழுதும் பாரம்பரியமாக ஆகஸ்ட் 16–ம் தியதிதான் பிறந்தார் என்று நம்பப்படுகிறது.
ரோக் என்று அழைக்கப்பட்ட ஆரோக்கியநாதரின் தந்தை அந்த இடத்திலே ஆளுநராக இருந்தார். இவருடைய குடும்பம் மிகுந்த செல்வச் செழிப்போடும், மிகுந்த செல்வாக்கோடும் காணப்பட்டது. மதிப்பும், மரியாதையும் எல்லா இடங்களிலும் தானாக இந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. எல்லாம் பெற்றிருந்த ஆராக்கியநாதருடைய பெற்றோருக்கு ஒரே ஒரு குறை காணப்பட்டது. அதாவது திருமணமாகி பல வருடங்கள் ஆன பின்னும் அந்த குடும்பத்திலே குழந்தை இல்லை. ஆனால் ஆரோக்கியநாதருடைய பெற்றோர் நம்பிக்கை இழக்கவில்லை. கண்டிப்பாக ஒருநாள் ஆண்டவர் தங்கள்மீது இரக்கம் கொள்வார் என்ற உறுதியோடு இருந்தனர்.
அர்ச்சியசிஷ்ட ஆரோக்கிய நாதரின் பெற்றோர் பக்தி காரியங்களிலே முனைப்போடு செயல்பட்டவர்கள். ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசுவிடத்தும், அன்னை மரியாவிடத்தும் மனம் உருகி வேண்டுவார்கள். தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பதாக, இறைபணி செய்வதர்க்காக அனுப்பி வைப்போம் என்று வேண்டிக் கொண்டிருந்தனர். நாட்கள் கடந்தன. எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்காதா? எங்கள் வாழ்வு மலராதா? ஆண்டவருடைய மீட்பு எங்கள் மீது இறங்காதா? என்று பல வருடம் பக்தியோடும், நம்பிக்கையோடும் செபித்த ஆரோக்கிய நாதரின் பெற்றோர் தங்களது முதிர்ந்த வயதில் ஆண்டவரின் மீட்பைக் கண்டார்கள்.
என்ன ஆச்சரியம்! சக்கரியா எலிசபெத் குடும்பம் முதிர்ந்த வயதில் திருமுழுக்கு யோவானைப் பெற்றெடுத்தது போன்று, அர்ச்சியசிஷ்ட ஆரோக்கிய நாதரின் பெற்றோருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அற்புதமாக ஆண்டவர் இயேசுவின் துணையினால் பிறந்த அக்குழந்தையின் மார்பிலே சிவப்பு நிறத்தில் ஆண்டவர் இயேசுவின் சிலுவை காணப்பட்டது. பிறப்பிலேயே இயேசுவின் சிலுவையை மார்பிலே சுமந்துகொண்டு பிறந்த குழந்தை அனைவரின் ஆச்சரியத்தையும், கவனத்தையும் ஈர்த்தது.
எல்லோரும் வியப்பில் ஆழ்ந்திருந்தபோது இக்குழந்தையின் பெற்றோர் மட்டும் ஆண்டவரில் மகிழ்ந்திருந்தனர். இறைவனுக்கு தளரா உள்ளத்தோடு நன்றி செலுத்தினர். ஆண்டுகள் பலவான தங்களது வேண்டுதல் கேட்கப்பட்டது என்று பூரிப்படைந்தனர். முதிர்ந்த வயதில் இறைவன் தங்களுக்குக் கொடுத்த அளப்பெரிய செல்வமாம் இத்தெய்வீகக் குழந்தையை தாங்கள் வேண்டியது போன்று இறைவனுக்கு அர்ப்பணிக்கும் நோக்கத்தோடு குழந்தையை வளர்க்கத் தொடங்கினர். ஆனால் இந்த குழந்தை எப்படிப்பட்ட குழந்தையாக இருக்கவேண்டும் என்பதனை இறைவனே தீர்மானித்திருந்தார். ஆண்டவருடைய அளப்பெரும் செயல்கள் இக்குழந்தை வழியாக உலகத்திலே நடைபெறப்போவதை யாரும் உணர்ந்து கொள்ளவில்லை.
அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரின் குழந்தைப் பருவம்:
சாதனையாளர்கள் என்பவர்கள் பெரிய, பெரிய காரியங்களை செய்தவர்கள் அல்ல மாறாக எளிமையான காரியங்களையும் வித்தியாசமாகச் செய்தவர்கள். பிறருக்கு பயனள்ளதாக மாற்றியவர்கள். பிறருக்கு வாழ்வைத் தந்தவர்கள். இந்த வரிசையில் அற்புதமாக இறைதிருவுளம் என்று அனைத்தையும் வித்தியாசமான முறையிலே அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர் செய்து வந்தார்.
குழந்தைப் பருவம் முதலே அர்ச்சியசிஷ்ட ஆரோக்கிய நாதர், ஏழைகள் மீது அதிக அக்கரை கொண்டவர். தனக்கு 5 வயதிருக்கும்போதே, அவர் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டார். யாரும் எதிர்பாராத அந்த மழலைப் பருவத்திலே தான், தூய்மையாக இருக்க வேண்டும் என்பதிலே முனைப்போடு இருந்தார். இதனால் தேவையானவைகளை மட்டுமே உண்பதிலும், ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவதுமாக இருந்தார். சிறு வயதிலேயே, அதாவது 12 வயதிலே, புண்ணியத்தின் பெயரில் மிகுந்த ஆர்வம் காட்டி தவத்தினாலும், ஒறுத்தலினாலும் தன்னை வருத்தி வந்தார்.
தன் தாய் வாரத்தில் இரண்டு நாள்கள் நோன்பிருந்து செபித்து வந்தது போன்று, ஆரோக்கியநாதரும் வாரத்தில் இரண்டு நாள்கள் நோன்பிருந்தார். பால்குடிக்கும் பருவத்திலே தனது தாய் நோன்பிருந்த வாரத்தில் ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே பால் குடித்து வந்தார். அந்த அளவிற்கு நம் புனிதர் இறைவல்லமை பெற்றிருந்தார். அவர் வளர, வளர பிறரன்புப் பணியும் சிறப்பான விதத்திலே அவரில் வளர்ந்து வந்தது.
ஓவ்வொரு நிமிடமும் யாராவது ஒரு நபர் தன்னால் மகிழ்ச்சி காண வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டார். எனவே, தன்னை நாடிவந்த ஏழைகளுக்குத் தாராளமாக உதவி செய்தார். திருப்பயணிகளை ஆதரித்து அவர்களுக்கு வேண்டியதை செய்துகொடுத்தார். குழந்தைப் பருவத்திலே அவர் எடுத்த நிலைப்பாடுதான் பிற்காலத்தில் அவரை ஒரு மாபெரும் புனிதராக மாற்றியது.
அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரும் பிறரன்புப் பணிகளும்:
"தன்னைத்தான் நேசிப்பதுபோல் பிறரையும் நேசி" என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார் நமது புனிதர். இறைத்திட்டமாகத் தான், செயல்படுத்தி வந்த, இந்த சேவைக்கு இடி விழுந்தார்போன்று அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதருடைய பெற்றோர் இறந்தனர். இளம் வயதே ஆன அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர், இந்த இழப்பினால் தளர்ந்து விட்டார். இவ்வுலகில் தனக்கென்று யாரும் இல்லை என்பதனை உணர்ந்தார். சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த ஆரோக்கியநாதர், தனது தாய்மாமனின் பொறுப்பில் வளர்ந்தார். தனிமை தன்னை வாட்டினாலும், நம் புனிதர் தமது பெற்றோரைப்போன்று கடவுளில் அயராத நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
ஆண்டவரில் கொண்டிருந்த அளவில்லா அன்பினால் தனக்குள்ளே ஒரு அழைப்பு இருப்பதனை இளம் வயதிலே நம் புனிதர் உணர்ந்து கொண்டார். தனக்கு 20 வயது ஆனபோது, தான் பிறந்த நாட்டையும், தான் அதிகமாக அன்பு செய்த நண்பர்களையும் விட்டு விலகி அர்ச்சியசிஷ்ட பிரான்சிஸ்குவின் மூன்றாம் சபையில் இணைந்தார்.
அர்ச்சியசிஷ்ட பிரான்சிஸ்கு அசிசியாரின் வாழ்வில் ஆர்வம் கொண்டவராய் அவரைப்போன்று வாழவேண்டும் என்ற உறுதி கொண்டார். ஏழ்மை என்ற விருது வாக்கை மேற்கொண்டு ஏழைகளை அதிகமாக அன்பு செய்யத்தொடங்கினார். தனது பெற்றோரின் அளவிடமுடியாத செல்வத்தைப் பிறருக்கு கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். இதன்வழியாக ஏழைகளை எந்த அளவுக்கு நேசித்தார் என்பது தெரிய வருகிறது. அத்தோடு அவர் நின்றுவிடவில்லை.
ஆளுநராக இருந்த தனது தந்தையின் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டபோது அந்த மிகப்பெரிய பொறுப்பை வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டார். “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக்கொண்டாலும் தனது ஆன்மாவை இழந்தால் பயன் ஒன்றுமில்லை” என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப தன் தந்தையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளை எல்லாம் தனது தாய் மாமனிடம் ஒப்படைத்துவிட்டு உலக ஆசைகளைத் துறந்துவிட்டார்.
அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர், தான் ஒரு திருப்பயணி போன்று ஆடை அணிந்துகொண்டு ரோமாபுரிக்கு வந்தார். ஒவ்வொரு ஊராக கால்நடையாக நடந்துச் சென்றார். செல்வச் செழிப்பிலே வாழ்ந்து வந்த அர்ச்சியசிஷ்ட ஆரோக்கிய நாதருக்கு நடந்து செல்வது கடினமாக இருந்தாலும் அதனை ஒரு ஒறுத்தலாகவே ஏற்றுக்கொண்டார்.
வழிப்பயணத்திலே, தான் நடந்து செல்லுகின்ற பொழுது படை, கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். அவர்கள்மீது பரிவு கொண்டர். கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனைப்படுவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, தான் சந்தித்த ஒவ்வொரு பிணியாளர்களையும் சிலுவை அடையாளம் வரைந்து குணப்படுத்தி வந்தார்.
ஆண்டவரின் வல்லமையைப் பெற்றிருந்த ஆரோக்கியநாதர், படை மற்றும் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒரு வார காலம்வரை தங்கியிருந்து அவர்களை அற்புதமாகக் குணப்படுத்தி வந்தார். இந்த கொள்ளை நோயானது ஒருவித தொற்றுவியாதி. விரைவாக எல்லா இடங்களுக்கும் அதி வேகமாகப் பரவிவந்த வேளையில்; அதனைப் பற்றிய எந்த ஒரு கவலையும் இல்லாமல் தன் கைகளால் தொட்டுக் குணப்படுத்தினார்.
தனக்கு இந்நோய்; பிடித்துவிடுமோ என்ற எண்ணமோ, பயமோ அவருக்கு எழவில்லை. படை மற்றும் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரும் அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரைத் தேடிவந்தார்கள், குணம் பெற்றார்கள். இவ்வாறு தான் இவ்வுலகில் பிறந்தது பிறரன்புப் பணி செய்யவே என்பதனை உலகிற்கு எண்பித்துக் காட்டினார்.
கொள்ளை நோயும் ஆண்டவரின் பராமரிப்பும்:
எந்தவித அச்சமுமின்றி படை நோயாலும், கொள்ளை நோயாலும் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டு மக்களுக்கு சிறப்பான பணி செய்து வந்த அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதருக்கு, அந்நோய் வழியாய் சோதனை பிறந்தது. கொள்ளை நோய்க்கு அஞ்சாமல் பிறரது நோயை குணப்படுத்தி வந்த அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதருக்கு எதிர்பாராமல் படை மற்றும் கொள்ளைநோய் பிடித்தது. தனது உடலில் பல இடங்களில் குறிப்பாக, இடது காலில் முட்டின் சற்று மேலே மிகப் பெரிய ஒரு புண் ஏற்பட்டது.
ஐயோ! தனக்கு இந்த நோய் வந்துவிட்டதே என்று அவர் கவலைப்படவில்லை மாறாக, என்னால் வேறு யாருக்கும் இந்நோய் வரக்கூடாது என்ற ஏக்கம் கொண்டார். எனவே, அவர் இத்தாலி நாட்டில் உள்ள கிராமத்தைவிட்டு வெளியேறி ஒரு காட்டுப் பகுதியிலே பீசன்ஷா என்ற இடத்திலே, ஒரு குகைக்குள் தன்னை அடைத்துக் கொண்டார். தனது வாழ்வின் கடைசி நேரத்திற்காக, குகைக்குள்ளே ஆண்டவரிடத்தில் விடாமல் செபித்துக் கொண்டிருந்தார். நோயின் வலி ஒருபுறம் வருத்த, பசி மறுபுறம் அவரை வாட்டியது. அந்நேரத்தில்தான் ஆண்டவருடைய பாராமரிப்பினை அவர் உணர்ந்து கொண்டார்.
அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர் எதிர்பாராத நேரத்திலே, தனது வாழ்வின் கடைசி நேரத்திற்காக காத்திருந்தபோது, ஒரு நாயானது அந்த இடத்திலே வந்தது. கடுமையான புண்களிலிருந்து வழிந்தோடிய சீழையும், ரத்தத்தையும் தனது நாவால் நக்கி சுத்தப்படுத்தியது. ஆரோக்கியநாதர் விழித்து பார்த்தபோது நாயானது அந்த இடத்திலிருந்து மறைந்தது. ஆனால் சிறிது நேரத்திலே, வாயிலே ஒரு சிறிய அப்பத்தைக்கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தது.
அந்த நாயானது பல நாட்கள் பட்டினி கிடந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தபோதும் தனக்குக் கிடைத்த உணவை அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதருக்குக் கொடுத்துவந்தது. இதுதான் கடவுளது பராமரிப்பு என்பதனை நம் புனிதர் உணர்ந்து கொண்டார். இறைவனே நாய்வடிவில் தனக்கு உதவி செய்து வருவதாகவே எண்ணி கடவுளுக்கு நன்றி செலுத்தி வந்தார்.
தனது நாயிடம் சில மாற்றங்கள் தெரிவதைக் கண்ட நாயின் உரிமையாளர் அதனைக் கவனிக்கத் தொடங்கினார். அப்போது அந்த நாயானது, குகைக்குள்ளே சென்று அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரைச் சந்தித்து அவருக்கு பணிவிடை புரிந்தது. அப்போது ஆரோக்கியநாதர் குணம்பெற்று வந்தார். இந்த அதிசயத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட நாயின் உரிமையாளர் ஆரோக்கியநாதருக்கு கடவுளுடைய அருள் இருப்பதனை உணர்ந்து கொண்டார். முகமலர்ச்சியோடு ஆரோக்கியநாதர் தங்குவதற்காக தனது வீட்டின் அருகிலே நல்ல ஒரு இடத்தைக் கொடுத்தார். நன்கு குணம்பெற்ற ஆரோக்கியநாதர், கொள்ளைநோய் பரவிவந்த ஊர்களுக்குச் விரைந்து சென்று மக்களைக் குணப்படுத்தி வந்தார்.
அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரின் இறுதி நாட்கள்:
ரோமாபுரியிலும், இத்தாலியிலும் படை மற்றும் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் குணப்படுத்திய அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர் தான் பிறந்த ஊராகிய பிரான்ஸ் நாட்டின் மாண்ட்பெல்லியர் என்ற இடத்திற்குச் சென்றார். அப்பொழுதும், திருப்பயணியின் உடையிலே இருந்த அர்ச்சியசிஷ்ட ஆராக்கியநாதர் உடலளவிலே, யாராலும் கண்டுபிடிக்க முடியாத தோற்றத்திலே காணப்பட்டார். நன்கு தெரிந்தவர்களாலும், உறவினர்களாலும் கூட அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரின் சரியில்லாத நேரம் அது. தனது சொந்த ஊரான மாண்ட்பெல்லியர் இடத்திலே, புரட்சி வெடித்ததால் திருப்பயணி உடையிலே இருந்த ஆரோக்கியநாதரை ஒற்றன் என்று எண்ணி அவரை சிறையிலே அடைத்தார் அந்த இடத்திலே ஆளுநராக இருந்த அவருடைய தாய்மாமன். குறுகிய சிறையிலே கடுந்துயர் கொண்ட ஆரோக்கியநாதர் மிகுந்த வேதனைப்பட்டார். ஆனால் மகிழ்வோடு அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டார்.
எந்த சூழ்நிலையிலும், தன்னை யார் என்று வெளிப்படுத்தாமல் அந்த சிறையிலே 5 வருடங்கள் வாழ்ந்தார். 5 வருட சிறை வாழ்வில் 1327–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16–ம் தியதி சிறை வார்டன் ஒருவன் வந்து பார்த்த பொழுது அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர் இறந்திருந்தார். அந்நேரத்தில் ஆரோக்கியநாதரின் ஆன்மா மோட்சத்தில் மகிழ்ச்சியோடு சென்றார் என்ற செய்தியானது ஒலிக்கக் கேட்டது. இறந்த நம் புனிதரின் உடலிலிருந்து நீல நிறத்தில் ஒரு ஒளியானது வெளிப்பட்டு அந்த சிறை முழுவதும் வீசியது.
இச்செய்தியானது எல்லா இடங்களுக்கும் பரவியது. அதனை அறிந்த ஆளுநரும், ஆரோக்கியநாதரின் மாமனும் எப்படியாவது இவரின் அடையாளத்தை அறிந்து கொள்ள விரும்பினார். அப்பொழுதுதான் அவர்கள் ஆராக்கியநாதரின் மார்பில் இருந்த சிலுவை அடையாளத்தைக் கண்டுகொண்டார்கள். மேலும், ஒரு சில உடமைகள் இன்னார்தான் என்பதை எண்பித்தது. ஆளுநரும், மாண்ட்பெல்லியர் மக்களும் சிறையின் முன் கூடி வந்து பார்த்து அவர்தான் ரோக் என்ற ஆரோக்கியநாதர் என்பதனைக் உறுதி செய்தார்கள். மிகப்பிரமாண்டமான முறையிலே நம் புனிதரின் அடக்கம் எடுக்கப்பட்டது.
இறப்பிற்குப்பின் நடந்த புதுமைகள்:
அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரின் இறப்பிற்குப் பின்னால் பல்வேறு புதுமைகள் நடைபெற்றன. குறிப்பாக, ஐரோப்பாவில் (1347 – 1349) கறுப்புச் சாவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தீராத கொள்ளை நோய் அவர்களைப் பீடித்திருந்தது. இறப்பு ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையிலே அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதருடைய உருவத்தினாலே அற்புதமான குணம் எல்லோருக்கும் கிடைக்கப்பெற்றது.
1414 – ல் கான்ஸ்டன்ஸ் சங்கமானது கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டபோது அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரிடம் வேண்டியதால் அற்புதமான முறையிலே குணம்பெற்றார்கள். வெனிஸ் நகர ஆளுநர் பிரான்சஸ்கோ டீடோ 1478 –ல் புனித ஆரோக்கியநாதரை வேண்டியதால் குணம்பெற்றார். அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர் வழியான வழிபாடு வடக்கு இத்தாலியிலே 1477 – 1479–ல் பூபோனிக் கொள்ளை நோய் பரவியிருந்தபோது பல இடங்களுக்குப் பரவலாக்கப்பட்டது. வடக்கு இத்தாலியிலே காணப்பட்ட ஆரோக்கியநாதர் புகழானது ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற இடங்களிலே பரவியது.
புனிதராகும் பயணத்தில் அர்ச்சியசிஷ்டஆரோக்கியநாதர்:
மாண்ட்பெல்லியர் நகரத்தின் வோகெரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரின் உடலானது 1485–ல் வெனிஸ் நகரத்திற்குக் கொண்டுவரப்பட்டது. திருத்தந்தை ஆறாம் அலெக்ஸாண்டர் (1492-1503) அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரை மகிமைப் படுத்தும் நோக்கத்தில் அவர் பெயராலே ஒரு ஆலயத்தையும், ஒரு மருத்துவமனையையும் கட்டினார். திருத்தந்தை மூன்றாம் பவுல் (1534-1549) திருச்சபையில் பிறரன்பு பணிசெய்தவர் என்ற நிலைக்கு அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதரை உயர்த்தினார். மேலும் திருத்தந்தை நான்காம் பவுல் 1556–ல் அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதருக்கென்று தனி ஒரு அந்தஸ்த்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையிலும், அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதர் அதிகாரப்பூர்வமாக ஒரு புனிதர் என்று அறிவிக்கப் படவில்லை. 1590–ல் வெனிஸ் நகர தூதர் ரோமாபுரியிலே அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதருடைய ஆவணங்களையும், ஆதாரங்களையும், புதுமைகளையும் பட்டியலிட்டுக் காட்டினார். வெனிஸ் நகர மக்களிடத்திலே பிரபலமாகிக் கொண்டிருந்த அர்ச்சியசிஷ்ட ஆரோக்கியநாதருக்கு புனிதர் பட்டம் வழங்க ஆலோசித்த திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்தஸ் அந்த முடிவினை தனக்குப் பின்னால் வரும் திருத்தந்தையின் பணியாக மாற்றினார். அவரை அடுத்து வந்த திருத்தந்தை பதிநான்காம் கிரகோரி (1590-1591) புனிதர் என்று விழா கொண்டாடி வந்த மாண்ட்பெல்லியர் ரோக்கை திருப்பலி புத்தகத்திலே இணைத்து அவரது நினைவை ஆகஸ்ட் மாதம் 16–ம் தியதி என்று முடிவு செய்து கொண்டாட அதிகாரப் பூர்வமாக அனுமதி தந்தார்.