வான தூதர்களின் தலைவரான அதிதூதர் புனித மிக்கேல் வரலாறு.
விண்ணுலகில், இயேசுவின் படை பிரிவுகளான நவ விலாசவான் தூதர்களின் முன்னணி படைத் தலைவர்தான், அதிதூதர் புனித மிக்கேல். அவர் இயேசுவின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர். விண்ணக இறைவனின் நீதியின் நிழலாகச் செயலாற்றுபவர். இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே உன்னத உறவின் பாலமாய் இருப்பவர். இறையரசின் முன் நீதியை அறிவிக்கும் நீதி அமைச்சர். இறைவனின் சலுகைகளுக்கு முதன்மையான உரிமையாளர்.
மண்ணுலகம் படைக்கப்படுவதற்கு முன்னர் வான தூதர்களின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர், 'லூசிபர்'. இந்நிலையில், விண்ணக இறைவன் பாவத்தில் மூழ்கியுள்ள உலகை மீட்பதற்கு ஒரு மீட்பர் தேவை என்று கருதினார். அதனால், மண்ணுலகில் உலக மீட்பரை அனுப்ப திருவுளம் கொண்டார்.
லூசிபெரின் ஆணவமும் அழிவும்.
இதனை அறிந்த லூசிபர், 'அதிதூதராக இருக்கும் நான் மனிதராக அவதாரம் எடுக்கப் போகின்ற உலக இரட்சகரை ஒருபோதும் மரியாதை செய்து ஆராதிக்க மாட்டேன்', என்று அதிகார போதையில் ஆணவம் கொண்டு அறிக்கை செய்தது.
அகங்காரத்தாலும், ஆணவத்தாலும் தனக்கு நிகர் யாருமில்லை, என்ற தலைக்கனத்துடன் அவனையும் படைத்து, உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றிய விண்ணுலக இறைவனை எதிர்த்துப் போரிட துணிந்தான். இந்த லூசிபர் வான தூதரிகளில் ஒப்பற்ற பேரழகும், வீரமும், விவேகமும் நிறைந்தவன். அவனது ஆணவம் அவனை இறைவனுக்கு எதிராளியாக மாற்றியது.
தனது கூட்டத்திலுள்ள ஒரு வானதூதர் இங்ஙனம் அகம்பாவம் கொண்டு அழிந்துபோக இருக்கும் ஆபத்தை உணர்ந்து, அவருக்கு நல்வழிகாட்டி அவரை மீட்பதற்காக மிக்கேல் விரைந்தார். அவருக்கு நல்ல ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
ஆனால் லூசிபர், "பேராற்றலும், அனைத்து மகத்துவமும் நிரம்பிய தனக்கு நிகரொத்த இன்னொரு வானதூதர் ஆலோசனை கூறுவதா", என்று செருக்கால் பிதற்றினான். அவருடைய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் நிராகரித்தான். அதுமட்டுமல்லாமல், 'விண்ணகத்தில் உள்ளவர்களுக்கு பணிந்து நடப்பதைவிட, நரகத்தில் நான் ஆட்சிபுரிவதே சிறந்தது' என்று கொக்கரித்தான்.
இதனால், மிக்கேல் மிகுந்த சினம் கொண்டார். எப்படியாவது லூசிபரின் ஆணவத்தை அடக்க வேண்டும், என்று முடிவு செய்தார். அதனால், "மண்ணுலகிலும், விண்ணுலகிலும் இறைவனுக்கு நிகரானவர் யார்? அவருக்கு எதிராக எவரால் போரிட்டு வெல்ல முடியும்? மனிதன் தாழ்ச்சியினாலன்றி எந்தவிதமான அகம்பாவத்தினாலும் தன்னை உயர்த்திக் கொள்ள முடியாது” என்று வீர முழக்கமிட்டார். மிகுந்த கோபாவேசத்துடன் சென்று லூசிபருடனும், அவனது கூட்டத்தினருடனும் போரிட்டு அவனை எரிநரகில் வீழ்த்தினார். மிக்கேல்' என்பதன் பொருள் 'இறைவனுக்கு நிகரானவர்' என்பதாகும்.
"வைகறைப் புதல்வனாகிய விடிவெள்ளியே,
வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே!
மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே,
வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!"
(எசாயா 14 : 12)
"மேகத்திரள் மேல் ஏறி, 'உன்னதருக்கு ஒப்பாவேன்' என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! ஆனால், நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்; படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே!” உன்னைக் காண்போர், உற்று நோக்கி, கூர்ந்து கவனித்து, மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும், பூவுலகை பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன்தானோ?' என்பர்
(எசாயா 14:14 =15)
இங்ஙனம், இறைவாக்கினர் உரைத்தபடி விண்ணகத்தில் போர் நடந்து கொண்டிருக்கையில் ஒரு தூதன் நரகத்தின் திறவுகோலையும், ஒரு பெரிய சங்கிலியையும் தன் கையில் பிடித்துக் கொண்டு வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன்.
அலகை என்றும், சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பாகிய பறவை நாகத்தை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்திலிருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதை கட்டி வைத்தார். பின்னர் அதை படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து, அதன் மேல் முத்திரையிட்டார். இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை நாடுகளை அது ஏமாற்றாதவாறு செய்தார். அதன்பின், சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும். (திருவெளிப்பாடு 20:1-3).
இங்கு ஆயிரம் ஆண்டுகள், என்பது பல யுகங்களைக் குறிக்கும். பறவை நாகத்தை குழியில் தள்ளி அதன் மேல் முத்திரையிட்டவர், அதிதூதர் மிக்கேல்.
அரக்கப் பாம்பும் பெண்ணும்.
வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது. பெண் ஒருவர் காணப்பட்டார். அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார். நிலா, அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண்மீன்களை தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார். பேறுகால வேதனைப்பட்டு, கடும் துயருடன் கதறினார்.
வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது. இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும், பத்து கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் கால்களால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின் மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளைப் பெற்றவுடன் அதனை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர் முன் நின்று கொண்டிருந்தது.
எல்லா நாடுகளையும் இருப்புக் கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்கு பறித்துச் செல்லப் பெற்றது. அப்பெண் பாலை நிலத்துக்கு ஓடிப் போனார். அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரை பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
பின்னர், விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும், அவரது தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள். அரக்கப் பாம்பும், அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு, தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும், அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது.
அலகை என்றும், சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதும் ஏமாற்றிய அது மண்ணுலகிற்கு தள்ளப்பட்டது. அதன் தூதர்களும், அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள். பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது. இதோ மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்து விட்டன. நம் சகோதரர், சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும், பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப் பட்டான்.
ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும், தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர் மீது ஆசை வைக்கவில்லை. இறக்கவும் தயங்கவில்லை. இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே , மகிழ்ந்து கொண்டாடுங்கள். மண்ணுலகே, கடலே ஐயோ! உங்களுக்குக் கேடு. தனக்கு சிறிது காலமே எஞ்சியிருக்கிறது, என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால், கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது.
தான் மண்ணுலகுக்கு தள்ளப்பட்டதைக் கண்ட அரக்கப் பாம்பு, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணை துரத்திச் சென்றது. ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்து பாலை நிலத்தில் அவருக்கென குறிப்பிட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அங்கு அவர் மூன்றரை ஆண்டு காலம் பேணப்படுவார். அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவர் பின்னால் அப்பாம்பு அதன் வாயிலிருந்து ஆறு போல் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது. ஆனால், நிலம் அப்பெண்ணுக்கு துணை நின்றது. அது தன் வாயைத் திறந்து அரக்கப் பாம்பின் வாயிலிருந்து பாய்ந்த வெள்ளத்தைக் குடித்துவிட்டது.
இதனால் அரக்கப் பாம்பு அப்பெண் மீது சினம் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்க புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளை கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்கள். அரக்கப் பாம்பு கடற்கரையில் நின்று கொண்டிருந்தது. (திருவெளிப்பாடு 12 :1 - 18)
ஆயினும், வானத்தில் மிகப்பெரிய யுத்தம் ஒன்று உண்டாயிற்று. அதிதூதர் மிக்கேலும், அவரது தூதர்களும் பறவை நாகத்தோடு யுத்தம் செய்தார்கள். ஆயினும் பறவை நாகம் வெற்றி கொள்ளவில்லை. அது முதல் வானத்தில் அவர்கள் இருந்த இடம் காணப்படவும் இல்லை. ஆதி சர்ப்பமாகிய அந்த பெரிய பறவை நாகம் வெளியே தள்ளப்பட்டது. அதற்கு பேய் என்றும், சாத்தான் என்றும், பாம்பு என்றும் பெயர். அது பாதாளத்துக்கு தள்ளப்பட்டது. அதனைப் போலவே அதன் தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.
இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் மிக்கேல் அதிதூதரின் சுரூபத்தில் அவர் பாதத்தின் மேல் பசாசை மிதித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அதிதூதர் மிக்கேல் என்றாலே இன்றளவும் பசாசுக்கு அச்சம் தான் ஏற்படும். எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் அவனால் அவரை வெற்றி கொள்ள முடியாது, என்று புனித யூதா ததேயு எழுதியுள்ளார்.
அவர் அதிதூதராகிய மிக்கேலைப் பற்றி குறிப்பிடும் போது, 'அதிதூதராகிய மிக்கேல் மோயீசனுடைய உடலைக் குறித்து பசாசுடனே வழக்காடியபோது, அவன் மொழிந்த தரம் குறைந்த வார்த்தைகளுக்கு தீர்ப்பிடத் துணியாமல், அவனிடம் ஆண்டவரே உனக்கு தீர்ப்பளிப்பார்' என்று கூறினார். (யூதா 1 : 9,
இந்நிகழ்ச்சியைப் பற்றி திருவிவிலியத்தில் புனித யூதா ததேயு மட்டுமே குறிப்பிடுகின்றார்). எனவே, இது யூதர்களிடையே வழங்கி வந்த பரம்பரை செய்தி என நம்பலாம். பசாசு, மோயீசனது உடலை எடுத்திருந்தால், அவ்வுடலை ஒருவேளை ஆராதனை செய்ய யூதர்களை தூண்டியிருக்கலாம், என்பது வேத அறிஞர்களின் கருத்து. பசாசு, அதிதூதர் மிக்கேலுடன் போரிட்டு நரகத்திற்கு விழ வைக்கப்பட்டதை புலவர் மில்டன் காப்பியமாக வடித்துள்ளார். இது 'இழந்த மோட்சம்' (Paradise lost) என அழைக்கப்படுகிறது.
அதிதூதரான மிக்கேல் பேராற்றலும், மிகுந்த வல்லமையும் படைத்தவர். ஆயினும், இறைவன் பால் மிகுந்த அன்பும், தாழ்ச்சியும் கொண்டவர். அவர்
சமாதானத்தை விரும்புவதால், 'சமாதான தூதன்' என்று அழைக்கப்படுகிறார். இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் வழிநடந்தபோது அவர்களுக்கு வழிகாட்டியவர் இந்த மிக்கேல் அதிதூதர்தான். இவர் 'பதிதர்களின் சம்மட்டி' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் மரணம் நெருங்கும் வேளையில் நம்முடன் இருந்து, பசாசுகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பார். உலகம் முடியும் காலத்தில் இவர்தான் எக்காளம் ஊதுபவர் என்று கருதப்படுகிறார்.
அக்காலத்தில் உன் இனத்தாருக்கு தலைமை காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்து போய் மண் புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும், முடிவில்லா இழிவிற்கும் உள்ளாவர். (தானியேல் 12:1,2)
மேற்கண்ட நிகழ்வுகளின் வழியாக உலகம் தொடங்கியது முதல் முடிவு வரை அதிதூதர் மிக்கேலின் பணி மகத்தானது, என்பதை நம்மால் உணர முடிகிறது. இவர் திருச்சபையை காப்பதிலும் முனைப்புடன் செயல்படுபவர் ஆவார். இறை மக்களின் செப் விண்ணப்பங்களை இறைவன் பாதம் சேர்க்கும் இனிய பாணியினையும் அவரே செய்து வருகிறார். இதனை திருவெளிப்பாடு தெளிவாக விளக்குகிறது. பின்பு வேறொரு வானதூதர் பொன் தூப கிண்ணம் ஏந்தியவராய் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணை முன் இருந்த பொன் பலிபீடத்தின் மீது இறை மக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது. அச்சாம்பிராணி புகை இறை மக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது. பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகின் மீது வீசி எறிந்தார். உடனே இடி முழக்கமும், பேரிரைச்சலும், நில நடுக்கமும் உண்டாகின் (திருவெளிப்பாடு 8:3-5).
திருத்தந்தையை அதிதூதர் பாதுகாத்தல்.
திருத்தந்தை பத்தி மூன்றாம் சிங்காராயர் ஒருநாள் திருப்பலி நிறைவேற்றி முடிந்தவுடன் மயக்கமுற்று கீழே விழுந்தார். அதனைக் கண்ணுற்ற மக்கள் அவர் இறந்து விட்டதாகக் கருதினர். அத்தகைய சூழ்நிலையில் அவர் நீண்ட நேரத்திற்குப் பின் சுய நினைவு பெற்று எழுந்தார். மயக்கமுற்றிருந்த அந்த நேரத்தில், சாத்தானால் திருச்சபைக்கு ஏற்பட இருந்த தீமைகளை காட்சியாகக் கண்டு அவர் மிகவும் நடுநடுங்கினார்.
அந்த நெருக்கடியான வேளையில் அதிதூதர் மிக்கேல் விரைந்து வந்து சாத்தானுடன் போர் செய்து அவனையும், அவனது தோழர்களையும் நரகத்தில் தள்ளியதை அவர் காட்சியாகக் கண்டார். அப்போது விண்ணக இறைவன் அதிதூதர் பேரில் ஒரு சொத்தை எழுதி, அச்செபம் உலகமெங்கும் செபிக்கப்பட வேண்டுமென்று ஆணையிட்டார்.
அத்திருத்தந்தை சாத்தானை வெல்லும் ஆயுதமாக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட அச்செபத்தை அனைவரும் செபித்து, பலன் அடையும் நோக்கில் வெளியிட்டார். அன்றாடம் செபித்து மக்களால் நன்மைகள் அடையப் பெற்ற அச்செபம் இன்றளவும் செபிக்கப்பட்டு வருகிறது. அச்செபத்தைத் தவறாமல் செபித்து வருபவர்கள் தீயோனின் அனைத்து சூழ்ச்சிகளிலிருந்தும் விடுதலை பெறுவது உறுதி.
திருச்சபையின் காவல் தூதர்.
திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அதிதூதர் மிக்கேல் திருச்சபையின் காவல் தூதராக போற்றி புகழப்பட்டார். ஆயினும், ஐந்தாம் நூற்றாண்டில்தான் அவரது திருநாள் செப்டம்பர் 29 நாள் கொண்டாடப்பட வேண்டும், என்று முடிவு செய்யப்பட்டது. இதிலிருந்தே மைக்கேல் மாஸ் விடுமுறை தோன்றியது. கி.பி. 404ம் ஆண்டு அதிதூதர் மிக்கேல் சிபான்றோ என்ற இடத்தில் ஒரு குகையில் காட்சியளித்தார். அதுமுதல் அந்த இடம் சிறப்புப் பெற்றது. அப்போது சிபான்றோ மக்கள் மீது அண்டை நாட்டார் படையெடுக்க முயற்சிகள் செய்து கொண்டிருந்தனர். இதனை உணர்ந்த அந்நாட்டின் ஆயர், மிகுந்த வருத்தமுற்று தங்களை எதிர்கொள்ள இருக்கும் படையெடுப்பிலிருந்து தங்களைக் காக்க, அதிதூதர் மிக்கேலிடம் மன்றாடவேண்டுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார். போருக்கு முந்தின நாள் இரவு அதிதூதர் மிக்கேல் அவ்வாயருக்கு காட்சியளித்து, உங்களை எதிர்கொண்டு வரும் படை வீரர்கள் தோற்று ஓடிவிடுவர். எனவே, கலங்க வேண்டாம் என்று கூறி மறைந்தார்.
மறுநாள் யுத்தம் ஆரம்பமானதும் பெரும் புயல் வீசியது. பயங்கரமான இடியும், மின்னலும் ஏற்பட்டன. வானத்தில் இருந்து எழுந்த மின்னல் கீற்றுகள் அம்புகள் போல பாய்ந்து பகைவரைத் தாக்கின. இதனை எதிர்கொள்ள முடியாமல் எதிரி படைகள் அச்சம் கொண்டு ஓட்டம் எடுத்தனர்.
இவ்வெற்றியின் நினைவாக அதிதூதர் மிக்கேலின் பெயரில் அங்கிருந்த கெபியானது தேவாலயமாக மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு நாளும் பல புதுமைகள் அரங்கேறலாயின. திருச்சபையும் அவருக்கு திருநாள் கொண்டாட்டத்தை அமைத்தது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் நாள் அதிதூதர் மிக்கேல் திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
படை வீரர்களின் பாதுகாவலர்.
இவ்வுலகில் பசாசு மேற்கொள்ளும் பல்வேறு விதமான சூழ்ச்சிகளிலிருந்தும், மாயைகளிலிருந்தும் அதிதூதர் மிக்கேல் நம்மை பாதுகாக்கிறார். அவர் போர் வீரர்களின் பாதுகாவலராகவும் புகழப்படுகிறார். நமது வாழ்க்கைப் போராட்டத்தில் உலகம், உடல், அலகை இவற்றுடன் நாம் அன்றாடம் நடத்தும் போராட்டத்தில் வெற்றியடைய அவரின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. எனவே, அவர் மீது பக்தி கொண்டு அவரது பரிந்துரையையும், பாதுகாவலையும் நாடுவது நமக்குச் சிறந்த பாதுகாப்பு அளிப்பதாகும்.