கோடி அற்புதர் எனக் கொண்டாடப்படுபவர் புனித அந்தோனியார்.
காணாமல் போன பொருட்களை கண்டடைய, பேய்களை விரட்ட இவரது துணையை நாடுவர்.
செவ்வாய்க் கிழமை இவருக்கு நவநாள் ஒப்புக்கொடுக்கும் நாள். ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் என ஒன்பது மாதங்களுக்கு நவநாள் (அல்லது) தொடர்ச்சியாக ஒன்பது செவ்வாய் என நவநாள் ஒப்புக்கொடுப்பர்.
ஜூன் 13 இவரது திருநாள். 13 துரதிர்ஷ்ட எண் என்று சொல்வர், ஆனால் கத்தோலிக்கர்களுக்கு 13 என்பது புனித அந்தோனியாரின் எண்!
கோடி அற்புதர் பதுவை புனித அந்தோனியார் வரலாறு:
உலகெங்கும் திருமறையோரும் ஏனையோரும் பதுவாநகர் அந்தோனியாரை அண்டி அவரிடம் மன்றாடி, அவர் வழியாய் இறைவனிடம் எண்ணிலடங்கா ஆன்ம, உடல் நலன்களை பெற்று வருகின்றார்கள். புனித அந்தோனியார் போத்துக்கல் நாட்டவர்.
1195ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15ம் நாள் விஸ்பன் நகரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி. இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு பெர்டினாந்து என்று பெயரிட்டனர்.
பெற்றோரைப் போல குழந்தையும் சிறுவயதிலிருந்தே இறைப்பற்றிலே திளைத்து நற்குண சீலராக வளர்ந்து வந்தார். சிறுவன் பெர்டினாந்து ஒரு நாள் மேற்றிராசன ஆலயத்தில் உருக்கமாக செபித்துக் கொண்டிருக்கும்போது தீடிரென்று பயங்கர உருவத்தில் அலகை தோன்றியது. சிறுவன் அஞ்சி ஓடவில்லை. மனத்துணிவுடன், தான் முழந்தாளிலிருந்த சலவைக் கல்மேல் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்தான். பிசாசு வெகுண்டு ஓடியது. அந்தகல்லில் பதித்த திருச்சிலுவை அடையாளத்ததை இன்னும் காணலாம்.
கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டினாந்து திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார். ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரைவிட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின்படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்விபயின்றார். 1219ம் ஆண்டில் 24ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.
மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டினாந்து தானும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத்தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரன்சீஸ்கன் சபையில் சேர்ந்தார். அப்போதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். மடைதிறந்த வெள்ளம் போல சொற்கள் பொழிந்தன. உள்ளத்தை ஊடுருவும் ஆழ்ந்த கருத்துக்கள்! அன்றுமுதல் அந்தோனியார் புகழ்பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவைநகரில் திருமறையாற்றி பேரிடி முழக்கம் செய்தார். அவரின் திருஉரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை அந்த நாட்களில் நிலவிய தப்பரைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.
1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுனர்களில் ஒருவராக அறிவித்தார்.
தாம் வாழ்ந்த காலத்திலும், இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் 'கோடி அற்புதர் புனித அந்தோனியார்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் இவரை நாடி வருவோர் அதிகமாயிற்று. இதனால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமைகுரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒரு நாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்த பின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த வேளையில் 'அந்தோனியாரே என்னை காப்பாற்றும்' என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்க வைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாகவும் இறக்கியதாகவும் கூறுவர். ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் வரலாறு உண்டு.
அந்தோனியார் குழந்தை இயேசுவை காட்சியில் கண்டு கையில் ஏந்தியதாகவும் கூறுவர். ஆகவே தான் படங்களில் அவரது கையில் குழந்தை இயேசுவும் மற்றொறு கையில் திருமறை நூலை கையில் வைத்திருப்பதாகவும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. காணமல் போன பொருட்களை புனித அந்தோனியாரை நினைத்து மன்றாடினால் கிடைக்கிறது என்ற விசுவாசம் இன்றும் மக்களிடம் காணப்படுகிறது. "கோடி அற்புதர்" "பதுவை பதியர்" "பசாசுகளை நடுநடுங்கச் செய்பவர்" "காணாமல் போனவைகளை கண்டுபிடித்துக் கொடுப்பவர்" போன்ற அடைமொழிகளும் புனித அந்தோனியாருக்கே சொந்தம்.
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய் பட்டார். அதே ஆண்டில் ஜுன் மாதம் 13ம் நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறைவனில் இளைப்பாறினார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லரையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந் நாக்கு இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.