கிறிஸ்துவினுடைய ஒரே நோக்கம் உத்தமத்தனத்தைத் தேடிப் போவதாம் ."பிரியமான குழந்தைகளைப் போல கடவுளைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள் " என்று அர்ச் சின்னப்பர் சொல்லவில்லையா ? எவ்விதம் பின்பற்றுவது ? இயேசுநாதரைக் கண்டு பாவிப்பதில் ; "நானே வழி "என்றார் கிறிஸ்துநாதர் . அர்ச் கிரகோரியார் ஒரு உவமை சொல்லுகிறார் . ஓவியன் படம் தீட்டும்போது, தன்yகண் எதிரே ஒரு மாதிரியைக் கொண்டு அதைப் பார்த்துத் தன் தூரிகையைக் கையாளுகிறான். அதுபோலவே இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் கையாள வேண்டும் . அவரது புண்ணியங்களையும் தன் மனக்கண் முன் நிறுத்தி , அவரை ஓயாமல் உற்று நோக்கி தன் ஆத்துமமாகிய திரையில் இயேசுவின் வாழ்க்கையைக் கிறிஸ்தவன் சித்தரிக்க வேண்டும் .அதற்கு செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைச் சிந்திப்பது சுலபமான வழி
நமது ஈடேற்ற அலுவலில் தேவ தாய்க்கு அதிக கவலை . ஆதலால் செபமாலை சொல்லுகையில் இயேசுவின் சீவியத்தைச் சிந்திக்கும்படி பற்பல அர்சிஷ்டவர்களைத் தூண்டினார். இதனால் கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஆராதித்து மகிமைப்படுத்துவார்கள் , தங்கள் வாழ்க்கையையும் அவருடைய வாழ்க்கையையும் ஒத்திருக்கச் செய்வார்கள் என்பது அவரது எண்ணமும் ஆசையும் .
பெற்றோர்கள் சொல்லுவதையும் செய்வதையும் குழந்தைகள் கவனித்து அவர்களைப் போல - சில சமயம் தங்களுக்குத் தெரியாமலே - நடக்கப் பிரயாசைப்படுகிறார்கள் . ஒரு தொழில் கற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆசிரியர் செய்வதைப் போல் செய்யத் தேடுவான். அதே போல் செபமாலை செய்யும் தேவதாயின் மக்கள் திருத்தாயும் சேயும் செய்வது போல ஒவ்வொன்றையும் செய்யத் தேடுவார்கள் . ஆதலால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்க்க வேண்டும் .
இறைவன் பொழிந்த கிருபைகளை மறக்க வேண்டாமென்று முன்காலத்தில் மோயீசன் இஸ்ராயேலருக்குக் கற்பித்திருந்தார் . தம் வாழ்க்கையையும் , மரணத்தையும் , உத்தானத்தையும் கிறிஸ்தவர்கள் தங்கள் கண் முன் எப்போதும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று இயேசுநாதர் எவ்வளவு அதிகாரத்தோடு சொல்லக் கூடும் . ஒவ்வொரு தேவ இரகசியமும் அவருடைய நன்மைத்தனத்தையும் நம் ஈடேற்றத்தின் மேல் அவருக்குள்ள ஆவலையும் காட்டுகிறது .அவர் நம் ஆத்துமத்தின் பத்தா; நமது நேசர் ; அவரது அன்பை நாம் மறக்காமலிருக்க வேண்டும் என்பது நியாயம் அல்லவா?
அவரது வாழ்க்கையில் எல்லாம் முக்கியமானவை , அவரது அன்பை மகாத் துலக்கமாய் அவரது பாடுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன . எப்பக்தி முயற்சியினால் அவருக்கு அதிக மகிமை வருவிக்கக் கூடும் என்று முத் ஆஞ்செலா ஒரு நாள் இயேசுவைக் கேட்டாள். வந்த பதில் என்ன ? "மகளே என் காயங்களைப் பார் ". பின்னர் சிரசிலும் மற்ற இடங்களிலும் அவர் பட்ட காயங்கள் யாவற்றையும் காட்டி "உன்னுடைய ஈடேற்றத்திற்காக நான் இவைகள் யாவற்றையும் அனுபவித்தேன் . நான் உனக்குக் காட்டிய அன்புக்கு நீ என்ன கைம்மாறு செய்வாய் ? " என்றார் ஆண்டவர் . திவ்விய பூசை தானே அவரது மரணமும் பாடுகளும் . ஆதலால் தான் திவ்விய பூசை தமத்திருத்துவத்திற்கு அளவிறந்த மகிமையை அளிக்கிறது . பூசை நேரத்தில் மோட்ச வாசிகளுக்கும் சம்மனசுக்களுக்கும் மகா சந்தோசம்
தேவ ரகசியங்களை தியானித்து செய்யும் செபமாலையும் இறைவனுக்கு அளிக்கும் தோத்திரப்பலி எனலாம் . இயேசுவின் வாழ்க்கையை , பாடுகளை , மரணத்தை செபமாலை நினைப்பூட்டுகிறதன்றோ? இத்தகைய தியானம் மனிதனின் மனதை இளக்கி, மனஸ்தாபத்தை எழுப்பி , மனமாற்றுதளுக்குக் காரணமாகிறது . ஒரே ஒரு பாவியின் மனமாற்ற முதலாய் மோட்சத்தில் இறைவனுக்கும் சம்மனசுக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறதென்று இயேசுநாதர் சொல்லி இருக்கிறார் .
ஆதலால் தேவ இரகசியங்களைத் தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லி வருவோம்!