வயது முதிர்ந்த உறவினளின் இரகசியத்தை அறிந்த உடனே அவளைக் காண வேண்டும் என்று மரியின் மனம் தவிக்கின்றது . " அந்நாளில் மரி எழுந்து மலைப் பிரதேசத்தில் உள்ள யூதாவின் நகரை நோக்கி விரைந்து சென்றார் " லூக் 1:39 -59
மரியிடம் இருந்து மனுரூபம் எடுத்து ,அவரது இருண்ட உதரத்தில் வல்லமையற்றவராகப் பலவீனராகப் படுத்த நாதர் , அவர் பிரியம் போல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல இணங்குகிறார். குழந்தையின் கைப்பொம்மை போல . ஈடேற்ற அருள் வழியில் முதல் அடி எடுத்து வைத்தல் இப்பிரயாணம் . மனுமக்களை ஈடேற்றக் கடவுள் செய்ததென்ன ? மக்களின் கரங்களில் , அதிகாரத்தில் , தம்மைக் கையளித்து விடுகிறார் . மாமரி இந்தப் பதவிக்கு ஏற்றவர் . இந்நாள் முதல் அவர் எங்கு சென்றாலும் ஏசுவைக் கொண்டுவருவார் . திருச்சபைச் சரிதையும் இதை விளக்குகிறது. எங்காவது தேவதாய்க்கு விஷேஷ வணக்கம் வளருமேயாகில் , அது தேவ நற்கருணைப்பக்தியில் மலர்ந்து பழுக்கும் . லூர்துநகர் காட்சியிலும் , அற்புத நீரூற்றிலும் தோன்றியது லூர்துமாதாவின் பக்தி . இப்போது தேவ நற்கருணைச் சுற்றுப் பிரகாரத்தில் தானே பெரும் புதுமைகள் பூக்கின்றன .
பெருந்தன்மையும் தாராள சிந்தையும் உள்ள அன்னையின் அன்பை இங்கு காணலாம் . மலைக்காடு- பாதையோ கஷ்டம் - ஐந்து நாள் பிரயாணமா - அதற்கும் மேலா - உண்ண , உறைய எவ்வளவு சிரமம் ! குளிரும் , பனியும், வெயிலும் இலேசா? அன்பு சிரமம் அறியாது . உறவினளின் மகிழ்ச்சியை இரசித்தவளாய் புள்ளி மானைப் போல் துள்ளி ஓடுகிறார் இக்குழந்தை . (பதினான்கு வயதானாலும் குழந்தை தானே ) இந்த இளமங்கை விருந்தாடும் நோக்கோடு போகவில்லை . வயது முதிர்ந்த எலிசபெத்துக்கு பனி புரியும் கருத்தோடு செல்கிறார். வழியில் வயிற்றிலிருக்கும் தெய்வக் குழந்தை என்ன ஞான மகிழ்ச்சித் தேனைத் தாயின் உள்ளத்தில் பொழிந்திருக்க வேண்டும் ! தாய்க்குத் தம் மகனின் காட்சி , சிந்தை , செபம் , இது அன்னையின் அலுவல் . நம் பிரயாணங்களில் இயேசுவைத் தங்க வைத்து நாம் மட்டும் போகலாகாது . இயேசுவின் சிந்தையையாவது தாங்கிச் செல்ல வேண்டும் .
கன்னிமரி எலிசபெத்தின் இல்லம் இறங்கியவுடனே குதூகலத்தோடு உறவினளை வாழ்த்தி நலம் விசாரிக்கிறார் . மாமரியின் பிரசன்னத்தினால் எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறாள் . வந்திருப்பவர் சாதாரண உறவினர் அல்ல , இறைவனின் தாய் என்று முதியவளுக்குத் தெரிய வருகிறது . கன்னித்தாயின் சுயநலமற்ற அன்பு மனிதாவதாரத்திற்கு பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட முதல் சாட்சியைப் பிறப்பிக்கின்றது
'மாக்னிஃபிக்காத் '- என் ஆத்துமமானது ஆண்டவரை போற்றுகின்றது " என்று உன்னத கீதம் முழங்குகிறது . இக்கீதத்தை ஆழ்ந்து அலசிப் பார்க்கிறவர்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு முடிவையும் , வழியையும் , மெய்யான மானிட வாழ்வுக்கு வழியையும் காண்பர். மாமரி தம் ஒன்றும் இல்லாமையை உணர்ந்தார் , கடவுளைப் புகழ்ந்தார் , அவரிடத்தில் மெய்யான தாழ்ச்சி ஆழ்ந்து ஓடுகிறது . ஆதலால் இறைவன் தம் அரிய கொடைகளையும் அவரிடம் ஒப்படைக்கலாம் . அவரைச் சந்ததி சந்ததியாய் எல்லாத் தலைமுறைகளும் வாழ்த்தலாம் . "வல்லபமுள்ளவர்களை உயர்ந்த அரியணையினின்று தள்ளி, தாழ்ந்தவர்களை உயர்த்தினார் ". வருங்காலத்தில் இயேசுபிரான் நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களையும் ஆசீர்வதிப்பார் . அதைக் கன்னித்தாய் இப்பொழுதே கற்றுக் கொண்டார் . " பசித்தவர்களை நன்மைகளால் நிரப்பித் தனவந்தர்களை வெறுமையாய் அலைய விட்டார் " என்றார் . இக்கீதத்தை ஊன்றிப் பார்ப்போமாக .
இருவரும் தங்கள் சுகக்ஷேம விசாரணை முடிந்தபின் நடையைக் கடந்து உள்ளே சென்றனர் .கன்னிமரி சக்கரியாசின் முன் முழந்தாள்படியிட்டு ஆசீரைப் பெறுகிறார் . அவர் குருவல்லவா ? அவருக்கு நிகழ்ந்த குறையைக் காண மாமரிக்கு உள்ளத்தில் வருத்தம்
எலிசபெத் தன சொந்தமான உள் அறையை , மாமரி ஒதுங்கி செபிக்க ஒழித்துக் கொடுக்கிறாள். இரவும் பகலும் எத்தனையோ மணிநேரம் கன்னித்தாய் செபத்தில் ஈடுபட்டிருந்தார். நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கே எழுந்து கன்னித்தாய் செபிப்பார் என்று சில தரிசனிகளும் பக்தியுள்ளோரும் சொல்லிப் போயிருக்கின்றனர்
எலிசபெத் வயது முதிர்ந்தவள் . மேலும் இந்த உடல் நிலையில் அவளால் என்ன வேலை செய்ய முடியும் ? வீட்டைப் பெருக்குவதும் , பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவதும் , துணிகளைத் துவைத்துக் காய வைப்பதும் , தானியத்தைத் திருகையில் வைத்து அரைப்பதும் , சமையல் செய்வதும் , குடும்பத்தில் எவ்வளவோ சிறு சிறு அலுவல்கள் உள என்று பெண்களுக்குத் தெரியும் . எல்லாவற்றையும் கன்னித்தாய் செய்திருப்பாள் . முதல் துவக்கத்தில் எலிசபெத் சம்மதிக்காமல் வாதாடினாள் . ஆனால் அன்புப் போட்டியில் , தாழ்ந்த சேவைப் போட்டியில் , மாமரிக்கே வெற்றி . எலிசபெத் அடுத்த தினத்தில் இருந்து சும்மா இருந்து விட்டாள். மலர்கொத்துக்களையும் அங்கும் இங்கும் மனையில் வைத்து சிற்றில்லத்தின் அழகை சௌந்தரவதியான கன்னிகை பெருக்கினாள்.
சிறிது நேரம் ஒவ்வொரு நாளும் இரு பெண்களும் சல்லாபித்திருக்கலாம் . தனக்குப் பிறக்கப் போகும் பிள்ளை தீர்க்கதரிசி என்று எலிசபெத் அறிவாள்; தம் குழந்தை உலக இரட்சகர் என்று தேவதாய்க்குத் தெரியும் . இவைகளைப் பற்றி பெரும் அதிசயத்தோடு பேசி இருவரும் ஆண்டவரைப் புகழ்ந்தார்கள்
சேவிகைகளுக்கு , பொதுவில் பெண் மக்களுக்கு , கன்னித்தாய் எடுத்துக்காட்டு