இயேசுவின் திரு உடல் திரு இரத்த விழாவுக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமை, இயேசுவின் திரு இருதய விழா' கொண்டாடப்படுகிறது. ஜூன் மாதம் இயேசுவின் திரு இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட வணக்க மாதம் என்பதை நாம் அறிவோம்.
புனித மார்கரீத் மரியாளுக்கு மனித நேசத்தால் பற்றி எரியும் இயேசுவின் இருதயம் காட்சி கொடுத்தபோது, 'தமக்கென விழா ஒன்றைத் திருச்சபையில் ஏற்படுத்த வேண்டும்' என விரும்பினார். இயேசுவின் இருதயத்திற்கு மேலான ஆராதனையும், நிந்தைப் பரிகாரமும் தரப்பட வேண்டும் என்பதற்காக இவ்விழா கொண்டாடப் படுகிறது.
இயேசுவின் மனிதவதாரத் திரு உடல், முழுமையாகவும் அந்த உடலின் ஒவ்வொரு உறுப்பும் தனித்தனியாகவும் ஆராதனைப் பெற தகுதிபெற்றதாகவும் இருக்கின்றன. உயிர்த்த இயேசுவைக் கண்ட திருத்தூதர் தோமா "என் ஆண்டவரே, என் தேவனே" எனக்கூறி ஆராதித்தார்.
இயேசுவின் உடல், உறுப்புகள், பாதம் பதிந்த இடங்கள், அவரது அங்கி அனைத்துமே வல்லமை வாய்ந்தவை. பெத்தானியாவில் மக்கள் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினர். பார்வை பெற விரும்பிய குருடனை தன் விரலால் தொட்டு குணமாக்கினார், இயேசு. அவரது ஆடையைத் தொட்ட பெண் குணம் பெற்றாள். அப்படியென்றால், அதி முக்கிய உறுப்பான அவரது இருதயம் எத்தகைய சிறந்த ஆராதனைக்குரியது!
இயேசுவின் இருதயம் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்டு, இரத்தம் பீறிட்டுப் பாய்ந்து அந்த இரத்தத்தால் மனுக்குலம் மீட்கப்பட்டதல்லவா? எனவே இந்த 'இயேசுவின் திரு இருதயத்துக்கு ஆராதனை செலுத்துதல் மிகவும் பொருத்தமானது.
இயேசுவின் இருதயம் என்பது, அவரது அன்பின் முழுமையைக் குறிக்கிறது. அன்பர்கள் இருதயத்தைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். 'இருதயம் அன்பின் சின்னம்' எனவே, இயேசுவின் திரு இருதய விழா, இயேசுவின் அன்பின் விழாவாகவும் அமைந்துள்ளது. 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்ற சொல்லிற்கேற்ப, இயேசுவின் அன்பு அளவிட முடியாத எல்லையற்ற அன்பாக இருக்கிறது.
புனித பவுல் அடிகளார் இவ்வன்பைக் குறித்து பின்வருமாறு கூறுகிறார். "அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணி வேரும் அடிப்படையுமாக அமைவதாக! இவ்வாறு நீங்கள் இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து அறிவுக்கெட்டாத இந்த அன்பை அறியும் ஆற்றல் பெறுவீர்களாக" (எபே. 3 : 17-19).
திருத்தந்தை 13 - ஆம் சிங்காராயர் 1899 - ஆம் ஆண்டில் 'இயேசுவின் திரு இருதய விழாவை திருச்சபையின் முதல் தர பெருவிழாவாக ஏற்படுத்தினார். தலை வெள்ளி பக்தியும் இத்துடன் ஆரம்பமானது.