இரக்கத்தின் அரசியாம் மாமரி மீது நாம் வைக்கும் நம்பிக்கை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பது பற்றி.

அரசர்களுக்கு அரசரின் தாய் என்ற பெருமைக்கு, புனிதமிக்க கன்னிமாமரி உயர்த்தப் பட்டிருப்பதால், திருச்சபை அவர்களை, அரசி என்ற உன்னத பெயரால் மகிமைப் படுத்துவதற்கும், யாவரும் அவர்களை அவ்வாறு மகிமைப்படுத்த வேண்டுமென விரும்புவதற்கும் காரணமில்லாமலில்லை.

''மகன் ஓர் அரசன் என்றால், அவரைப் பெற்றெடுத்த அன்னை, அரசி என்றும் ஆட்சிக்குரியவள் என்றும் நியாயப்படியும் உண்மையிலும் கருதப்படத் தக்கவரே'' என்கிறார் புனித அத்தனாசியார். 

சீயென்னாவின் பெர்னர்தீன். ''நித்திய வார்த்தையின் தாயாயிருக்கச் சம்மதம் தெரிவித்த கணம் முதற்கொண்டு, மாமரி அச்சம்மதத்தினால் உலகினுடையவும் சகல படைப்புகளினுடையவும் அரசியாயிருக்கப் பேறு பெற்றார்கள்'' என்றுரைக்கிறார். 

"மரியாயின் சரீரம் இயேசுவின் சரீரத்தினின்றும் வேறுபட்டதில்லை என்றிருக்கையில், எவ்வாறு மகனின் அரச மகிமை தாய்க்கு மறுக்கப்பட முடியும்?'' என்று வினவுகிறார் ஷார்த்து நகர் மடாதிபதி அர்னால்டு. மேலும் அவர், ''எனவே திருக்குமாரனின் மகிமை அவருடைய தாயின் மகிமையை ஒத்தது என்பதுமன்றி, அத்தோடு ஒன்றானதே என்று நாம் கருதவேண்டும்" என்கிறார்.

இயேசு எவ்வாறு இப்பிரபஞ்சம் முழுமைக்கும் அரசராயிருக்கிறாரோ அவ்வாறே மாமரி அதன் அரசியாவார். ''அரசி என்ற நிலையில் அவர்கள், உரிமைப்படி, தம் திருக்குமாரனின் அரசு முழுமையையும் தமதாக்கிக் கொள்கிறார்கள்'' என்றுரைக்கிறார் மடாதிபதி ரூபர்ட். எனவே சீயென்னாவின் புனித பெர்னார்தீன், "கடவுளுக்குப் பணி செய்ய எத்தனை படைப்புக்கள் உள்ளனவோ, அத்தனையும் மாமரிக்கும் பணி செய்கின்றன. ஏனெனில், சம்மனசுக்களும், மனிதரும், விண்ணில் மற்றும் மண்ணில் இருப்பவை அனைத்தும் இறைவனின் ஆட்சிக்குட்பட்டிருப்பது போல், அவையனைத்தும் மாமரியின் ஆட்சியுரிமைக்கும் உட்பட்டுள்ளன'' என்ற முடிவுக்கு வருகிறார். 

இப்பொருளில் இறையன்னையைப் பார்த்து, கெர்ரீக்கென்னும் மடாதிபதி , "மரியாயே, தாங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் தங்கள் திருக்குமாரனின் செல்வங்களைப் பகிர்ந்தளியுங்கள்; அரசியாகவும், தாயாகவும், அரசரின் பத்தினி என்ற நிலையிலும் செயல்படுங்கள்; ஏனெனில், தங்களுக்கே எல்லாப் படைப்புகள் மேலும் அதிகாரமும் ஆட்சியுரிமையும் உள்ளது" என்று வேண்டுகிறார்.

எனவே, மாமரி, ஓர் அரசியாவார்கள்; இருப்பினும், பொதுவான நம் மன ஆறுதலுக்காக கீழ்க்கண்ட கருத்து தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எவ்வளவு இனிய, இரக்கமிக்க அரசி எனில், நம் துன்ப துயரங்களில் நமக்குதவ எவ்வாறு தயாராயிருக்கிறார்களெனில் தாய் திருச்சபை, இச்செபத்தில், இரக்கத்தின் அரசி என்று அவர்களை நாம் வணங்க வேண்டுமென்று விரும்புகிறது.

''அரசி என்ற இந்தச் சிறப்புப் பெயர், பேரரசி என்ற பட்டப் பெயரினின்றும் மாறுபட்டது. பேரரசி என்பது கடுமையையும் கண்டிப்பையும் குறிக்கிறது. அரசி என்பதோ பரிவையும் எளியோர் மட்டில் அன்பையும் குறிக்கிறது" என்று புனித பெரிய ஆல்பர்ட் குறிப்பிடுகிறார். 

செனெக்கா என்ற பேரறிஞரின் கூற்றுப்படி, "அரசர்களுடையவும் அரசிகளுடையவும் பெருமை, இழிநிலை யிலிருப்போரின் துயர் களைவதில் தான் அடங்கியுள்ளது கொடுங்கோலர்கள் ஆட்சி புரிகையில் தம் சொந்த நலனையே குறியாகக் கொள்கின்றனர். மாறாக அரசர்கள் ஆட்சி செய்கையில் தம் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொள்கின்றனர். 

இக்காரணத்திற்காகத் தான் முடிசூட்டு விழாவின் போது அரசர்களின் தலைகள் எண்ணெயால் அபிஷேகம் பண்ணப் படுகின்றன. எண்ணெயானது இரக்கத்தின் அடையாளம். எல்லாவற்றிற்கும் மேலாக, தம் குடிகள் மட்டில் பரிவுணர்வும் இரக்க மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

"எனவே, அரசர்கள் அறப்பணிகளிலேயே சிறப்பாக அக்கறை கொள்ள வேண்டும். அத்தோடு அவர்கள் குற்றவாளிகளை நியாயமான தண்டனை மூலம் தண்டிக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. இருப்பினும் மரியாயைப் பொருத்த மட்டில் இது மறுபாடுடையது. அவர்கள் அரசிதான் என்றாலும், தீயோரைத் தண்டிப்பதில் குறியாயுள்ள நீதியின் அரசியல்ல; மாறாக, பரிவுடன் பாவிகளை மன்னிப்பதில் குறியாயுள்ள இரக்கத்தின் அரசியாவார். இதன் காரணமாகவே, நாம் அவர்களை, "இரக்கத்தின் அரசி' என்று சிறப்பாக அழைக்க வேண்டுமென்று திருச்சபை விரும்புகிறது. 

''கடவுளைச் சார்ந்தது வல்லமை ஆண்டவரே உம்மைச் சார்ந்தது இரக்கம் என்றும் நான் தெரிந்து கொண்டேன்'' (சங். 61: 11-12) என்ற தாவீதரசனின் சொற்களுக்கு விளக்கமளிக்கையில், பாரீஸ் பல்கலைக் கழகத் தலைவர் ஜான் ஜெர்சன், "நீதியும் இரக்கமும் ஒருங்கிணைந்த கடவுளின் அரசு , நம் ஆண்டவரால் பிரிக்கப்பட்டு, நீதியின் அரசைத் தமக்கென ஒதுக்கிக் கொண்டார் ; இரக்கத்தின் அரசைக் கன்னி மரியாயிக்கென ஒதுக்கினார். அதே வேளையில் மானிடருக்கு அளிக்கப்படும் பரிவிரக்கம் அனைத்தும் மாமரியின் கரங்கள் வழியாகவே செல்லவேண்டும் என்றும் அவற்றை அவர்கள் தம் விருப்பப்படி அளிக்கலாம் என்றும் நியமனம் செய்தார். கீழ் வருபவைதான் ஜெர்சனின் சொந்த சொற்கள் : "கடவுளின் அரசு வல்லமையும் இரக்கமுங் கொண்டுள்ளது ; வல்லமையைத் தமக்கென வைத்துக் கொண்டு இரக்கத்தின் அரசை ஒரு வகையில் தம் அன்னைக்கு விட்டுக் கொடுத்தார்'' இதனை புனித தாமசும் உறுதிப் படுத்துகிறார். நிரூபங்கள் பற்றி எழுதிய தம் நூலுக்கான முகவுரையில் அவர், "தம் உதரத்தில் நித்திய வார்த்தையைக் கருத்தரித்துப் பெற்றெடுத்த போது, புனித கன்னிமாமரி , கடவுளின் அரசில் பாதியைப் பெற்றார்கள். அவர்கள் இரக்கத்தின் அரசியாகவும், இயேசுக் கிறிஸ்து நீதியின் அரசராகவும் ஆனார்கள்" என்று எழுதியுள்ளார்.

நித்திய தந்தை, இயேசுக் கிறிஸ்துவை நீதியின் அரசராக நியமித்து, உலகம் முழுமைக்கும் பொதுவான நடுவராகவும் ஏற்படுத்தினார். எனவேதான் அரச தீர்க்கத்தரிசி. "இறைவா அரசனுக்கு உமது தீர்மானத்தின் நேர்மையையும், அரசகுமாரனுக்கு, உமது நீதியையும் கொடுத்தருளும்'' (சங். 71:1) என்றுரைக்கிறார். இதனை விளக்குகையில் மறைவல்லுநர் ஒருவர். "ஆண்டவரே! நீர் உம் திருக்குமாரனின் அன்னைக்கு இரக்கத்தை அளித்திருப்பதால் உம் திருக்குமாரனுக்கு நீதியை அளித்துள்ளீர்'' என்று எழுதுகிறார். புனித போனவெந்தூர் தாவீதரசனின் இச்சொற்களுக்குப் பொருள் திரட்டிக் கூறுகையில் ''இறைவா, அரசருக்கு உமது நீதித் தீர்ப்பையும், அவரது அன்னையான அரசிக்கு உமது இரக்கத்தையும் அளித்தருளும்'' என்றுரைக்கிறார். பிராகு நகர் அதி மேற்றிராணியாரான ஏர்னெஸ்ட் என்பவரும், "நித்திய பிதாவானவர் நீதி செலுத்தி தண்டிக்கிற அலுவலைத் தம் திருக்குமாரனுக்கும், இரக்கம் காட்டித் தேவையிலிருப்போரின் துயர் களையும் பொறுப்பை அவரின் திருத்தாயாருக்கும் அளித்தார்'' என்கிறார். சொல்லப்போனால், கடவுள் இரக்கத்தின் அரசியாம் மாமரியை, மகிழ்ச்சியின் தைலத்தால் பூசி அபிஷேகம் செய்தார் என்று தாவீது தீர்க்கதரிசி முன்னுரைத்தார். ''கடவுள் உம்மை மகிழ்ச்சி தைலத்தால் அபிஷேகம் செய்தார்" (சங் 4417) ஆதாமின் நிர்ப்பாக்கிய மக்களாகிய நாமெல்லோரும், நமக்கு இரக்கமும் தயாளமும் நிறைந்த இவ்வுன்னத் அரசி விண்ணில் இருக்கிறார்கள் என்றெண்ணி நாம் மகிழும்படி இவ்வாறாயிற்று. எனவே, புனித போன வெந்தூரோடு நாமும் சேர்ந்து, "ஓ மரியாயே நீங்கள் இரக்கமெனும் தைலத்தாலும் தயாளமெனும் எண்ணெயாலும் முற்றிலும் அபிஷேகம் பெற்றுள்ளீர்கள்" என்று சொல்வதோடு, எனவே இறைவன் தங்களை மகிழ்ச்சியெனும் தைலத்தால் அபிஷேகம் செய்துள்ளார் என்றும் சொல்லலாம்.

அரசியான மாமரியின் முன் அடையாளமான எஸ்தர் அரசியின் வரலாற்றை, புனித பெரிய ஆல்பெர்ட், அழகுற இப்பொருளுக்குப் பொருத்திக் காட்டுகிறார்.

எஸ்தர் என்ற வேதாகம புத்தகத்தின் நான்காவது அத்தியாயத்தில், அசுவேருசுடைய ஆட்சியின் போது, யூதர்களனைவரையும் மரண தண்டனைக்குட்படுத்திய ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது என்று வாசிக்கிறோம். மரண தண்டனை பெற்றவர்களுள் ஒருவரான மார்தொக்கே , எஸ்தர் அரசியைச் சந்தித்து அவள், அந்த ஆணையைத் திரும்பப் பெற அசுவேருசுடன் பேச வேண்டும் என்றும் அதன் மூலம் அவள் அனைவரின் மீட்பாகவேண்டும் எனவும் கேட்டார். முதலில் எஸ்தர் அப்பணிக்கு இணங்கவில்லை. இத்தகைய வேண்டுகோள் அரசரை மேலும் எரிச்சலடையச் செய்யும் என்று பயப்பட்டாள். ஆனால் மார்தொக்கே அவளைக் கடிந்தார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் அவள் எண்ணக் கூடாது ; ஏனெனில் கடவுள் அவளை அரியணையில் அமரச் செய்திருப்பது, அவள் யூதர் அனைவரின் மீட்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் என்று சொல்லியனுப்பினார் ; "நீ அரண்மனையில் இருப்பதனால், மற்ற யூதர் அனைவரும் சாக, நீ மட்டும் சாகாது உயிர் வாழலாம் என்று நினைக்க வேண்டாம்'' (எஸ்தர் 4:13). இவ்வாறுதான் மார்தொக்கே எஸ்தர் அரசியிடம் பேசினார். நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையிலிருந்து நம்மை விடுவிக்க மாமரியெனும் அரசி , எத்தகைய ஒரு விருப்பமின்ைையக் காட்டினாலும் நாமும், "ஒ மாதரசியே! கடவுள் தங்களை உலக அரசியெனும் மகிமைக்கு உயர்த்தியிருப்பது, தங்களின் நலனை மட்டும் பேணிக்கொள்வதற்கல்ல ; மாறாக, இப்பென்னம் பெரிய பதவியிலிருந்து கொண்டு, நிர்ப்பாக்கிய படைப்புகளான எங்கள் மீது இரக்கங் காட்டி, எங்களுக்கு மென்மேலும் உதவுவதற்குத்தான்" என்று கேட்கலாம். எஸ்தர் தன் முன் நின்று கொண்டிருப்பதை அசுவேருஸ் கண்டவுடன் அவளிடம், அவள் விரும்புவதென்ன வென்று, அன்புடன் கேட்டான். "உன் வேண்டுதல் என்ன?'' அரசியின் பதில், "அரசே அடியாள் மீது கருணை கொள்ளத் தங்களுக்கு விருப்பமிருந்தால், தாங்கள் எனக்கும் என் குலத்தவருக்கும் உயிர்ப் பிச்சை அளிக்க வேண்டும் என்று தங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்'' (எஸ்தர் 7:3). அசுவேருஸ் அவளுடைய வேண்டுகோளை ஏற்று, அவ்வாணையைத் திரும்பப் பெறக் கட்டளையிட்டான். எஸ்தர் மட்டிலுள்ள அன்பின் காரணமாக, அசுவேருஸ் யூத மக்களுக்கு மீட்பினை வழங்கினான் என்றால், தாம் மிகவே நேசிக்கும் மாமரியின் செபங்களைக் கடவுள் எவ்வாறு நிராகரிக்க முடியும்? நிர்ப்பாக்கிய பாவிகளாகிய நாம் அவர்களின் அடைக்கலத்தை நாடுகையில், அவர்கள் நமக்காக இவ்வாறு வேண்டுவார்கள், "என் அரசே என் இறைவா, அடியேன் மீது கருணை கொள்ளத் தேவரீருக்கு விருப்பமிருந்தால், (தாம் ஆசீர்வதிக்கப் பெற்றவர், பரிசுத்தர் , மனித குலம் இழந்த அருளை முழுமையாகப் பெற்றுள்ள ஒரே நபர் என்பதையும், ஆண்டவரால் நேசிக்கப்பட்டவரும் அவரை, எல்லாப் புனிதர்களுடையவும் சம்மனசுக்களுடையவும் மொத்த நேசத்தைவிட அதிக நேசத்துடன் கடவுளை நேசிக்கிறவர் தாம்தான் என்றும் அவர்களறிவார்கள் என்பது உண்மையே.) நான் கேட்கும் என் மக்களை எனக்குத்தாரும்'' என்றும் "தேவரீர் என்னை நேசித்தால், ஓ! ஆண்டவரே, நான் கெஞ்சிக் கேட்கும் இப்பாவிகளை எனக்குத் தாரும்'' என்றும் சொல்வார்கள். கடவுள் அவர்களுடைய மன்றாட்டை மறுக்க முடியுமா? கடவுளிடம் மாமரியின் செபத்திற்குள்ள வல்லமையை யாரறியார்? 'அவளுடைய நாவில் அருளிரக்கத்தின் நீதிமுறை உள்ளதாம்'' (பழ. 31:26). அவர்களுடைய செபம் ஒவ்வொன்றும் நம் ஆண்டவரைப் பொருத்தவரை நியமிக்கப்பட்ட கட்டளையாகும். எனவே, அவர்கள் பரிந்து பேசுகிற ஒவ்வொரு நபர் மட்டிலும் அவர் இரக்கம் காட்டியாக வேண்டும். "திருச்சபை ஏன் மாமரியை இரக்கத்தின் அரசி என்று அழைக்கிறது?'' என்று கேள்வி கேட்டு புனித பெர்நார்து பதிலும் அளிக்கிறார். "ஏனெனில், அவர்கள் இறைவனுடைய இரக்கத்தின் அதல பாதாளத்தினை அவர்கள் விரும்பும் நபருக்கு, விரும்பும் போது, விரும்புகிற அளவுக்குத் திறக்கிறார்கள். எனவே, அவர்கள் பாதுகாக்க விரும்பும் ஒருவர் எவ்வளவு பெரிய பாவியாயிருப்பினும் மீட்பின்றிச் சேதமுறுவதில்லை ".

ஒருவேளை, பழிபாவங்கள் மிகவே கட்டிக் கொண்ட சில பாவிகளுக்காக மர்தா பரிந்து பேச முன்வரமாட்டார்கள் என நாம் அச்சங்கொள்ளலாம். அல்லது இந்த ஒப்பரிய அரசியின் புனிதத்தையும் மாண்பையும் கண்டு, அளவுக்கதிகம் மலைத்துப் போகலாம். "இல்லை ' என்கிறார் புனித VII-ம் திரகோரியார் ; " ஏனெனில், அவர்களது புனிதம் எவ்வளவுக்கு அதிகமாகவும் உயர்வாகவும் உள்ளதோ அவ்வளவுக்கு அதிக இனிமையும் அருளிரக்கமும், தம் வாழ்வைச் சீரமைக்கும் விருப்போடு தம்மை நாடிவரும் பாவிகள் மீது அவர்கள் காட்டுகிறார்கள்''. உலக அரசர்களும் அரசியரும் தம் பெருமை, பகட்டு மற்றும் ஆரவாரக் காட்சிகளால் பயத்தை ஏற்படுத்தி, மக்கள் தங்களை நெருங்காதவாறு அச்சத்தை ஊட்டி விடுகின்றனர். ஆனால் இந்த இரக்கத்தின் அரசியை எளியோர் நாட என்ன பயம்? ஏனெனில் அவர்கள் நடுக்கத்தை விளைவிப்பவர்களல்ல, மாறாக, தம்மிடம் வருபவர்களிடம் சாந்தத்தையும் இனிமையையுமன்றி, கண்டிப்பை அவர்கள் காட்டுவதே இல்லை . ''மனித பலவீனம், அவர்களிடம் செல்ல ஏன் அஞ்ச வேண்டும்? அவர்களிடம் கடுமையோ, நடுங்கச் செய்வதோ எதுவுமில்லை ; அவர்கள் முற்றிலும் இனிமை நிறைந்து, அமுதையும் கம்பளியையும் அனைவருக்கும் வழங்குபவர்கள்' என்று விளக்கி உரைக்கிறார் புனித பெர்நார்து. மாமரி கொடுப்பதற்கு விரும்புபவர்கள் என்று மட்டுமல்ல, அவர்களே அனைவருக்கும் அமுதும் கம்பளியும் அளிக்கிறார்கள் ; இரக்கத்தின் அமுது, நம்மீது அவர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவும்; கம்பளி, இறைவனின் நீதி தீர்ப்பெனும் இடியினின்றும் நம்மைப் பாதுகாக்கும் கேடையமுமாகும்.

சுயெத்தோன் எழுதிய நூலில், பேரரசர் தீத்துஸைப் பற்றி, அவர் தம்மிடம் கேட்கப்பட்ட சலுகையை ஒருபோதும் மறுத்ததில்லை என்றும், சிலவேளை அவர் கொடுக்க முடிந்ததற்கு அதிகமாகவே வாக்குக் கொடுப்பார் என்றும், அதைப்பற்றி எச்சரிக்கையில் அவர், ஓர் அரசன் தன்னைக் காண வந்த ஒரு நபரை ஒருபோதும் மன திருப்தியின்றி அனுப்பக் கூடாதென்று பதிலிறுப்பார் என்றும் எழுதி வைத்துள்ளார். தீத்துஸ் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் உண்மையில் அவர் அடிக்கடி ஏமாற்றியிருப்பார் அல்லது தம் வாக்குறுதிகளில் தவறியிருப்பார். நம் அரசியோ ஏமாற்றாதவர்கள். தம்மை நாடுபவர்களுக்குத் தாம் விரும்பும் அனைத்தையும் பெற்றுத் தருபவர்கள். மேலும், "அவர்களுக்கு நம் ஆண்டவர், எத்தகைய பெருந்தன்மை படைத்ததும் தயாள குணம் நிறைந்ததுமான இதயத்தைக் கொடுத்திருக்கிறார் என்றால், அவர்களிடம் வேண்டுவோர் யாரையும் அதிருப்தியுடன் அவர்கள் அனுப்ப முடியாது'' என்று லான்ஸ் பெர்ஜியுஸ் என்பவர் கூறியுள்ளார். புனித போனவெந்தூரோ "ஓ மரியாயே! இரக்கத்தின் அரசியான தாங்கள் இரங்குதற் குரியவர்களுக்கு உதவி செய்ய எவ்வாறு மறுக்க முடியும்?'' என்றும், " இரங்குதற் குரியோரல்லாது வேறு யார் இரக்கத்திற் குரியவராவர்? தாங்கள் இரக்கத்தின் அரசி என்பதாலும் நான், பாவிகளில் மிகவும் நிர்ப்பாக்கியன் என்பதாலும் தங்களின் இரக்கத்திற்கு உரியவர்களில் நான் முதன்மையானவன் என்பது தெளிவு. ஓ மாதரசியே! என் மீது தங்களின் பரிவிரக்கத்தை எவ்வாறு காட்டாதிருக்க முடியும்? என் மீது இரங்கி, ஓ! இரக்கத்தின் அரசியே , என் மீட்பின் பொறுப்பினை எடுத்துக் கொள்ளும்" என்றும் வேண்டுகிறார்.

"எண்ணிக்கையில் எவ்வளவு அதிகமான பாவங்களும், அவை எவ்வளவு பெரியவையா யிருப்பினும், அவை தங்களின் ஆற்றலையும் தங்களின் தயாளத்தையும் விட விஞ்சிப் போக முடியாதென்பதால் , ஓ புனித கன்னிகையே! எங்கள் பாவங்களின் எண்ணிக்கையை முன்னிட்டு, எங்களுக்குத் தாங்கள் உதவ முடியாதென்று சொல்லாதீர்கள்!'' என்று கேட்கிறார் நிக்கோமேதியாவின் புனித ஜார்ஜ் . அத்தோடு மட்டுமல்லாது, "தங்கள் ஆற்றுலுக்கு எதிராக நிற்பதற் கெதுவுமில்லை ; ஏனெனில், நம்மைப் படைத்தவர் தங்களைத் தம் தாயெனும் பெருமைக் குயர்த்தி, தங்களின் மகிமையைத் தம் மகிமையெனக் கருதுகிறார். தேவ சுதனும் அதில் மகிழ்வு கொண்டு தங்களுக்குப் பட்ட கடனைத் தீர்ப்பதாகவே எண்ணித் தங்களின் விண்ணப்பத்தை நிறைவேற்றுகிறார்'' என்றும் கூறுகிறார். இதன் பொருள் யாதெனில், கன்னிமாமரி , தம்மை அவர்தம் தாயாராகத் தேர்ந்து கொண்டமைக்கு எல்லையில்லா விதத்தில் தேவசுதனுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள் என்றாலும் தேவ சுதனும் தமக்கு மனித இயல்பை அளித்தமைக்காக அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. எனவே மாமரிக்குத் தாம் பட்டக் கடன்பாட்டைச் செலுத்தும் முகமாயும், அவர்களுடைய மகிமையில் தாம் மகிமையுற்று, அவர்களின் எல்லா விண்ணப்பங்களையும் ஏற்று அவர்களைச் சிறப்பான விதத்தில் பெருமைப்படுத்துகிறார்.

எனவே, உலகிலுள்ள யாரிடமும் அவர்களுக்குள்ள கிருபையும் தயாளமும் காண முடியாது என்பதையும், அவர்கள் செல்வச் செழிப்பும், நிறைந்த தயாளமுங் கொண்டுள்ளது மன்றி, இறைவனிடம் மிக்க செல்வாக்கு பெற்றவர்கள் என்பதையும் தெரிந்து, இவ்வரசி மட்டில் நாம் எவ்வளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்! புனித பிரிஜித்தம்மாளிடம் நம் புனித அன்னையே இதனை வெளிப்படுத்தியுள்ளார்கள். ''நாமே விண்ணின் அரசியும் தாயளத்தின் தாயுமாவோம் ; நீதிமான்களின் மகிழ்ச்சியும், பாவிகளை இறைவனிடம் கொண்டு செல்லும் வாயிலுமாவோம். எம் தயாளத்தை இழக்கக் கூடிய அளவுக்குச் சபிக்கப்படும் பாவி யாரும் உலகிலில்லை ; ஏனெனில் எம் பரிந்துரையால் சிலர் எதையும் பெறவில்லை யென்றாலும், அவர்கள், பேய்களால் இயல்புக்கும் குறைந்த அளவில் சோதிக்கப்படும் வரத்தையாகிலும் பெறுவர். எம்முடைய உதவியை வேண்டுகிற யாரேனும் அந்தத் திரும்பப் பெற முடியாத தீர்ப்பு சொல்லப்பட்டு விட்டாலொழிய, (அதாவது தீர்ப்பிடப்பட்டோர் மீது கூறப்படும் தண்டனை) அவர் மீண்டும் இறைவனிடம் வந்து அவரது இரக்கத்தை அனுபவிக்க முடியாத அளவுக்கு இறைவனால் தள்ளப்படுவதில்லை. யாவராலும், யாம் இரக்கத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறோம். உண்மையில், எம் திருக்குமாரன் மனிதர் மட்டில் கொண்டுள்ள இரக்கமே எம்மை இவ்வாறு அவர்கள் மீது இரக்கங் கொள்ள வைத்தது. எனவே, யாவருக்கும் மிக்க இரக்கம் காட்டி, பாவிகளுக்கு உதவ , மிகவே விருப்பம் கொண்டுள்ள எம்மை நோக்கிச் செபிக்க இவ்வுலகில் கூடுமாயிருந்தும் செபிக்காத பரிதாபத்திற்குரிய மனிதன், நிர்ப்பாக்கியனாக, நித்தியத்துக்கும் நிர்ப்பாக்கியனாகி அவ்வாறே தீர்ப்பிடப்படுகிறான்" என்று முடிவாகக் கூறினார்கள்.

நம் மீட்பினை நாம் நிச்சயப்படுத்த விரும்பினால், இந்த மிக்க இனிய அரசியை எப்போதும் நாடுவோம். நம் பாவங்களைக் கண்டு அதிர்ச்சியுற்று நாம் அதைரியப்படத் தேவையில்லை. ஏனெனில், தம்மிடம் பரிந்து பேசக் கேட்கும் மிகப் பெரிய , மற்றும் பெரிதும் கைவிடப்பட்ட பாவிகளை இரட்சிப்பதற்காகவே புனித கன்னித்தாய் இரக்கத்தின் அரசியாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களது தெய்வீக பத்தா அவர்களை நோக்கிக் கூறும் சொற்களில், மோட்சத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் கிரீடம் இத்தகையதாகவே இருக்கும். 'லீபானிலிருந்து வா, என் மணமகளே லீபானிலிருந்து வா; நீ முடி சூட்டப்படுவாய், ...... சிங்கக் குகைகள், சிவிங்கி மறைவிடங்கள் ஆகியவற்றினின்றும் இறங்கி வா''. (உன். சங். 4:8) காட்டு மிருகங்களின் இக்குகைகள் யாவை? அவை, பாவத்தின் வீடாகி விட்ட நிர்ப்பாக்கிய பாவிகளின் ஆன்மாக்கள்தான். பாவமென்பது மிகப் பயங்கர, கோர உருக்கொண்ட அரக்கன். மடாதிபதி ரூபர்ட்டுடன் நாமும் சேர்ந்து; "புனித மரியாயெனும் அரசியே உங்கள் உதவியால் மீட்பு பெற்ற பாவிகள் தான் தங்களுக்கு மோட்சத்தில் கிரீடமாவர் அவர்களுடைய மீட்புதான் இரக்கத்தின் அரசியான தங்களுக்குப் பொருத்தமான மணி முடியாம்'' என்று நம் தேவ அன்னையிடம் கூறுவோம். .

எடுத்துக்காட்டு 

புனித அகுஸ்தினார் சபையின் மறைதிரு. சகோதரி கத்தரீனுடைய வாழ்க்கை வரலாற்றில் கீழ்வரும் விபரத்தை வாசிக்கிறோம். 

அந்தச் சகோதரி தங்கியிருந்த இடத்தில் மேரி என்ற பெயர் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள். தன் இளமையில் ஒரு பாவியாயிருந்த அவள், முதிர் வயதிலும் பிடிவாதமாகத் தன் ஒழுக்கக் கேடான வாழ்க்கையைத் தொடர்ந்ததால், அவள் நகரை விட்டுத் துரத்தப்பட்டு, ஒதுக்கிடமான ஒரு குகையில் வாழ்ந்து வந்தாள். 

அக்குகையிலேயே, பாதியாக நோயால் உருகி, தேவதிரவிய அனுமானங்களைப் பெறாமலே மரித்தாள். எனவே, ஒரு மிருகத்தைப் போல வயல்வெளி ஒன்றில் புதைக்கப்பட்டாள். இவ்வுலகை விட்டுப் பிரிந்த எல்லா ஆன்மாக்களுக்காகவும் மிக்க உருக்கமுடன் வேண்டும் சகோதரி கத்தரீன், இந்தப் பாவப்பட்ட முதியவளின் துரதிருஷ்ட வசமான முடிவைக் கேள்விப்பட்டும் அவளது ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபிக்க ஒருபோதும் நினைத்ததில்லை; ஏனெனில், (மற்றெல்லோரும் எண்ணியது போல்) சகோதரி கத்தரீனும், அவள் மீட்பின்றிக் கதிகெட்டுப் போனாள் என்று எண்ணினாள். 

நான்காண்டுகள் கழித்து ஒருநாள் துயருறும் ஆன்மா ஒன்று சகோதரிக்குத் தோன்றி, "என்னுடைய யோகம் எவ்வளவு துரதிருஷ்டவசமானது சிஸ்டர் கத்தரீன்! நீங்கள் இறக்கிற எல்லா ஆன்மாக்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடுகிறீர்கள்; என்னுடைய ஆன்மா மீது மட்டும் தங்களுக்கு இரக்கம் வரவில்லை'' என்றது. ''நீ யார்?'' என்று கடவுளின் ஊழியக்காரி கேட்டார். "நான்தான் அந்தக் குகையில் இறந்த அந்த ஏழை மேரி" என்று பதில் கூறியது. 

"நீ மீட்கப்பட்டு விட்டாயா?'' என்று சகோதரி கத்தரீன் கேட்க, அந்த ஆன்மா, ''ஆம், புனித கன்னிமாமரியின் இரக்கத்தால் மீட்படைந்தேன்'' என்றது. ''எவ்வாறு என்று சகோதரி வினவ, அந்த ஆன்மா, "சாகும் தருணம் நெருங்கிய போது நான் பாவச் சுமை நிறைந்த, அத்துடன் யாவராலும் கைவிடப்பட்ட என்னையே உற்று நோக்கினேன். அப்புறம், தேவதாயை நோக்கி இவ்வாறு வேண்டினேன்: 

'என் ஆண்டவளே, தாங்கள் தான் கைவிடப்பட்டோரின் அடைக்கலம்; இதோ எல்லோராலும் கைவிடப்பட்டு இப்போதிருக்கிறேன். தாங்கள் தான் என் ஏக நம்பிக்கை; தாங்கள் மட்டுமே எனக்கு உதவ முடியும்; என் மீது இரக்கமாயிருங்கள்' என்று வேண்டினேன். பரிசுத்த கன்னிகை எனக்கு உத்தம மனஸ்தாப வரம் பெற்றுத் தந்தார்கள். நான் மரித்தேன், மீட்கப்பட்டேன். இது தவிர என் அரசி என்னுடைய உத்தரிக்கிற ஸ்தலத்து நாட்களையும், - வேதனையைக் கடுமையாக்கி பல ஆண்டுகளாக இருந்திருக்க வேண்டிய ஆக்கினையை, எனக்குக் குறைத்துத் தந்தார்கள். 

சிஸ்டர், நான் தங்களிடம் கெஞ்சிக் கேட்பது, எனக்காக மட்டும் நிறைவேற்றப்படும் ஒரு சில பலி பூசைகளே. எனக்காக அவற்றைச் செய்வியுங்கள். நான் தங்களுக்காக கடவுளிடமும் மாமரியிடமும் வேண்டிக்கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன்'' என்று கூறி மறைந்தது. 

கோதரி கத்தரீன் உடனே அப் பலி பூசைகள் நிறைவேற்றப்பட ஒழுங்கு செய்தார்கள்: ஒரு சில நாட்களுக்குப் பின், சூரியனைப் போல் பிரகாசித்துக் கொண்டு அந்த ஆன்மா மீண்டும் தோன்றி, "சிஸ்டர் கத்தரீன் தங்களுக்கு நன்றி! இதோ நான், இறைவனின் இரக்கத்தைப் பாடவும் உங்களுக்காக வேண்டவும் மோட்சம் செல்கிறேன்'' என்று கூறி மறைந்தது.

செபம் 

ஓ! எம் தேவ அன்னையே, மாமரியெனும் மாதரசியே, உடல் முழுவதும் காயமும் புண்ணுமுடைய பிச்சைக்காரன் ஒருவன் ஒரு பெரிய அரசியிடம் அணுகுவது போல், விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசியான உம் முன் நிற்கிறேன். நீவீர் அமர்ந்திருக்கும் ஆட்சி பீடத்திலிருந்து என்னைப் புறக்கணிக்காது, ஏழை பாவியாகிய என் மீது கருணைக்கண் காட்டிட மன்றாடுகிறேன். 

நிர்ப்பாக்கியர்களின் துயர் களையவே கடவுள் உம்மை இரக்கத்தின் அரசியாகவும், ஏழைகளுக்குதவ, செல்வச் செழிப்புள்ளவர்களாகவும் ஏற்படுத்தியுள்ளார். என்னைக் கண்ணோக்கி, என் மீதிரங்குங்கள். நான் பாவ நிலையினின்றும் மனம் மாறி, அர்ச்சிஷ்டவனாகக் காணும் வரை என்னைக் கைவிடாது, இரக்கமுடன் உற்று நோக்குங்கள். 

நான் தகுதியற்றவன் என்பதை நான் நன்கறிவேன். அதைவிட மேலாக என்னுடைய நன்றி கெட்ட தன்மை காரணமாக, நீவீர் இறைவனிடமிருந்து உம் பரிந்துரையால் எனக்குப் பெற்றுத் தந்த அருட்கொடைகள் பறிக்கப்படவும் பாத்திரவானாகி விட்டேன்; ஆனால் இரக்கத்தின் அரசியான நீவிர், தகுதியைப் பாராது, தேவையிலிருப்போருக்கு உதவ, அவர்களின் அவலங்களையே காண்கிறீர். மேலும் என்னை விட அதிக தேவையிலிருப்பவர் யார்? 

ஓ மேன்மை மிக்க அரசியே! இப்பிரபஞ்சத்தின் அரசியாகிய நீவீர் ஏற்கனவே எனக்கும் அரசிதான் என்பதை நான் நன்கறிவேன். இருப்பினும், நீவீர் விரும்பும் வகையில் என்னை வழி நடத்துவதற்கு வசதியாக என்னை உமது ஊழியத்துக்கு அற்பணிக்கத் தீர்மானித்துள்ளேன். 

எனவே புனித போனவெந்தூர் சொற்களில்; "என் விருப்புக்கு என்னை விட்டுவிடாது. என் அரசியே, நீரே என்னை ஆட்சி செய்யும்,'' நீவீர் விரும்பும் பணிக்கு என்னை அமர்த்தும்; எனக்குக் கட்டளையிடும், நான் கீழ்ப்படியாத போது என்னைத் தண்டியும், ஏனெனில், உம் கரங்களிலிருந்து வரும் தண்டனை என் மீட்பிற்கான உறுதிப்பாடாகும். இவ்வுலகை ஆள்பவனாக இருப்பதைவிட உம் ஊழியனாக இருப்பதையே விரும்புகிறேன். "உமக்கே நான் சொந்தம், என்னைக் காத்தருளும்". (சங். 118:94).

ஓ தேவதாயே! உம்முடையவனாக என்னை ஏற்றுக் கொண்டு, என் மீட்பின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். என்னையே நான் மறுத்து, உம்மிடம் என்னைக் கையளிக்கிறேன். கடந்த காலத்தில் நான் உமக்குத் தகுந்த விதத்தில் ஊழியம் செய்யாதிருந்திருந்தால், அல்லது உம்மை மகிமைப்படுத்துவதற்குக் கிடைத்த அநேக சந்தர்ப்பங்களைக் கைநழுவ விட்டிருந்தால், எதிர்காலத்தில் உமது அன்பிற்குரிய பிரமாணிக்கமுள்ள ஊழியர்களில் ஒருவனாயிருப்பேன். 

இந்நாள் முதற்கொண்டு எனக்கு மிகவும் பிரியமான அரசியாம் உம்மை மகிமைப் படுத்துவதிலும் நேசிப்பதிலும் யாரும் என்னை விஞ்ச விடமாட்டேன் எனத் தீர்மானித்துள்ளேன். இது என் வாக்குறுதி. உமது உதவியுடன் இதனை நான் நிறைவேற்றுவேன் என நம்புகிறேன். 

ஆமென்.