லூக்கா 1:26 விண்ணக கடவுள், அதிதூதர் கபிரியேலைத் தனது தூதராக மரியா என்ற கன்னிகையிடம் அனுப்பினார்.
சில முக்கிய கையெழுத்துப் பிரதிகளில் "பெண்களுக்குள் நீர் ஆசீர் பெற்றவர்" என்ற சொற்றொடரும் இவ்வசனத்தில் சேர்ந்து காணப்படுகிறது.
வுல்காத்தா என்னும் இலத்தின் மொழி பெயர்ப்பில் "அருள் நிறைந்தவரே வாழ்க!" என்றும் காணப்படுகிறது.
பிரிவினை சபையினரின் வேதாகமத்தில் "கிருபை பெற்றவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே இருக்கிறார். ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்று காணப்படுகிறது.
இத்தனை வாழ்த்துக்குப் பிறகு வானதூதர் தாம் கொண்டு வந்த செய்தியை கொடுக்கிறார்.
லூக்கா 1:31 "இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெருவீர்; அவருக்கு இயேசு என்றும் பெயரிடுவீர்.
32. அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியனையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33. அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது என்றார்.
ஆண்டவரின் இந்த திட்டத்திற்கு மரியன்னை அடிபணிந்து அதை ஏற்றுக்கொண்டார்.
அவ்வாறு அன்னை மரியாள் கடவுளின் ஏக குமாரனை தன் உதரத்தில் தாங்கி இயேசுவின் தாயாகிறார். அதாவது கடவுளின் தாயாகிறார் அன்னை மரியாள்.
பாருங்கள்... தமது அதிதூதர் கபிரியேலையே அனுப்பி எல்லாம் வல்ல கடவுள் அன்னை மரிக்கு வந்தனம் செலுத்துகிறார்.
அத்தகைய பாக்கியம் பெற்ற அன்னை மரியாள், பரிசுத்த ஆவியினால் நிழலிடப்பட்ட பின்பு, அன்னையின் ஆவி பரிசுத்த ஆவியால் அக்களிப்புற்று கடவுளால் களிகூறுக்கின்றது.
லூக்கா 1:48 " இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்".
இந்த வாக்குகளை தூய ஆவியாரே கூறுகிறார். ஏனெனில் அந்நேரம் அன்னை மரியாள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்.
இப்படிப்பட்ட உன்னத அன்னை மரியாளை "பேறு பெற்றவள்" என்று தலைமுறை தலைமுறையாகப் போற்ற வேண்டிய கடமையில் இருக்கிறோம்.
இந்நிலையில் எந்த மனிதனாவது மரியன்னையை பழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயமாக அவரில் அன்னை மரியாவின் பகைவனான ( தொடக்கநூல் 3:15) சாத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.