உலக மக்கள் உலக சிந்தனைகளிலேயே நோக்கமாயிருக்கிறார்கள். தங்களைப் படைத்த அன்புக் கடவுளை மறந்தே வருகிறார்கள். உலகத்தின் மாய்கைக்கும், தங்கள் சுகபோக சரீர ஆசாபாசங்களுக்கும் அதிகமாக உட்பட்டு, சுயநலக்காரர்களாக வாழ்கிறார்கள். கடவுளுடைய கட்டளைகளை மிக அலட்சியமாக எண்ணி மீறி நடக்கிறார்கள்.
சுருக்கத்தில், பாவம் மலிந்து விட்டது. உலகில் அடக்க ஒடுக்கமும் கெட்டு விட்டது. பாவத்தின் பலன் போர். இரண்டு உலக யுத்தங்களாலும், நித்தமும் உலகின் பல பாகங்களில் சிந்தப்படும் மானிட இரத்தத்தாலும் உலகம் கறைபட்டு தேவகோபத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையிலும் மக்கள் கடவுளை நினைப்பதாக இல்லை. கத்தோலிக்க மக்கள் முதலாய்த் தங்கள் வேத அனுசாரத்தை அலட்சியமாய் ஒதுக்குகிறார்கள்.
ஒழுக்கக் கேடு விளைவிக்கும் நவீன கேளிக்கைகள் மலிந்து விட்டன. பசாசின் ஆதிக்கம் பூமியில் வரவேற்கப் படுகிறது. பாவம் செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் கடவுளின் நீதி உலகைத் தண்டிக்கக் காத்திருக்கிறது.
இவ்வேளையில் மானிடரைத் தன் மக்களாக சிலுவையடியில் பெற்றெடுத்த மாமரி அன்னை நம்மேல் கொண்ட தாயன்பால் தூண்டப்பட்டு பற்பல இடங்களில் 19-ம் நூற்றாண்டிலும், சிறப்பாக 20-ம் நூற்றாண்டில் (1917) பாத்திமா பதியிலும் தோன்றி நம்மைக் கெஞ்சிக் கேட்கிறார்கள், எச்சரிக்கிறார்கள். தன் திருக்குமாரனின் திரு இருதயத்தை மேலும் பாவத்தால் நோகப் பண்ண வேண்டாம் என்று விண்ணப்பிக்கிறார்கள்.
இந்நிலை மாற மக்கள் ஜெபமாலை செய்ய வேண்டும், உத்தரியம் அணிந்திருக்க வேண்டும், தவ முயற்சிகளை விருப்பத்துடன் செய்ய வேண்டும், நல்ல கிறீஸ்தவ வாழ்க்கை வாழ்வதில் ஏற்படும் சிலுவைகளை நம் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு, உத்தம மக்களாய் வாழ வேண்டும் என்று கேட்கிறார்கள். இதுவே தேவ நீதியின் கோபத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழி. இல்லாவிட்டால் நாஸ்தீக கம்யூனிசம் தன் கொடுமைகளால் உலகை நிரப்பி, அழிவுகளும், நாசங் களும், ஆத்தும் சேதங்களும் விளையும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
பாத்திமா செய்தியை உலகம் ஏற்றதா?
இதுவரையிலும் பாத்திமா நாயகியின் இச்செய்தி உலகின் காதில் படாதது போலவே இருந்து வந்திருக்கிறது. இதைக் கேள்விப்படுகிற நாமாவது இத்தாயின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து, பாவிகள் மனந்திரும்பும்படியாகவும், உலக சமாதானத்திற்காகவும் ஜெபமாலை, ஜெப தவம் செய்து, நம் வாழ்வைக் கடவுள் பக்கமாகத் திருப்ப வேண்டும். நம் கிறிஸ்தவக் கடமைகளைப் பிரியத்தோடு செய்ய வேண்டும்.
தேவதாயின் மூலமாக மோட்சத்திலிருந்து வந்துள்ள இவ்வுலக சமாதான நல்வாழ்வுத் திட்டத்தில் நாம் பங்கு பெற்றுக்கொள்ள உடனடியாகத் தீர்மானம் செய்வோமாக. நம்மையும் இவ்வுலகையும் காப்பாற்றிக் கொள்ள இப்பரலோகத் திட்டம் அன்றி வேறு மார்க்கம் இல்லை. ஜெபமாலையைக் கையில் எடுப்போம். ஜெயமடைவோம்.