துக்க தேவரகசியத் தியானம்

1. கர்த்தர் பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்க்கிறார். 

இந்த இரகசியத்தில் ஆண்டவர் வேதனை சாகரத்தில் மூழ்குகிறார். மரணமட்டும் அது நீடிக்கும். பாடுகளின் ஒவ்வொரு சிறு அம்சமும் எப்போதும் அவர் வாழ்நாள் முழுவதுமே அவர் நினைவில் நின்றது. எனினும் நமது படிப்பினைக்கும் நலனுக்கும் அக்கசப்பான பாத்திரத்தின் சகிக்கொணாத தன்மையை முதல் முதல் கண்டது போல நமக்கு இங்கு காட்டச் சித்தமானார். இயற்கையாய் எழும்பும் பயத்தையும், நடுக்கத்தையும் தம் மனித சுபாவம் உணரச் சம்மதித்து , அதன் கோரத்தை விம்மலிலும் வேண்டுதலிலும் வெளிப்படுத்துகிறார்; என்ன மனோ வேதனை!

ஒரு பெரிய கத்தோலிக்கரல்லாத உத்தியோகஸ்தர் புத்திக்கூர்மையுள்ளவர்; நேர்மையாளர்; ஒரு நாள் கடின வியாதிக்கு ஆளானார். சரீர வாதனையை விட இந்நோயால் அவருக்கு ஏற்பட்ட மனோவாதனை அதிகம். இதை எழுதுகிற ஒருவரிடம், "சுவாமி இந்த தாங்கொணா மனோவேதனையால் என்ன இலாபம்?" என்று கேட்டார். அவர் கத்தோலிக்கராக இருந்தால் எவ்விதம் கடவுள் இவ்வாதனையை மனிதனுடைய ஈடேற்றத்திற்குப் பயன்படுத்துகிறார் என்று இக்காட்சியைச் சித்தரித்திருக்கலாம். மனோ வாதனையின் இலாபத்தை இயேசு இங்கு காட்டுகிறார். கிறிஸ்தவர்கள் அதை அறிய வேண்டும்.

"இயேசு நமக்காகப் பாவம் ஆனார்" என்று துணிந்து புனித சின்னப்பர் கூறினார். நாம் ஆராய்ந்தும் கண்டுபிடிக்க அரிதான விதத்தில் நமது பாவங்களின் பாரத்தை அவர் சுமந்து, அதன் வாதனையால் இரத்த வியர்வை சிந்தினார். ஆறுதலைத் தேடி வந்த அவர் தூங்கும் அப்போஸ்தலர்களைக் கண்டார். விழிப்புள்ளவர்கள் பின் வந்த புனிதர்கள்; இயேசுவின் மனோ வாதனையில் அவர்கள் பங்கெடுக்கிறார்கள்.

கிறிஸ்து எம்மனிதனும் பாடுபட்டதற்கு மேல் பாடுபடுகிறார் என்பதும், கிறிஸ்து கடவுள் என்பதும் இவ்விரு எண்ணமும் பாடுகளின் தியானங்களில் நம் உள்ளம் உலவ வேண்டும். இயேசுவைப் போல இப்பெரிய மனோ வாதனையை வேறொருவர் அனுபவித்ததாக எந்த வரலாற்று ஏட்டிலும் நாம் வாசித்தது கிடையாது . நம்மில் ஒவ்வொருவரும் உடலிலும் மனதிலும் வாதனையை அனுபவிக்க வேண்டும் . அதைத் தவிர்ப்பதற்காக உல்லாசங்களைத் தேடலாகாது. சோதனையில் விழாதபடி விழித்திருந்து செபம் செய்யுங்கள். சிலர் மருந்திலும், மதுபானத்திலும்  மனோவாதனையை மாய்க்கத் தேடுகிறார்கள். இது ஒரு சோதனை. வேறு பெரிய சோதனை ஆண்டவரது அன்பின் மேல் ஐயம். மேற்சொன்ன உத்தியோகஸ்தரின் மனைவி அடிக்கடி சொல்லுவாள் "சுவாமி, கடவுள் நல்லவர் நல்லவர் என்கிறீர்களே, ஏன் எங்கள் எல்லாரையும் இவ்விதம் வாதிக்கின்றார்?"

வாதனைக்குள்ள காரணங்கள் உண்மையா என்ற சந்தேகம் வேறொரு சோதனை. வாதனைக்குக் காரணங்கள் நான்கு:
1. இறைவனுடைய நீதி
2. உலகத்தின் ஒழுங்கு
3. மனிதனுடைய பாவம்
4. பாவப் பரிகாரம்

இவைகளை நம்பாவிடில் வாதனையின் காரணங்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்? மேற்சொன்ன உத்தியோகஸ்தரும் அவரது மனைவியும் அடிக்கடி கேட்பார்கள்: "சுவாமி, வாதனை பாவத்திற்குத் தண்டனை என்கிறீர்களே, நாங்கள் அவ்வளவு பெரிய அக்கிரமிகளா?" அவர்கள் கிறிஸ்துவர்கள் அல்லாதபடியினால் இவைகளைக் கண்டுபிடிப்பது சிரமம். சிறு பாவம் எனினும் பெரும் பொல்லாப்பு , கடவுளுக்கு துரோகம், உலக ஒழுங்கின் நிலையைக் குலைக்கிறது. நீதியுள்ள இறைவன் அதைத் தண்டிக்க வேண்டும். உலக ஒழுங்கின் நிலையைச் சரிப்படுத்தவேண்டும். ஆதலால் பாவப் பரிகாரத்தை விதிக்க வேண்டும். துன்ப சமயத்தில் சோதனைக்கு ஆளாகாவண்ணம் விழித்திருந்து செபிக்க வேண்டும்.

கடவுள் மனிதருடைய பாவங்களுக்காக, மனிதர்களை ஈடேற்றப் பாடுபடுகிறார். நாம் அவருடைய ஞான சரீரத்தின் அவயங்கள். அவரோடு பாடுபட வேண்டும். நமது துன்பத்தை அவருடைய பாடுகளோடு ஒன்றிப்போமேயாகில் நாமும் உலக ஈடேற்றத்தில் பெரும் பங்கு அடைவோம்.

பாடுகளின் பூங்காவில் ஆண்டவர் அக்கிரமத்தோடு மல்யுத்தம் புரிந்து வெற்றிமாலை சூடுகிறார். பயத்தை ஊட்டும் இரா நேரத்தில் மகா வாதனைக்கு ஆளாகிறார். இன்றிரவு ஒரு நேரம் தான் - தம் வாதனையின் குரூரத்தைத் தாங்க முடியாமல் "என் ஆத்துமம் மரணமட்டும் வேதனையாயிருக்கிறது" என்றார்.

இத்துன்ப நேரத்தில் மனிதர்களுடைய தோழமையையும் துணையையும் ஆறுதலையும் தேடுகிறார். அவ்வாறுதலை அச்சமயம் கொடுத்தவர் இலர். சில அறிஞர்களின் எண்ணப் பிரகாரம் அமலனின் கன்னித்தாய் அசன சாலையின் ஓர் அறையில் தனிமையில் செபத்தில் இருக்கிறார்.  தம் மகனின் துன்ப வாதனையை எல்லாம் காட்சியில் கண்டு பயம், கலக்கம், துன்பம் என்னும் வாதனைகளைஎல்லாம் இயேசுவோடு அவரும் அனுபவிக்கிறார். எத்தனையோ புண்ணியவான் புண்ணியவதிகளுக்கு காட்சியில் தம் பாடுகளைக் காட்டிய ஆண்டவர் அக்கிருபையைத் தன் அன்னைக்கு அளிக்காமல் இருப்பாரா? அப்போஸ்தலர்கள் தூங்கி விட்டனர்.

உலக முடியுமட்டும் ஞான சரீரத்தில் இயேசுநாதர் ஆயாசப்படுவார். அக்காலமெல்லாம் நாம் தூங்கலாகாது!

செபம்.

ஜெத்சமெனியில் உமக்கிருந்த ஆயாசத்தையும், அச்சத்தையும் கொண்டு இக்கட்டில் உள்ளோரையும், பயந்தோரையும் திவ்விய இயேசுவே, தேற்றியருளும். அப்போஸ்தலர்கள் தூங்கி விழ, உம் பாடுகளைக் கண்டு நீர் தனிமையில் ஏங்கியதை நினைத்து உலகமானது நித்திரையில் ஆழ்ந்திருக்கத் தனித்து தின்மையை எதிர்த்து நிற்பவர்களைத் தேற்றியருளும். வரப்போகும் தீமையையும், சங்கடத்தையும் எதிர்நோக்கி அவதிப்பட்டு நீர் செபத்தில் நிலைத்திருந்ததை நினைவு கூர்ந்து, எதிர்பாராமல் வரப்போகும் தின்மையை எண்ணி நடுங்குகிறவர்களுக்கு ஆறுதல் அளித்தருளும். வானதூதரின் தாழ்ச்சியை ஏற்றுக் கொண்ட உம் தாழ்ச்சியை கண்டு பிறருக்கு உதவி செய்யவும், பிறர் உதவியைப் பெறவும், மற்ற ஒவ்வொருவரிலும் உம்மைக் கண்டு உமக்கு ஆறுதலளிக்கவும் வேண்டிய அருளை எங்களுக்குத் தந்தருளும். திவ்விய இயேசுவே, செபமாலை இராக்கினியே, இவ்வுலகம் துன்பம், கஷ்டம், தோல்வி, ஏமாற்றம், வாதனை நிறைந்தது. இவைகள் மோட்ச மாணிக்கங்கள். நாங்கள் இவைகளை இழந்து போகாமல் பயனடையும்படி இயேசுவின் பாடுகளிலிருந்து தைரியம் பெற்று, அவைகளைப் பொறுமையாகவாவது இயேசுவின் பாடுகளோடு சேர்ந்து அனுபவிக்க கிருபை செய்யும். செபமாலை இராக்கினியே துன்பப்படுவோருக்கு நீரே ஆறுதல். ஆமென்.

2. கர்த்தர் கற்றூணில் கட்டுண்டு அடிபடுகிறார்.

கோழை உள்ளம்  கொண்ட பிலாத்து இயேசுநாதர் குற்றமற்றவர், நீதிமான் என்று தெளிவடைந்திருந்தும் துணிந்து நேர்முகமாக இயேசுவை விடுதலை செய்ய அஞ்சி பற்பல குறுக்கு வழிகளில் அவரை விடுவிக்கத் தேடினான். பலனில்லை. யூதரின் மனத்தைக் கரைக்க எண்ணியவனாய் இயேசுவைக் கசையால் அடிக்கக் கற்பிக்கிறான். என்ன கேவலமான தண்டனை. மனித யோக்கியதையை இழந்த பெரும் அக்கிரமிகளுக்குத் தான் இந்த ஆக்கினை. இந்த ஆக்கினைக்கு ஆளானவன் நாலு பேருக்கு முன் தலை காட்ட அஞ்சுவான். எத்தகைய குரூரமான ஆக்கினை. கசையடி தாங்க மாட்டாமல் கட்டுமஸ்தான சரீரம் உள்ளவர்களில் பலர் அடிபடும்போதே சோர்ந்து செத்து வீழ்ந்திருக்கிறார்கள். இயேசுவுக்கு நேர்ந்த இந்தக் கொடூர ஆக்கினையை நினைக்கும் போதே நாம் இதன் அர்த்தத்தை கண்டுபிடிக்காமல் மயங்குகிறோம். மெய்யாகவே இறைவனுடைய இரகசியங்களில் இது ஒன்று.

ஒரு தூணின் உச்சி நுனியில் ஆண்டவரின் கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கால் விரல்கள் தரையை தொட்டும் தொடாமலும் இருக்கின்றன. ஆண்டவர் தொங்குகிறார் என்று சொல்லலாம். சாட்டை நுனியில் சிறு ஈயக் குண்டுகளோ, எலும்புத் துண்டுகளோ முடியப்பட்டிருக்கின்றன. சேவகர்கள் அடிக்க வருகின்றனர். இதைக் கண்டு ஆண்டவரின் உடல் முதல் நிமிடம் நடுங்குகிறது. அடிக்கிறார்கள், சதை புடிக்கிறது. இரத்தக் கீற்றுகள் பாய்கின்றன. தோல் உரிகின்றது சதை துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இரத்தம் ஆறாய் ஓடுகிறது. முதுகு, தோள், நெஞ்சு, முகம், கை, கால், தொடை எங்கும் சரமாரியாய் அடி. ஆண்டவர் கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது; பெருமூச்சு விடுகிறார். அனர்த்துகிறார். அடித்து முடித்தவுடனே எலும்புக்கூடாய் சதையும் குருதியும் சேர்ந்த சேற்றில் இயேசு விழுந்து புழுப் போல் நெளிகிறார். உருண்டு சென்று தன் ஆடையைத் தாமே தேடி எடுத்து அணிந்து கொள்ளுகிறார். உதவிக்கு நாதியேது?

உடலின்பத்தைக் கருதி மக்கள் கட்டிக் கொள்ளும் அக்கிரமங்கள் எத்தனை எத்தனை வகை! நூதனம் நூதனமாக எத்தனை இனம்! அவைகளுக்குப் பரிகாரமாக இக்கொடிய வேதனை! சென்ம பாவதோஷத்தினால் மனிதனுக்கு இயற்கையாயுள்ள பலவீனத்தை ஆற்றுகிறார். மனிதன் தன் உடலுக்குத் தபம் அவசியமென்று காட்டுகிறார். இன்பசுக நாட்டத்தின் அடிமைத்தனத்தினின்று தப்பிக்க ஆசிக்கிறவர்கள் இக்கசையடியில் இயேசுவோடு ஒன்றிக்க வேண்டும். ஒருத்தல் ஜெப முயற்சிகளால் தங்களைத் தாமே கசக்க வேண்டும். ஐம்புலன்களை அடக்காமல், ஈடேறலாம் என்று எண்ணி ஏமாந்து போகிறவர்கள், கற்றூணில் கட்டுண்டு கசையடிபட்ட இயேசுவின் காட்சியைக் கண்டு பொய்காரப் பேயை ஓட்ட வேண்டும்.

இயேசுவுக்கு நம் மேல் உள்ள அன்பு எத்தனை பெரிது! எவ்வளவு தாராளமாய் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்கிறார். இயேசுவின் ஒரு சொட்டு கண்ணீர், ஒரு துளி இரத்தம் ஒரு உலகத்தை அல்ல ஓராயிரம் உலகத்தையே ஈடேற்றப் போதும். ஆனால் மோகப் பேயின் வலையில் வீழ்ந்த மனிதனின் மனம் அதைக் கண்டு அசையாது. இக்கொடிய வாதனை தான் சில பேருக்காவது பாவத்தின் அக்கிரமத்தை உணர்த்தும். இயேசுவின் அன்பை நாம் அறிய வருவோமாக.

வியாகுலத்தாய் அதை அறிவார். அவர்தான் ஆண்டவரின் அன்பின் பெருமையை நமக்கு விளக்க வேண்டும். இச்சமயம் மாசற்ற மாமரி எங்கு இருந்தார்? பிலாத்தின் அரன்மனையண்டை பழுதற்ற கன்னிகை இருந்தார் என்றனர் சிலர். இக்கோரக் காட்சியை எவாறு அவர் சகிக்கக் கூடும் என்பாயோ? அருகில் இல்லாவிட்டால் காட்சியால் இக்கண்ணறாவியை அவர் அவசியம் கண்டிருப்பார். பல ஞானிகளின் எண்ணம் ஏதெனில், பளீர் பளீர் என்னும் கசையின் அடியின் ஓசையையும் இயேசுவின் அனர்த்தத்தையும் பெருமூச்சையும் கேட்டார், உள்ளது உள்ளபடி உணர்ந்தார். தயையின் அரசி அதை எவ்விதம் தாங்கினார்?

செபம்.
மத்தியஸ்தம் செய்யக் கருதிய பிலாத்தின் கோழைத்தனப் பிரயாசையால் தூணில் கசையால் அடிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட ஆண்டவரே, மானிடர்களின் பலவீனத்தையும் புத்திக் கேட்டையும் கண்டு இரங்கும். சாந்த சுரூபியான இயேசுவே எங்களைப் பொறுமையுள்ளவர்களாய் ஆக்கியருளும்.

நாங்கள் இருக்கும் சூழ்நிலை பற்பல சமயங்களில் எங்களுக்குப் பெரும் வாதனையைக் கொடுக்கிறது. ஆதலால் அந்தச் சூழ்நிலை காசியைப் போல் எங்கள் வாழ்வைக் கிழிக்கிறது. அச்சூழ்நிலையைப் பொறுமையாய் நாங்கள் சகிக்க வேண்டும். எங்கள் பலவீனத்தாலும், அக்கிரமத்தாலும், அறியாமையாலும் நாங்களே எங்களுக்குத் தானே பல இன்னல்களை விளைவித்துக் கொள்ளுகிறோம்.

எங்கள் பலவீனமும் அறியாமையும் பின்னிய சவுக்கு எங்களுக்கு வருவிக்கும் வாதனையையும், துன்பங்களையும் முறையீடின்றிக் கௌரவத்தோடும் அவைகள் எங்களுக்கு உரியவை என்ற எண்ணத்தினால் உதிக்கும் தாழ்ச்சியோடும் உமது அரச சித்தத்திற்கு அமைந்து அவைகளை ஏற்றுக் கொள்ளக் கிருபை செய்யும் இயேசுவே!

செபமாலை இராக்கினியே! வியாகுலத் தாயே! கற்றூணை நினைத்து உடலின்ப நாட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடக் கிருபை செய்யும். ஆமென்.

3. சேசுவின் திருச்சிரசில் முள்முடி சூட்டுகிறார்கள்.

குரூர கேளிக்கைகளைக் கண்டு ஆனந்தித்த மனிதன் புலியைப் போல மாறுகிறான். குரூரச் செயல்களைப் பெருக்க ஆசிக்கிறான். கற்றூணில் ஆண்டவர் அனுபவித்த வாதனையைக் கண்டு ஆனந்தித்த ரோமை மிலேச்ச சேவகர்கள் இன்னொரு வேடிக்கையைச் சிந்தித்தனர். அவர்களுக்கு யூதர்கள் மேல் சொல்லொணா அலட்சியம், அருவருப்பு; தங்கள் அரசைத் துரத்தி விட தேடுகிறார்கள் என பகையும் வன்மமும் கூட. தாம் யூதர்களுக்கு அரசன் என்று இயேசுநாதர் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டார் அல்லவா? அவருக்கு அரச மரியாதை காட்டி ஆகடியம் செய்ய வேண்டுமென இந்த அக்கிரமிகளின் வறண்ட சிரசில் சிந்தனை ஓடியது.

தட்டுத் தடுமாறி மூச்சு விட கூட முடியாமல் தவிக்கு இயேசுவை, உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆயிரம் தேள் கொட்டியது போல வெந்த இயேசுவை ஒரு மண்டபத்திற்கு இழுத்துச் சென்றனர். கரடு முரடாக சில்லிப்பு தட்டும் உடைந்து கிடந்த சிறு தூண் மேல் தள்ளி அமர்த்தினர். அதுதான் சிங்காசனம். கந்தலான ஒரு சிவப்புத் துணியை அவர் மேல் போர்த்தினார். அது அரச பீதாம்பரம். ஒரு மூங்கில் தண்டை இணைக்கப்பட்டிருந்த அவரது கரங்களின் இடுக்கில் பொருத்தினர். அது செங்கோல். முடி வேண்டுமே! என்ன செய்வர்? பொன்னாலும் மணியாலுமான முடியல்ல, பூவாலான முடி கூட அல்ல. ஒரு முட்செடியை பறித்தனர். முட்கள் தங்களைக் குத்தாதபடி பதனமாய்க் குல்லா போல் அதை வளைத்துப் புனைந்தனர். அதை ஆண்டவரின் சிரசில் வைத்தனர். தடியால் அழுத்தினர். தலை முழுதும் காயம், நெற்றி முழுதும் காயம், முட்களில் சில கண்களில் பாய்ந்தன. சில செவிக்குள் செருகின. சிரசின் எப்பக்கமும் இருந்து இரத்தம் சொட்டுகிறது. நாகரீகமோ, மக்கள் மனப்பான்மையோ சிறிதும் இல்லா அந்த மாக்கள் இயேசுவின் இந்த எளிய பரிதாபக் கோலத்தைக் கண்டு கை தட்டினர்; களித்தனர். "இவர் தான் பெரிய அரசர்" என்று கோஷமிட்டனர்.

இக்காட்சியை கண்களால் காண்கிறோமா, காதால் கேட்கிறோமா? உள்ளத்தில் எண்ணி எண்ணி உருகுகிறோமா? ஒரு விதத்தில் இக்கோலம் இவருக்குப் பொருந்தும். இவர் பெரிய புரட்சி வீரர் அன்றோ? மலைப் பிரசங்கத்தில் உலகம் மதிப்பதை எல்லாம் புரட்டிப் போட்டு விட்டாரே! தரித்திரம், துன்பம், இழிவு, மானபங்கம்,அவமானம், நிந்தை பரியாசம் தானே அவர் நிறுவ வந்த அரசின் சின்னங்கள் என்றார். இப்புரட்சி வீரரின் போதனையை நாம் கற்பதுமில்லை கையாளுவதுமில்லை. அப்போதகத்தைச் செயலளவில் காட்டுகிறார், நம் உள்ளத்தில் பதிக்க.

எனினும் வியாகுலத் தாயே, இப்பரிதாபக் கோலத்தில் என் அன்பரை, என் மீட்பரைக் காண மனம் வேகுதே தாயே நீர் எங்கிருந்தீர்? எங்கிருந்தாலும் இதைத் தெளிவாய்த் தரிசித்தீர். மனம் நைந்தீர் கண்ணீர் பெருக்கினீர்.

சேவகர்கள் அவருக்கு முன் முழந்தாட்படியிடுகிறார்கள். அவர் வதனத்தில் துப்புகிறார்கள். கன்னத்தில் அறைகிறார்கள். தடியால் ஓங்கி முள்முடி மேல் அடித்துக் காயத்தைப் புதுப்பிக்கிறார்கள். வேதனையைப் பெருக்குகிறார்கள். அவரது சிம்மாசனத்திலிருந்து அவரைத் தட்டி விடுகிறார்கள் அதைக் கீழே சாய்க்கிறார்கள். என்ன அவமானம்! என்ன அலங்கோலம்! அவரது தலை உரோமம் சடை பிடித்துக் கண்களில் விழுகிறது. கண் இரத்தம் பாய்ந்து கிடக்கிறது. சிரசின் எப்பக்கமும் இருந்து இரத்தம் ஒழுகி நெற்றியையும், தலையையும், முகத்தையும் நனைக்கிறது.

தாயே, இங்கு அமர்ந்திருக்கிறவர் யாரென்று நான் முதலாய் முழுதும் உணர்ந்தேனா? இந்த மிலேச்சர்கள் மத்தியில் இருந்து இக்கூரிய வாதனைகளை அனுபவிப்பவர் கோமாளி அரசனைப் போல் பகடி செய்யப்படுகிறவர். ஞானத்திலும் மகிமையிலும் மேலானவர். ஆண்டவர் கிருபையால் பிரசித்தி பெற்ற சாலமோன் அரசரை விட பெரியவர் அல்லவா? அருகில் அண்டவும் அரசிகள் முதலாய்ப் பயந்தரண்ட கீர்த்தி வேய்ந்த அசூவேரஸ் மன்னனை விட மகாப்  பிரதாபம் உள்ளவர் அல்லவா? படையணியில் பராக்கிரம வீரரைத் துலங்கிய தாவீதரசனை விட கம்பீரமும் ஆரோக்கியமும் வாய்ந்தவரல்லவா? இவர் சுயஞ்சீவியான மெய்யங் கடவுள்.

இந்நேரம் முதலாய்க் கோடிக்கணக்கான வடிவும் வல்லமையும் பூண்ட வானதூதர்கள் மேல் தம் செங்கோலாட்சியைச் செலுத்துகிறார். அவரது ஓர் அடையாளத்தை எதிர்பார்த்து, அவர் பாதத்தில் அவர்கள் விழுந்து கிடக்கின்றனர். ஆகிலும் வெறிகொண்ட ஈனமக்கள் மத்தியிலே அவர்கள் குவிக்கும் அவமரியாதையூடே வெட்கத்திலும் வாதனையிலும் வெந்து நொந்து அமர்ந்திருக்கிறார்.

இவர்தான் மெசியா. நீண்ட காலமாக மக்கள் காத்துக்கிடந்த மீட்பர்; அவர்களுடைய அன்பையும் பாத காணிக்கையையும் ஏற்றுக் கொள்ள தம் செங்கரத்தை நீட்டிய தினத்தில் அவர் மக்கள் அவரை இவ்விதம் நடத்துகிறார்கள். அநியாயமான கேலியும் பரியாசமும் எவ்வளவு ஆழமாக மக்களின் உள்ளத்தைக் குத்திப் புண்ணாக்குகின்றன என்று நமக்குக் கற்பிக்கச் சித்தமானார். வீண் பழிச் சொற்களாலான வேலால் நம் சகோதரர்களை வருத்தலாகாது. நமக்கு வரும் ஏச்சு பேச்சுக்களை அவரைப் போல் பொறுமையாக ஏற்றுக் கொள்ள இயேசு நம்மிடம் கேட்கிறார்.

செபம்.
முள்முடி தாங்கிய திவ்விய ஏசுவே, யோசித்துப் பார்க்கவும், நன்மையையும் தீமையையும் பிரித்து உணரவும் ஒவ்வொன்றையும் அளக்கவும், நிறுக்கவும், அவசியமாகில் நரக தூதரோடு மல்யுத்தம் தொடுக்கவும் உண்மையைத் தேடி அலையும் போது சந்தேகம் இருந்தால் நிச்சயமான வழி போகவும் எங்களுக்குத் துணிவையும் தைரியத்தையும் தந்தருளும். எங்கள் கண் இருளடிக்கப்பட்டாலும் உமது பிரகாசக் கதிர்களால் எங்கள் பக்திக்கு ஒளியூட்டியருளும். பிரகாசத்தின் கர்த்தரான அதிபதிக்குத் தகுதியானது ஒரே முடி, அந்த முள் முடியை உமது ஊழியர்களாகிய எங்கள் சிரசில் பதித்தருளும்.

செபமாலை இராக்கினியே, பரியாச அரசரின் அன்னையே, இவ்வுலகில் எங்களுக்கு வரும் நிந்தனைகளைத் தாங்க உமது செபமாலை எங்களுக்கு தைரியத்தைத் தந்தருள்வதாக ஆமென்.


4. திவ்விய சேசு சிலுவை சுமந்து செல்கிறார்.

தாமே தெரிந்து கொண்ட கிரீடத்தை அணிந்து மகிமையின் அரசர் எருசலேம் நகர் வீதி வழியாய் பவனி செல்கிறார். கல்வாரி மலையில் அவரது சிங்காசனத்தைத் தயாரிப்பர். அதை நோக்கிச் செல்லுகிறார். என்ன கொடிய வாதனை, கொள்ளும் நடை! சிலுவையின் தாங்கொணாப் பாரத்தினால் தயங்கித் தடுமாறி பற்பல முறை கீழே விழுந்து எழுகிறார். போகப் போக சன வெள்ளம் பெருகுகிறது. அங்கிருந்து அவச் சொல்லும், பழி வசனமும் அலை அலையாய் ஆண்டவர் மேல் விழுகின்றன. பேயோடு கடைசி முறை போராடி வெற்றிமுடி சூடவே போய்க் கொண்டிருக்கிறார்.

இப்பவனியின் பாதையில் பற்பலர் தோன்றி மறைகின்றார்கள். அவர்களைப் பார்க்கலாம். அக்காட்சிகளைப் பற்றி யோசிக்கலாம். வெரோணிக்காள் பயத்தைப் பாராட்டாமல் கூட்டத்திற்குமுன் பாய்ந்து, இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறார். உடனே கைம்மாறும் பெறுகிறார். எருசலேம் மாநகர் புண்ணியவதிகள் தனித்தும் கூட்டமாகவும் வந்து ஆண்டவரின் அநியாய அக்கிரம அகோர வாதனையைக் கண்டு கண்கலங்கிக் கதறி அழுகிறார்கள். சிமியோன் நம்மில் ஒருவனாகத் தோன்றுகிறான் அல்லவா? வேறு எண்ணங்களும் உதிக்கலாம். அச்சமயம் அப்போஸ்தலர்களின் எண்ணம் என்ன? உணர்ச்சி என்ன? அவர்கள் ஓடி விட்டார்கள் என நாம் அறிவோம். எங்கே ஓடி இருப்பார்கள்? இந்நகரில் தான் வீடுகளில் நுழைந்து நடப்பதைக் கதவு இடுக்கு வழியும், ஜன்னல் வழியும் இலேசாய் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்திருப்பார்கள். என்ன யோசித்துக் கொண்டிருந்தார்கள் என்பது தான் கேள்வி. இயேசுவின் வலது பக்கம் ஒருவரும் இடது பக்கம் ஒருவரும் வீற்றிருக்க வேண்டும் என்று அர்ச் யாகப்பரும் அருளப்பரும் கேட்ட போது ஆண்டவர் சொன்ன பதில் அவர்களது உள்ளத்தை உறுத்தியிருக்கலாம். "நீங்கள் கேட்பது யாதென நீங்கள் அறியீர்கள். நான் பானம் செய்யும் பாத்திரத்தை நீங்கள் பானஞ் செய்ய முடியுமா?" என்ற கேள்விக்கு "முடியும்" என்றார்களே. ஆனால் அர்ச் யாகப்பர் மட்டும் அன்று அவரது விண்ணப்பத்தைக் கேட்டு சீறி விழுந்த இதர சீடர்களும் ஆண்டவர் தனியே அக்கசப்பான பாத்திரத்தைக் குடிக்க விட்டு ஓடி ஒளிந்தனர்.

இயேசு மொழிந்த வேறு புத்திமதியும் அவர்கள் நினைவுக்கு இப்பொழுது வந்திருக்கும். "யார் யார் தன் சிலுவையைச் சுமந்து என் பின் வராமலிருக்கிறாரோ  அவர் என் சீடனாயிருக்க முடியாது" அவ்வார்த்தை அப்பொழுது கடினமாயிருந்தது. இப்பொழுது முன்னரை விடச் சந்காமாகத் தோன்றியது.

எனினும் தாங்கள் தவறினோம், தங்களுக்குத் தோல்வி என்று மனம் நொந்தனர். யோசிக்க யோசிக்கத் தங்கள் தவறைப் பெரிதும் உணர்ந்தாலும் தாங்கள் பதுங்கிய இடத்திலிருந்து வெளிவர அவர்களுக்குத் துணிவில்லை. ஆகிலும் பின்னொரு நாள் ஆண்டவருக்கு உயிரைக் கொடுக்கத் தயாராயிருப்பார்கள்.

"எவனாவது என்னைப் பின்பற்றி வர ஆசிப்பானேயாகில் அவன் தன் சிலுவையைத் தினம் தினம் தூக்கிக் கொண்டு என் பின் வருவானாக" என்றது யாவருக்கும் பொருந்தும். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாவரும் தங்கள் வாழ்நாளில் சிலுவையைச் சுமந்தாக வேண்டும். நல்ல மனதோடு தூக்கிச் சென்றால் நித்திய மகிழ்ச்சி அவர்களை வரவேற்கும். வேண்டா வெறுப்பாய் தூக்கிச் செல்வது நித்திய கேட்டுக்குள் அவர்களை இறக்கி விடும். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வுத் தளம் வெவ்வேறு துன்பங்களாலும் பாவங்களாலும் சிலுவைகளாலும் பாவப்பட்டிருக்கிறது. இயேசுவோடு பாவத்தின் சிலுவையைத்தான் சுமந்து செல்கிறோம். தவறி விழுவோமேயாகில் சிலுவையின் கீழ் இயேசு விழுந்ததை நினைவுற்று விழும் ஒவ்வொரு முறையும் மிகவும் ஆழ்ந்த மனஸ்தாப வரத்தை நமக்குப் பெற்றுக் கொடுக்கிறார் என்பதை உணர வேண்டும்
சிலுவையின் பாதையில் தம் மகனைச் சந்தித்தாரே தேவ தாய், அவரது வியாகுலப் பெருக்கை அறியக் கூடியவன் யார்?

இக்காலத்தில் வேத விரோதிகளால் பறித்துக் கொண்டு போகப்படுகிறார்களே மக்கள், அவர்கள் படும் பாட்டை நினைக்கும்போதே தாய்மார்களின் மனம் நடுங்குகிறது. சில சமயம் அதைச் சகிக்க முடியாதென்றே நமக்குத் தோன்றுகிறது.மகனின் பாடுகளைக் கண்ட மாமரி எவ்விதம் மனம் உடைந்திருக்க வேண்டும். நமதாண்டவர் செய்ததை நன்றாய்க் கண்டறிந்தவர் தேவதாய் ஒருவரே. அவர் யாருக்காக இந்தக் கொடிய பாடுகளை அனுபவித்தார் என்றும் அவருக்குத் தெரியும். (கன்னித்தாய் உலகின் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடும்) யாருக்காக இயேசு பாடுபடுகிறார் என்றறிந்து அதை ஏற்றுக் கொண்டார். அவர் கிறிஸ்துவின் தாய், கிறிஸ்துவின் ஞான சரீரத்தின் தாய். அவர் வழியாகத்தான் நாம் கடவுளின் பிள்ளைகள் ஆனோம்.

செபம்.

ஆண்டவரே நாங்கள் சிலுவையைத் தூக்குவோமாக. எங்கள் அகங்காரம், பேராசை, உலக நாட்டம் முதலிய அதன் பாரத்தால் தாங்கொணாப் பாரம் தான் அச்சிலுவை. அதன் பாரத்தால் நசுங்கும் மாசற்றவர்களின் தோளை விட்டு அகற்றும் கடமையில் எங்கள் யாவருக்கும் பங்கு உண்டு. நாங்கள் உட்கொள்ளும் திவ்விய நற்கருணை உம்மோடும் ஒவ்வொருவரோடும் சேர்ந்து துன்பப்பட எங்களுக்குள்ள தீர்மானத்தில் அவ்வொற்றுமை விளங்குவதாக. இவ்விதம் எல்லாக் கரங்களும் ஒன்று சேர்ந்து அப்பாரக்கட்டையை தூக்குவதனால் ஒவ்வொருவருடைய பாரமும் குறையும். எங்கள் சிலுவையை நாட்கணக்காய்ச் சுமப்பதனால் சிரேனிய சீமோனை போல் நாங்கள் உமக்கு உதவுவோமாக.

செபமாலை நாயகியே, வியாகுல மாதாவே, சிலுவையில் தான் இயேசுவைக் கண்டடைவோம் என்பதை நாங்கள் நன்குணர்ந்து, வரும் சிலுவைகளைப் பொறுமையோடு, கூடுமானால் வரப்போகும் சிலுவைக்குக் காத்திருந்து சந்தோசத்தோடு ஏற்றுக் கொள்ளும் கிருபையை, சிலுவை சுமந்து சென்ற உம் மகனிடமிருந்து பெற்றுத் தாரும் ஆமென்.

5. இயேசுநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.

தாமே தெரிந்து கொண்ட அரியணையில் நம் இயேசு வீற்றிருக்கிறார். தம் உயிரைப் பலியாகக் கொடுத்து சரீரத்தின் சாவின் மேலும் அதைவிட பயங்கரமான ஆத்தும சாவான - அருளையும் ஞான உயிரையும் மக்களிடமிருந்து பறிக்கும் - பாவத்தின் மேலும் வெற்றி கண்டார். வான மேகத்தைப் போல் கருணையை எங்கும் பொழிகிறார். தம் தாயையும் தம் நேச சீடரையும் தானம் செய்தார். கடவுளே தம்மைக் கை விட்டது போலக் கலங்கினார். எனினும் தன்னல சிந்தனையின் நிழல் முதலாய் இன்றி மக்கள் மேல் தன் அன்பைக் கொட்டுகிறார். தம்மை வாதித்தவர்களுக்கு மன்னிப்பை மன்றாடுகிறார். தன்னை நினைத்தருளச் சொன்ன நல்ல கள்ளனுக்கு பரகதியின் பாக்கியத்தைப் பரிமாறுகிறார். பாவத்திற்காக மனிதன் கொடுக்க வேண்டிய கடனை, கடவுளுக்குத் தம் அன்பின் மிகுதியால் அளிக்கிறார்.

கிறிஸ்து கடவுள்; தேவ ஆள் தான் நமக்காக மரித்தவர்; கிறிஸ்து மனிதன்; மனிதனுக்காக தம் மனுஷ சுபாவத்தில் மரித்தார். சிலுவையில் ஒரு புதிய மனுஷீகம், ஒரு புது சிருஷ்டிப்பு பிறந்ததென்றார் சின்னப்பர். நாம் அதனுடைய அவயவங்களாகி தேவ சுபாவத்தில் பங்காளியாகிறோம் என்றார் அர்ச் இராயப்பர்.

மனுக்குலத்துக்காக ஞான சீவியம் ஆதாமுக்கு அளிக்கப்பட்டது. இறைவனுடைய சித்தத்தைப் புறக்கணித்து தன் இஷ்டத்தை பெரிதாய்க் கருதி நித்திய பாக்கியத்துக்கு பதில் - ஒரு வினாடி சுகத்திற்காக இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் - அதை அவன் இழந்தான்.

கிறிஸ்துநாதர் ஞான வாழ்வை மனுக்குலத்திற்குத் திரும்பப் பெற்றார். இறைவனுடைய சித்தத்திற்கு மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்தார். மனிதனுக்கு நித்திய பாக்கியத்தைச் சம்பாதிக்க வாதனையை தெரிந்து கொண்டார்.

ஆதாம் பாவம் செய்த பின் தான் ஆடையின்றி இருப்பதாக உணர்ந்து ஓர் ஆடையைத் தயாரித்துக் கொண்டான். கிறிஸ்து நாதரோ தம் ஆடையைக் களையவும் மனித கௌரவத்தையே இழக்கவும் அட்ட தரித்திரத்தை சூடவும் தெரிந்து கொண்டார்.

"நீங்கள் கடவுளைப் போலாவீர்கள்" என்ற சோதிப்போனை ஆதாம் நம்பினான்; கடவுளைப் போலறிய ஆசித்தான்; கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்தான். கிறிஸ்துநாதர் இறைவனுக்கு கீழ்ப்படிந்ததால் நாம் கடவுளைப் போலாக - தேவ சுபாவத்தில் பங்கு பெற நமக்கு ஆற்றலை அளித்தார்.

ஏவை ஆதாமைப் பாவத்திற்கு சோதித்து அவன் வீழ்ச்சிக்கு - மனுக்குல வீழ்ச்சிக்குக் காரணமானாள். நம்மாண்டவளோ உலகின் ஈடேற்றத்திற்கு தம் மகனை உலகிற்கு அளித்தார். ஈடேற்ற அலுவலில் பங்கு பெற்ற சிலுவையினடியில் நின்றார். மனுக்குலம் இன்பத்தின் பூங்காவில் பிறந்தது; ஆதாமின் விலாவிலிருந்து வந்த ஏவை அதன் தாய். கடவுளின் தாயாகிய மாமரி அவருடைய மகனின் புத்துயிரோடு வாழும் சீவியர்கள் யாவருக்கும் தாய். கிறிஸ்துவின் ஞான சரீரம், சிலுவையில் வாதனைப் பெருக்கில் தொங்கிய கிறிஸ்துவின் ஈட்டியால் திறக்கப்பட்ட விலாவிலிருந்து பிறந்தது; மாமரி அதன் தாய்.

இயேசுவின் மரணம் அவர் மெய்யாகவே மனிதன் என்று உறுதிப்படுத்துகிறது. அவரது தெய்வீகத்திற்கும் சாட்சி. தாம் தேவ குமாரன் என்ற சத்தியத்தை நிலை நிறுத்தியதால் மரித்தார் - அப்பொழுது நடந்த புதுமைகளும் சேர்ந்து அவர் தேவன் என்று கூறுகின்றன. மனிதர்களின் ஆத்துமத்தை ஈடேற்றவல்லவா இயேசு உயிர்விட்டார்? இயேசுவின் சாவு, ஆத்துமத்தின் விலை மகா உயர்ந்தது என்று பறை சாற்றுகிறது.

இயேசுவின் மரணம் பாவத்தின் கனத்தையும், இறைவனின் நீதியையும், பாவப் பரிகாரத்தையும் காட்டுகிறது. இயேசுவின் பாடுகள் யாவும் முதல் தொடங்கி கடைசி மட்டும் இச்சத்தியங்களை நிலை நாட்டுகின்றன.

எல்லா வரப்பிரசாதத்திற்கும் ஒவ்வொரு தேவ திரவிய அனுமானத்தின் வழியாக நமக்கு வரும் அருளுக்கு இயேசுவின் பாடுகள் ஊற்று. தம் பாடுகளில் இயேசு எல்லா அருளையும் சம்பாதித்தார்.

சிலுவையில் பாடும் சாவும், முதல் பூசை. இன்று திவ்விய பூசைக்குப் போகும்போது கல்வாரியின் காட்சியை காணப் போகிறோம் என்று நினைப்போமாக. குருவானவர் தேவ நற்கருணையை எழுந்தேற்றம் செய்யும்போது, கீறிக்கிழித்த இயேசுவின் உடலை, எலும்புக் கூட்டைக் காண்கிறோம். குருவானவர் பாத்திரத்தை உயர்த்தும் போது அப்பாத்திரத்தில் என்ன இருக்கிறது? இயேசுவின் சிரசிலிருந்தும், தேகத்திலிருந்தும், விலாக் காயத்திலிருந்தும் ஓடி விழுந்த திரு இரத்தம் அங்குள்ளது. உலகத்தையே மீட்க வல்லது. இறைவனுக்கு சரியான ஆராதனையையும், மெய்யான மகிழ்ச்சியையும் கொடுப்பது.

செபம்.

சிலுவையில் பாடுபட்ட நாதரே! உமது கரங்களில் எங்கள் கரங்களை வைத்து சிலுவையோடு சேர்த்து ஆணி அறையும். அந்த கனத்த இரும்பை நாங்கள் எடுத்து ஏந்த செய்தருளும். உமது பாதங்களில் எங்கள் பாதங்களை வைத்து சிலுவையோடு இணைத்து அறைந்தருளும். அப்போது அவைகள் உம்மை விட்டு விலகி அலையா; எங்கள் வாக்குத்தத்தங்களும் வார்த்தைப்பாடுகளும் ஆணிகளைப் போல் இறுக்கமாகப் பிடிக்கட்டும். எங்கள் பாவங்களின் பாரமோ மகா கனம். கடைசி நாளில் எங்கள் பலவீனமும் மகா பெரியது. ஆதலால் ஆணிகளைப் பெயர்த்துக் கொண்டு நாங்கள் நழுவி உம்மிடமிருந்து பிரிந்து போகாமல் உமது ஈடேற்ற அன்பில் உம்மோடு ஒன்றித்திருக்கக் கிருபை செய்யும் திவ்விய இயேசுவே.

செபமாலை நாயகியே, உமது செபமாலையை எங்களை விட்டு அகலாமல் எவ்விதம் இறுக்கிப் பிடித்திருக்கிறோமோ, அதே போல பாடுபட்ட இயேசுவின் உடலையும் உள்ளத்தையும் நாங்கள் இறுகத் தழுவி ஒன்றித்துப் போயிருக்க உம் திருமகனை மன்றாடும். செபமாலை இராக்கினியே வாழ்க. ஆமென்.

ஆமென் சேசு.