லூக்கா 1:31 ல் கபிரியேல் தூதர் மரியாளிடம் "இதோ, கருவுற்று ஒரு மகனை பெருவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்று சொல்லிய போது அன்னை மரி அவரிடம்,
லூக்கா 1:34 "இது எப்படி நிகழும் நான் கன்னி ஆயிற்றே" என்றார்.
அன்னை மரியா இந்த கேள்வியை தூதரிடம் எழுப்புகின்ற போது அவருக்கு திருமண ஒப்பந்தம் நடந்து முடிந்திருந்தது ( லூக்கா 1:27 ).
எனவே நீர் கருவுற்று ஒரு மகனை பெறுவீர் என்று வானதூதர் சொன்ன போது சாதாரண நிலையில் அது நிகழாது என்று சிந்திக்கவோ அதற்கு எதிராக அது எப்படி நிகழும் என்று கேள்வி எழுப்பவோ ஒரு வாய்ப்பும் இல்லை.
சாதாரண மனிதர்களான நமக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இதே செய்தியை நம்மிடம் சொல்லியிருந்தால் நாம் நிச்சயமாக அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைய மாட்டோம். ஏனெனில் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதே இனி திருமணம்தான், அடுத்து எனக்கு பிறக்க போகும் குழந்தையை பற்றிதான் தூதர் முன்னுரைக்கிறார் என அந்த செய்தியை சாதாரணமாகவே ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் திருமண நிச்சயம் முடிந்த நிலையில் அன்னை மரியாள் அதிர்ச்சியும் பயமும் கலந்த நிலையில் "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே" என கூறுகிறார்.
இந்த கேள்வி இந்த நிலையில் ஒரு அசாதாரணமான கேள்வி என்று தெரிகிறது அல்லவா!
ஆனால் தன் உள்ளத்தில் தான் எக்காலத்திற்கும் கன்னியாக இருக்க போகிறவள் என்ற அசாதாரணமான தீர்மானம் இருக்கிறபடியால் தான் இந்த அசாதாரண கேள்வியை அன்னை மரியாள் கேட்கிறார்.
நான் கன்னி ஆயிற்றே என்று சொல்வதில் அந்த அசாதாரணம் புதைந்துகிடக்கிறது.
விடுதலைப்பயணம் 3:14 ஐ இந்நேரம் வாசிப்போம். கடவுள் மோசேயை நோக்கி 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல் என்றார்.
இருக்கின்றவர் நானே என்பதன் அர்த்தம் என்ன? எக்காலத்திலும் இருக்கின்றவர் நானே என்பது தானே.
அதேபோல அன்னை மரியாள் தன்னை பற்றி நான் கன்னி ஆயிற்றே என்று சொல்லும்போது தான் எக்காலத்திற்கும் கன்னி என்பதும் திருமணம் முடிந்தாலும் குழந்தையை பெற்று எடுக்க என்னால் முடியாதே என்றுதான் அதிர்ச்சியுடன் இக்கேள்வியை கேட்கிறார்.
இதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகின்ற ஒரு உண்மை என்னவென்றால் சூசையப்பரும் அன்னை மரியாளும் திருமணம் முடிந்தாலும் கன்னிமை விரதம் காக்கும்படித் தீர்மானித்து இருந்தனர் என்பதே.
மேலும் இயேசு கிறிஸ்து உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையின் உயிரோட்டமுள்ள திருமரபின்படியும், விவிலியத்தில் இணைக்கப்படாத ஒருசில திருமறைகளிலும், இன்னும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் உள்ள சில கூற்றுக்களின் படியும் பார்க்கும் போது இந்த உன்னை தெளிவாக நாம் அறிந்துக்கொள்ளலாம்.
இந்த குறிப்புகளின் படி அன்னை மரியாளின் போன்றே அன்னை மரியாளின் தாயிடமும் வானதூதர் தோன்றி தூது உறைத்தபடி புனித குழந்தையாக பிறந்தவர்தான் அன்னை மரியாள். குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் இறைத்திட்டப்படி ஆலயத்தில் கொண்டு சென்று கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கிறார்கள். அன்னை மரியாள் தெய்வக் குழந்தையாக வளர்கிறார். வனதூதர் அவருக்கு உணவு ஊட்டும் அற்புத நிகழ்வும் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
அன்றைய ஆணாதிக்க சமூகத்தின் கொடுமையிலிருந்து அன்னை மரியாளை பாதுகாக்கவே அன்னை மரியாளை விட மிக அதிக வயதுள்ள சூசையப்பரோடு ( அதாவது தந்தையும் மகளும் போன்ற வயது வித்தியாசம்) இறைத்திட்டப்படி திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள்.
அதன் பிறகு நடந்தவைகளைதான் நாம் வேதாகம குறிப்புகளிலிருந்து பார்த்தோம்.