சத்திய கத்தோலிக்க திருச்சபை மட்டுமே இரட்சண்யப் பாதை, இத்திருச்சபைக்குப் புறம்பே இரட்சண்யம் இல்லை.
எல்லா மனிதர்களும் மோட்சம் சேர உதவத்தான் கத்தோலிக்க (பொது) திருச்சபையை சேசுநாதர் சுவாமி ஏற்படுத்தினார். கத்தோலிக்க திருச்சபை சத்தியம் தவறாமல் போதிக்கவே தவறா வரத்தை பாப்பானவருக்கு கொடுத்தார்.
பாப்பரசர் கூறுவதெல்லாம் தவறா வரம் பெற்ற போதனையா?
இல்லை , தவறா வரம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கிறது. முதலாம் வத்திக்கான் சங்கம் இவ்வாறு கூறியிருக்கிறது:
“இதை நாங்கள் போதித்து, அறுதியிட்டுக் கூறுகிறோம், - உரோமை பாப்பரசர்,
1. தமது மேலான முழு அப்போஸ்தலிக்க அதிகாரத்தைக் கொண்டு,
2. சகல கிறிஸ்தவர்களுக்கும் தாம் ஆயரும் ஆசிரியருமாயிருக்கிற தன்மையில்,
3. விசுவாசத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும் அடுத்த காரியங்களில் பாரம்பரிய போதனைகளுக்கு முரண்படாமல்),
4. ஒரு சத்தியத்தை முழு திருச்சபையும், எற்றுக் கடைபிடிக்க வேண்டுமென்று போதிக்கையில்,
அவர், அர்ச். இராயப்பருக்கு ஆண்டவர் வாக்களித்தப்படி தவறா வரம் கொண்டிருக்கிறார். ஆதலால் அந்த சத்தியப் பிரகடனம் மாற்றப்பட முடியாததாகிறது" (Dz-1839) இதுவே "EXTRA ORDINARY MAGISTERIUM” என்று அழைக்கப்படுகிறது.
மேற்காணும் 4 நிபந்தனைகளில் ஒன்று குறைவுபட்டாலும், அது தவறா வரம் பெறாது. உண்மை இவ்வாறிருப்பதால் :
> பாப்பரசர் கூறுவதெல்லாம் தவறாதவை என்பது சரியல்ல !
> உதாரணமாக, ஒரு பாப்பானவர் பல்சமய இணக்கத்திற்காக எல்லா மதங்களையும் கூட்டிவைத்து பொது வழிபாடு நடத்துவது தவறா வரம் பெற்ற செயல் அல்ல, மாறாக முதலாம் கற்பனைக்கு விரோதமான செயல்.
> ஒரு பாப்பானவர் பல்சமய உறவாடல், உரையாடல்களை நடத்தும்படி கூறுவது தவறா வரம் பெற்ற செயல் அல்ல.
> திருச்சபையின் தலைவராகிய பாப்பரசர், சேசு கிறிஸ்து தந்த இரட்சண்ய போதனை எதையும் மாற்றாமல் திருச்சபையின் பாரம்பரிய, போதனைகளை தம்மிடம் ஒப்படைக்கப்பட்டபடியே போதிக்கக் கடமைப்பட்டிருக்கிறார். அக்கடமை தவறி அவர் போதிக்கிற கொஞ்சமோ, கூடுதலோ தப்பறை கலந்த போதனைகளை "கத். விசுவாசிகள் கிறிஸ்துவுக்கு பிரமாணிக்கம் தவறாதிருக்கும்படியாக, ஏற்றுக் கொள்ளக்கூடாது.
> ஆனால், ஒரு பாப்பரசர், கிறிஸ்துவுக்கு முழுப் பிரமாணிக்கமாயிருந்து போதிக்கும் எல்லா போதனைகளையும் அவை தவறா வரத்திற்கு உட்படாதவையாயிருந்தாலும் கூட மதித்து பக்தியுடன் ஏற்று கீழ்ப்படிய கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். காரணம், கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் ஏற்ற போதனைகளையே கிறிஸ்துவுக்கு முழுப் பிரமாணிக்கமுள்ள ஒருவர் போதிக்க முடியும். இப்போதனை "ORDINARY MAGISTERIUM", என்று அழைக்கப்படுகிறது.