புனிதர்கள் இயேசுவின் வாழ்க்கையைத் தியானிப்பதே தங்கள் கதி எனக் கருதினார்கள் . அவருடைய புண்ணியங்களையும் பாடுகளையும் பற்றி தியானித்தனர். இவ்விதம் கிறிஸ்தவ உத்தமத்தனத்தின் உச்சியில் சேர்ந்தனர் .
அர்ச் பெர்நார்து இவ்வித தியானத்தை ஒரு முறை தொடங்கிய பின் கடைசி நாள் வரை அத்தகைய தியானத்தில் நிலைத்திருந்தார் . அவர் சொல்லுகிறார் :" நான் மனம் மாறிய துவக்கத்தில் இயேசுவின் துக்கத்தை ஓர் மலர் கொத்தாக கட்டி என் இதயத்தின் மேல் வைத்தேன் . பாடுகளின் நேரத்தில் அவரை வாதித்த அடியையும் , ஆணிகளையும் முட்களையும் பற்றி நினைத்தேன் . என் மனதின் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்து ஒவ்வொரு நாளும் இந்த இரகசியங்களைப் பற்றி தியானித்தேன் "
வேத சாட்சிகளின் வழக்கமும் இதுதான்; அதனால் பெரும் வாதனை வருத்தங்கள் மத்தியிலும் அவர்கள் அசையாமல் நின்று வெற்றி கண்டனர் . வேத சாட்சிகளின் அதிசயத்துக்குரிய உறுதியான நிலைக்குக் காரணம் இயேசுவின் காயங்களை ஓயாமல் சிந்தித்தது தான் என அர்ச் பெர்நார்து மொழிகிறார் .
தேவ தாய் தன் வாழ்க்கை முழுதும் செய்தது என்ன ? அவருடைய தேவ மகனின் புண்ணியங்களையும் பாடுகளையும் தியானித்தார் . அவருடைய பிறப்பில் சம்மனசுக்கள் சந்தோசமாய்ப் பாடுவதைக் கேட்டதையும், இடையர்கள் அவரை ஆராதிப்பதைக் கண்டதையும் , மனதில் இருத்தி இந்த அதிசயங்களைப் பற்றி தியானித்தார் . மாமிசமான வார்த்தையின் மகிமையை அவரது ஆழ்ந்த தாழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தார் . மாட்டுக் குடிலில் தூங்குபவரை அவருடைய மகிமை சிம்மாசனத்தில் மோட்சத்தில் பிதாவோடு அமர்ந்திருப்பதை தரிசித்தார் . கடவுளின் வல்லமையையும் குழந்தையின் பலவீனத்தையும் நிறுத்துப் பார்த்தார் .
ஒரு நாள் அர்ச் பிரிஜித்தம்மாளுக்கு நமதாண்டவள் சொல்லுவார் :" என் மகனின் அழகையும் அடக்கத்தையும் ஞானத்தையும் நான் தியானித்த போது என் உள்ளம் மகிழ்ச்சியால் கரை கடந்து பொங்கியது . கூர்மையான ஆணிகள் துளைக்கப்போகும் அவரது கரங்களையும் கால்களையும் கருதிய போது கண்ணீர் சொரிந்தது ; துக்கத்தாலும் வாதனையாலும் என் இதயம் பிளந்தது "
ஆண்டவரின் மோட்ச ஆரோகணத்திற்குப் பின் இயேசுவின் பாடுகளாலும் பிரசன்னத்தாலும் அர்ச்சிக்கப்பட்ட தலங்களை அடிக்கடி தரிசித்து வந்தார் . அத்தலங்களில் இருக்கும் போது அவரது அளவிறந்த அன்பையும் பயங்கரப் பாடுகளையும் பற்றி சிந்தித்தார்
முப்பதாண்டுகளாக மரிய மதலேனாள் இவ்வழக்கத்தை போமா என்ற ஊரில் தனிவாசத்தில் கையாண்டாள். திருச்சபையின் துவக்கத்தில் பரிசுத்த தலங்களைத் தரிசிக்கும் வழக்கம் சர்வ சாதாரணம் என்று அர்ச் ஜெரோம் சொல்லுகிறார் . கிறிஸ்தவர்கள் பற்பல நாடுகளில் இருந்தும் வந்து இந்த தலங்களைத் தரிசித்தனர் . இயேசு சபை ஸ்தாபகரான அர்ச் இஞ்ஞாசியார் எவ்வளவு இடைஞ்சல்களில் அவைகளைப் போய்த் தரிசித்தார் . குருக்களும் கன்னியர்களும் தான் விசுவாச சாத்தியங்களைப் பற்றியும் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் தியானிக்க வேண்டும் என்பது பெரும் தவறு . தங்கள் நிலைக்கேற்ற பிரகாரம் வாழ்வதற்கு குருக்களும் , துறவிகளும் இச்சத்தியங்களைப் பற்றி தியானிப்பது அவசியம் எனில் , சோதனை நிறைந்த உலகில் சிக்கிய இல்லறத்தார்களும் தங்கள் ஆத்துமத்தை இழந்து போகாவண்ணம் இச்சத்தியங்களைத் தியானிப்பது மகா அவசியம் அல்லவா ? திருச் செபமாலை தேவ இரகசியங்களில் இச்சத்தியங்கள் யாவும் எவ்வளவு நேர்த்தியாய்ப் பொதிந்திருக்கின்றன ! தேவ இரகசியங்களை தியானித்து அடிக்கடி செபமாலை சொல்லுவோமாக