அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த குருவானவர் ஒருவர் தனது வாழ்வில் நிகழ்ந்த இப்புதுமையை பதிவு செய்துள்ளார்.
ஒருநாள் அருகிலிருந்த ஊரில் மரணத் தருவாயிலிருந்த மனிதருக்கு, அவனது கடைசி நேரத்தில் உதவுவதற்காக அக்குருவானவர் அழைக்கப்பட்டார். அம்மனிதன் பல வருடங்களாக திருவருட்சாதனங்களைப் பெற்றிருக்கவில்லை. மேலும் அம்மனிதன் அவரைப் பார்க்கவோ, பேசவோ விரும்பவில்லை.
அப்பொழுது அக்குருவானவர், அம்மனிதனிடம், தனது கரங்களில் ஏந்தி கொண்டிருந்த உத்தரியத்தினைக் காட்டி, “ நான் இதனை உனக்கு அணிவித்தால் ஏற்றுக்கொள்வாயா? இதனைத் தவிர வேறொன்றும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன்” என வினவினார். அவனும் அதற்குச் சம்மதித்து உத்தரியத்தினை அணிந்துகொண்டான்.
அவ்வாறு அவன் அணிந்து கொண்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மனம் வருந்தி நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து தன்னை கடவுளுக்கு உகந்தவனாக மாற்றிக்கொண்டான்.
மேலும் இந்நிகழ்வு தனக்கு எவ்வித வியப்பையும் அளிக்கவில்லை என்றும், ஏனென்றால் நமதன்னை, இச்சலுகையினை மாந்தருக்கு அளித்த நாள் முதல் இந்நாள் வரை உத்தரியத்தின் வாயிலாக இது போன்ற எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தியுள்ளர்கள் என அக்குருவானவர் பதிவு செய்துள்ளார்.
*****சிந்தனை*****
பாதுகாப்பு கவசமானது எவ்வாறு போர்வீரர்களை ஆபத்திலிருந்து பாது காக்கின்றதோ, அவ்வாறே நமதன்னையின் இரக்கத்தின் ஆடையான உத்தரியமானது, நமது ஆன்ம போராட்டத்தில் சாத்தானின் சூழ்சிகளை வீழ்த்தும் கேடயமாக திகழ்கின்றது.
இதனை அணிந்திருக்கும் ஒவ்வொருவரையும் அன்னை தனது கண்ணின் மணிபோல பாதுகாத்து, பாவத்தினால் அவரது மகனிடம் இருந்து விலகிச் செல்லும் பாவிகளான நம்மை மனந்திருப்பி அவரிடம் திரும்ப கூடிச் சேர்க்கின்றார்.
இப்பாதுகாப்பினை நாம் விடாமுயற்சியோடு அணிந்திருக்கும் பொழுது, இதனை கைவிடும் பல சூழல்களை சாத்தான் நமக்கு ஏற்படுத்துவான். ஆனாலும் மனம்தளராமல் அன்னையின் இப்பாதுகாப்பினை பக்தியோடு நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுது, அன்னையும் இதற்கு பிரதிபலனாக, நமக்காக தமத்திருத்துவத்திடம் மன்றாடி பாவ மன்னிப்பையும், அவர்களது இரக்கத்தினையும் பெற்றுத் தருகின்றார்கள்.
அன்னையின் பாதுகாப்பினை ஏற்றுக்கொள்ளலாமா????
நன்றி : சகோ. ஜெரால்ட்
source : www.catholictamil.com
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !