கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்களின் குறிப்புகளில் பின்வரும் நிகழ்வுகள் குறிப்பிடப்படுள்ளன.
பரிசுத்த கார்மல் மலை அன்னையின் (உத்தரிய அன்னை) பக்தி முயற்சியானது, புனித சைமன் ஸ்டாக் வாழ்ந்த காலத்தினை விட மிகவும் பழமையானது. இன்னமும் சொல்ல வேண்டுமெனில், நமது மீட்பரின் காலத்திற்கும் முன்னரே, கி.மு 8 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த ஒன்றாகும்.
அக்காலக்கட்டத்தில் தான், கடவுளின் இறைவாக்கினர்களில் முதன்மையானவரான எலியாஸ், பாலஸ்தீனில் இருந்த கார்மல் மலையின் உச்சிக்குச் சென்று அங்கு செபம் மற்றும் தியானத்தினை கொண்ட ஒரு பாரம்பரியத்தினை ஏற்படுத்துகின்றார்.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரிசுத்த இறைவாக்கினரான எலியாசும் அவரது சீடர்களும், கடவுளின் தாயராக தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணிற்காக (பரிசுத்த கன்னி மாமரி) தங்களது வாழ்வினை அர்ப்பணித்துக் கொண்டனர்.
கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த பாரம்பரியமான செபம், தியானம் மற்றும் அன்னை மரியாளிடத்தில் பக்தி முயற்சிகள் இன்னமும் கத்தோலிக்க திருச்சபையினில் மிகவும் முக்கியமானதாக இருந்து வருகின்றது.
காலம் கனிந்த பொழுது, வார்த்தையானவர் நமக்காக கடவுள்-மனிதனான இயேசு கிறிஸ்துவாக நம்மிடையே குடிகொண்டார். நமது மீட்பரான அவரின் வாழ்வு, இறப்பு, உயிர்த்தெழுதல் மற்றும் விண்ணேற்பினை புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளின் வாயிலாக நாம் அறிந்து கொள்கின்றோம். அது மட்டுமின்றி, தனக்குப் பிறகு, தனது பெயரால் நற்செய்தியினை உலகிற்கு அறிவிக்கவும், கடவுளின் ஆட்சியினை உலகினில் ஏற்படுத்தவும், உலகத்தினை சுத்திகரிக்கவும் கத்தோலிக்க திருச்சபையினை ஏற்படுத்தி, அதற்கு அதிகாரம் வழங்கினார் என புதிய ஏற்பாட்டின் வாயிலாக நாம் அறிந்துகொள்கிறோம்.
மூன்றாம் ஆளான பரிசுத்த ஆவியானவர், தேவதாயரின் மேலும் அப்போஸ்தலர்களின் மேலும் பொழியப்பட்ட நாளான, பெந்தகொஸ்தே பெருவிழாவின் போது, கார்மல் மலையின் மேல் வாழ்ந்து வந்த பரிசுத்த இறைவாக்கினரான எலியாசின் வழிவந்தவர்களும் அவர்களது சீடர்களும் கீழே இறங்கி வந்தனர். அவர்கள்தான் பெந்தகொஸ்தே நாளின் பொழுது இயேசு கிறிஸ்துவினைக் குறித்த நற்செய்தியினை ஏற்றுக்கொண்டு அப்போஸ்தலர்களிடம் திருமுழுக்கு பெற்றனர்.
கடைசியாக பரிசுத்த தேவதாயரைக் கண்டு, தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டபொழுது, அன்னையின் திரு உதரங்களில் இருந்து வெளிவந்த இனிமையான சொற்களைக் கேட்ட பொழுது அருளும் மாட்சியும் நிறைந்த உணர்வினை பெற்றனர்.
அனைவருடனும் பிரியாவிடை பெற்று தங்களது பரிசுத்த மலைக்கு திரும்பிச் சென்ற பின்னர், பரிசுத்த தேவ தாயாருக்காக அவரை மகிமைப் படுத்த அவருக்காக ஒரு சிற்றாலயத்தினை எழுப்பினார்கள். அக்கணம் முதலே, பரிசுத்த தேவ தாயாரின் பக்தி முயற்சியானது, அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக கார்மல் மலையில் வாழ்ந்து வந்த துறவிகளுக்கு அவர்களது ஆன்மீகச் சொத்தாக அருளப்பட்டது.
நன்றி : சகோ. ஜெரால்ட்
source : www.catholictamil.com
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !