சாத்தானின் பகைமை… மாதாவின் தோழமை… தொடர்ச்சி..
ஆண்டவருடன் ஐக்கியமாயிருக்கும் உணர்வு அவளிடமிருந்து முற்றிலுமாக எடுக்கப்பட்டுவிட்டது. அவளது ஆன்மாவில் காரிருள் சூழ்ந்தது. ஆன்ம வறட்சி அவளை ஆட்கொண்டது. மடத்துப் பணிகளும், ஞான முயற்சிகளும் அவளுக்குத் தாங்கமுடியாத சுமையாகக் காணப்பட்டன. இதுவரை இல்லாத பயங்கர பாவச்சோதனைகள் அவளைத்தாக்கின. மனதில் இடைவிடாமல் சாத்தான் தோன்றினான். அடிக்கடி நேரடியாகத் தன் ஊனக் கண்களால் அவனைக் கண்டாள் புனிதை. தான் உண்மையிலேயே மனிதப்பிறவிதானா அல்லது பகுத்தறிவற்ற மிருகமா என்று அங்கலாய்த்தாள்.
பல நேரங்களில் சாத்தான் அவளை படிக்கட்டுகளிலிருந்து தள்ளிவிடுவான். ஒருமுறை கன்னியர் தேவநற்கருணை வாங்கும் ஜன்னலுக்கு மேல் சாத்தான் உட்கார்ந்து கொண்டு தேவநற்கருணை வாங்க வந்தால் அவளைக் கொன்று விடுவதாக மிரட்டினான். பயந்துபோன புனிதை அப்படியே நின்றுவிட்டாள். இவாஞ்சலிஸ்ட் தாயார், அவளை தேவநற்கருணை வாங்கச் செல்லவேண்டும் என்று ஆணையிடவே, புனிதை சென்று வாங்கினாள்.
ஒருமுறை உணவறையில் வழக்கமாக உண்ணும் ரொட்டியைத் தொடமுடியாமல் அவள் இருந்தாள். சகோதரிகள் அதற்கான காரணத்தைக் கேட்க அம்மேசையின்மீது இருந்த சாத்தானைக் காட்டி, “ நான் உணவைத்தொட்டால் என் கண்களைப் பிடிங்கிவிடுவதாக சாத்தான் கூறுகிறான்” என்றாள். இப்பொழுதும் மடத்துத்தாயார் உணவை உட்கொள்ளுமாறு உத்தரவிடவே அவள் அதற்குக் கீழ்ப்படிந்தாள்.
ஆனால் அவளது தோற்றம் கண்ணீர் வரவழைப்பதாக இருந்தது. பலமுறை சாத்தான் குளவி உருவம் பூண்டு அவளைக் கொட்டினான். வலி தாங்கமுடியாமல் தான் சாவப்போவதாக புனிதை நினைத்தாள். கன்னியர் கட்டளை ஜெபத்தைப் பாடும்போது அவளது காதிலும் உள்ளத்திலும் ஏராளமான தூஷன மொழிகளை சாத்தான் மொழிந்தான். கட்டளை ஜெபத்தில் ஆண்டவரைப் புகழ்வதற்குப் பதிலாக அவரை இகழ்ந்துவிடுவோமோ என்று பயந்தாள். தனக்காக மன்றாடும்படி சக கன்னிகையிடம் கேட்டுக்கொண்டாள்.
“ நான் அனுபவிக்கும் சோதனைகளைவிட மிகப்பெரிய வேதனைகள் நரகத்தில் இருக்காது என் நினைக்கிறேன் “ என்று ஒருமுறை அவள் கூறினாள்.
ஆண்டவர் அவளுக்குத் தந்த கொடைகள் ஐந்து. அவைகள் ஆண்டவரது இருதயம், அவரது முள்முடி, அவளைத் தன் மணவாளியாக ஏற்றுக்கொண்டதற்கான மோதிரம், அவரது திருக்காயங்களின் பதிவுகள் மற்றும் ஒரு மனிதப்பிறவிக்கு ஆண்டவரின் பரிசுத்ததனத்தில் எத்தகைய பெரிய பங்கு தரமுடியுமோ அத்தகைய பெரிய பங்கு. அதுபோலவே சாத்தான் அவளை வதைப்பதற்கு பயன்படுத்திய முக்கிய சோதனைகளும் ஐந்து. அவைகள் விசுவாசத்திற்கு எதிரான சோதனை, பரிசுத்ததனத்திற்கு எதிரான சோதனை, அகங்காரம் தொடர்பான சோதனை, பேராசை தொடர்பான சோதனை மற்றும் அவ நம்பிக்கை தொடர்பான சோதனைகளாகும்.
இவைகளுக்கெதிராக அவள் வீரமுடன் போரிட்டாள். தன்னையே கசையாள் அடித்துக்கொண்டாள். மயிராடை அணிந்து, வேறு பல ஒறுத்தல்கள் முயற்சிகளையும் செய்தாள். இது தவிர அவள் சிறுமைப்படுத்தப்பட அதிகமாக விரும்பினாள். இதை ஆண்டவரே(பிதா) அவளுக்கு அறிவித்தார்:
“ எனது ஏக குமாரனின் பத்தினியே, எப்போதும் நீ கொண்டிருக்க வேண்டிய அறிவு உன்னைப் பற்றிய அறிவு. அதாவது உன் ஒன்றுமில்லாமை “ என்று கூறினார்.
அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் அவளுக்கு,
“ தாழ்ச்சி என்பது ஒருவன் தன்னுடைய ஒன்றுமில்லாமையை முழுமையாக அறிந்து கொள்வதும், தான் உதாசீனப்படுத்தப்படும்போதும், அவமதிக்கப்படும்போதும், தன்னுடைய ஒன்றுமில்லாமையைக் கண்டு மகிழும் மனநிலையே ஆகும் “ என்று ஒரு காட்சியில் தெறிவித்தார்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !