இருதயத் தாழ்ச்சி
ஜெர்த்ரூத்தின் இருதயத்தைத் தாழ்ச்சி என்ற ஊதா மலர்களால் அலங்கரித்து அதனை சேசுவுக்காக மாமரி தயாரித்து வந்தார் என்பதைப் பார்த்தோம். சேசுநாதரின் இருதயத்திலிருந்து புறப்படும் தாழ்ச்சி என்ற நறுமணம் அவளது இருதயத்திலிருந்தும் புறப்பட்டது.
அவள் கூறுகிறாள் : “ ஓ என் உயிரே! என் ஆண்டவரே! எவ்வளவு கரடுமுரடான பாதைகளை நீர் கடந்து வருகிறீர்! தந்தையே, எனது வணங்காத மனதை, சுய நேசத்தை விட்டுவிடாத என் மனதை உம்மில் திருப்ப தேவரீர் எடுக்கும் முயற்சிதான் என்ன ! உம்மை எந்த அளவுக்கு தாழ்த்த நீர் சித்தமானீர்! உமது தாராளத்தின் கொடைகளை எவ்வளவு அள்ளி வீசுகிறீர் ! தந்தையே, அர்ச். பெர்நார்து கீழ்க்கண்டவாறு உமது அன்பை விவரிக்கிறார் :
“ உம்மிடமிருந்து பறந்தோடிச் செல்வோரை பின் தொடர்ந்து செல்கிறீர். உம்மிடமிருந்து தங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்வோரை நீர் தேடிச் செல்கிறீர். அவர்கள் உம்மைத் தொடந்து புறக்கணித்தாலும் நீர் அவர்களுக்கு தொடர்ந்து நன்மை புரிகின்றீர். உம்மை எதுவும் கோபப்படுத்துவதில்லையே, எதனாலும் உமது அன்பை குறைக்க முடியவில்லையே ஆண்டவரே ‘. அர்ச். பெர்நார்தின் இவ்வார்த்தைகளை நீர் என்னில் செயல்படுத்தச் சித்தமானீர்.”
“ இனிமையான மொத்த உருவமான ஆண்டவரே, எனது எண்ணிறந்த பாவங்களை, எனது குற்றங்களை நான் பார்க்கிறேன். உம்மை எரிச்சல்படுத்துவதற்கு உம்மை மனநோகச் செய்வதற்கு எவ்வளவு பாவங்கள், எவ்வளவு குற்றங்கள் தேவையோ அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமானவை எனது குற்றங்கள். ஆயினும் தந்தையே, நீர் பூமியில் வாழ்ந்தபோது துரோகியான யூதாசை உம்மோடு வைத்திருப்பதற்கு உமக்கு எவ்வளவு பொறுமை தேவைப்பட்டதோ அதைவிட அதிகமான பொறுமையோடு என்னைப் பொறுத்துக்கொண்டீர். ஆகவே தந்தையே எனது பிரமாணிக்கமின்மையாலும், எனது உதாசீனத்தாலும் எனது அவமரியாதையாலும் உமது உதவிக்கு நான் காட்டிய நன்றியற்றதனத்தினாலும் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன். ஆண்டவரே, உமது ஞானம் எங்கே? உமது மாண்பை மறக்கச் செய்யும் உமது விநோதமான கருணையை நான் என்னவென்று சொல்வேன். தரம் கெட்ட மிருகமாகிய என்னை, உம்மோடு சேர்த்துக்கொள்ள நீர் எடுக்கும் முயற்சிதான் என்ன! எந்த அளவுக்கு நீர் உம்மை தாழ்த்துகிறீர் ! உமதன்பின் மீது, உமது பரிவிரக்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று நீர் மனிதர்களுக்குக் கற்பிப்பிப்பதற்காக உமது கொடைகளைக் குறித்து மிகமிகக் குறைந்த மரியாதை வைக்கும் என்னை, எனது சகோதரர்களுக்கு அதிகமான துர்மாதிரிகை காட்டுகிற பிறவியாகிய என்னை நீர் தெரிந்துகொண்டீரே ! “ என்று ஆண்டவரின் இரக்கத்தை ஜெர்த்ரூத் தாழ்ச்சியோடு பாடுகிறாள்.
ஜெர்த்ரூத் எந்த அளவுக்கு தாழ்ச்சியுள்ளவள், எந்த அளவுக்கு சுயநேசம் அற்றவள் என்பதனைக் காட்டும் இதுபோன்ற வார்த்தைகளை அவளது எழுத்துக்களில் அதிகமாகக் காணலாம். தாழ்ச்சி அவளது வார்த்தைகளில் மட்டும் காணப்படுவதில்லை. அவளது செயல்களிலும் மிளிர்கிறது.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !