மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் -4 : கற்பு என் பொக்கிஷம் – மாதா
கதிரவன் மறையத்தொடங்கியதும் மரியாவின் தந்தை லூயிஜியின் (போர் வீரர்) கரங்கள் ஜெபமாலை மணிகளை உருட்டும். ஆனால் சகவீரர்கள் வீதிகளில் உலா வந்து மகிழ்ந்து திரும்புவார்கள். இப்படிப்பட்ட ஜெபமாலை பக்தர் அப்பாவுக்கு இப்படி ஒரு அருமையான புனிதை மகள் கிடைத்ததில் ஆச்சரியம் என்ன ?
மரியாவின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி திவ்ய நற்கருணையில் பங்கு கொள்வதாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமல்லாமல் இடையிலுள்ள நாட்களிலும் அவளின் சகோதரன் ஆஞ்சலோவுடன் கொங்கோணா ஆலயம் ( ரோம் அருகே) செல்வது வழக்கம். திவ்ய நற்கருணை உட்கொள்ள முடியவில்லை என்றாலும் திருப்பலியில் இயேசுவின் கல்வாரி திருச்சிலுவையை அதில் காண்பாள்.
1901, நற்கருணைத் திருவிழா நாளில் நெட்டுனோவில் உள்ள ஆலயத்திற்கு சென்றனர். திவ்ய நற்கருணை பவனிக்காக அந்த நகரம் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. லில்லிப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தெருக்களின் வழியாக அந்த சிறு புனிதை மெதுவாக நடந்து வந்தாள். தன் இருதயத்தில் எழுந்தருளி வர இருக்கும் இயேசு சுவாமியைப்பற்றி மனதில் எண்ணும்போது அவள் தான் நடப்பதாக எண்ணாமல் பறப்பதாக எண்ணினாள். மகிழ்ச்சியாள் அவளின் ஆன்மா நிரம்பியது. இயேசுவின் திருஇருதயத்தில் மூழ்கியிருந்த அவளின் முகம் ஒரு தனிப்பிரகாசமாக ஜொலித்தது..
அன்று 1901, ஜூன் 16-ம் தேதி மரிய கொரற்றி பங்குத் தந்தை ஜெரோனிமோவிடமிருந்து இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் பெற்றுக்கொண்டார். நெட்டுனோவில் அலங்கரிக்கப்பட்ட ஆலயமும், பங்குத்தந்தை ஜெரோனிமோவும், தன் தாயும், சகோதரி சகோதரர்களும் அவள் பார்வையில் நின்று மறைந்து விட்டார்கள். கடவுளின் மேலுள்ள அதிகப்பற்றினால் தேவ மகனின் கைகளைக் கோர்த்து ஆனந்தம் கொள்வதாக கனவு கண்டாள். லில்லிப் பூக்களால் நிறைந்த அந்தப் பூந்தோட்டத்தில் தூய ஆவி அவளை ஆசீர்வதித்தார். ஆலயத்தை விட்டுப் போகும் முன் மரியா வியாகுல அன்னையின் திரு உருவத்திற்கு முன் நின்று ஒரு சபதம் செய்தாள்.
“ அம்மா இன்று முதல் எனது உடலின் ஆன்மாவை உனக்குக் காணிக்கையாக்குகிறேன். உமக்கும் உம் மகனுக்கும் என் நினைவாலும், செயலாலும் வருத்தம் விளைவிக்கும் விதத்தில் நடக்க மாட்டேன். என்னையும், என் தாயையும், சகோதரி சகோதரர்களையும் நீர் காத்துக்கொள்ளும். சாவை அணைத்தாலும் சத்தியமாய் உமக்கு சாட்சியாய் வாழ்வதை தவற விடமாட்டேன். வெந்து போனாலும் உம்மை வேண்டுவதை நிறுத்த மாட்டேன். துன்பத்தில் துவண்டாலும் உம்மை துதிப்பதை மறக்கமாட்டேன் “. சபதமேற்ற மரிய கொரற்றி சப்தமில்லாமல் வீடு திரும்பினாள்.
1902, ஜூலை 5
தன்னிடம் தவறாக நடக்க முயலும் அலெக்சாண்டரிடம் போராட்டம்..
“ அலெக்சாண்டர் நீ பாவம் செய்கிறாய் “ “ நான் அம்மாவை அழைப்பேன் “
“ அழைத்தால் உன்னை மட்டுமல்ல… உன் குடும்பத்தையே கொலை செய்வேன் “
“ மரியா ! ஏன் இப்படி எதிர்க்கிறாய்? “
“ அது பாவம். நீ இப்படித் தவறு செய்தால் நரகத்திற்குத்தான் செல்வாய் “
“ இறுதியாகக் கேட்கிறேன்.. எனக்கு நீ இணங்காவிட்டால், சாவைத்தான் நீ அணைக்க வேண்டியிருக்கும் “
“ மானம் கெட்டு வாழ்வதை விட மரிப்பதே மேல் “
“ மரியா சம்மதிக்கிறாயா “
“ என்னை விட்டு விடு “
கொரற்றி ஒரு முடிவுக்கு வந்தாள்.. வாழ்வா, சாவா ? மோட்சமா, நரகமா ?
இறைவனா, சாத்தானா? பாவமா, இரத்த சாட்சியமா ? தன்னில் தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டாள். இரத்த சாட்சியாக மாற முடிவெடுத்தாள்…
“ யாராவது காப்பாற்றுங்கள் “ என்று சப்தமிடுகிறாள்…
திடீரன்று நீண்ட அந்த கத்தி அவள் மார்பில் பாய்கிறது.. கண் மூடி திறப்பதற்குள் பதிநான்கு குத்துகள் மார்பிலும், வயிற்றிலும். சத்தமிடுகிறாள்.. சிறு பிள்ளை போல அலறுகிறாள்.. இரத்த வெள்ளத்தில் துடிக்கிறாள்.
கொரற்றியின் தங்கையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வருகிறாள் தாய் அகந்தா…
“ மகளே உனக்கு யார் இப்படிச் செய்தார்கள்… மகளே.. மகளே… “
மரியா முதலில் பேசவில்லை.. பின் தன் களங்கமற்ற கண்களை உயர்த்தி மரியா முணுமுணுத்தாள்…
‘ அலெக்சாண்டர்… அலெக்சாண்டர் “
ஏன் இப்படிச் செய்தான் என்று கேட்டதற்கு நடந்த உண்மையை மெதுவாக சொல்கிறாள்.. “ பாவம் செய்து நரகத்திற்கு போவதை விட சாவதே மேல் என்று எண்ணினேன் “ என்றாள்…
ஒரு நாள் முழுக்க மருத்துவமணையில் மருத்துவமனையில் மரணத்தோடும் உடல் வேதனையோடும் போராட்டம்…
தன் வேதனையோடு ஆண்டவரின் பாடுகளை தியானித்து முடிவில் இறந்தாள்…
தான் சொன்னபடியே அலெக்சாண்டரை மீட்டாள்.. சிறையிலேயே மனம் திரும்பிய அலெக்சாண்டர்… கப்பூச்சியன் சபை துறவியாக வாழ்ந்து மரித்தார்.
நன்றி : நூல் - குருதியில் பூத்த மலர், ஆசிரியர் : குமரி ஆதவன்
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !