கார்மல் மலையின் பரிசுத்த கன்னி மாமரி, உத்தரியத்தினை விடாமுயற்சியுடனும், பக்தியுடனும் அணிந்திருக்கும் தனது குழந்தைகளை நித்திய நரகக் கேட்டிலிருந்து காப்பாற்றுவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்கள். அது மட்டுமின்றி, இவ்வுலகில் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யாமல், உத்தரிக்கிற நிலையில் தனது பாவங்களுக்கான பரிகாரத்தினை நிறைவேற்றும் உத்தரியம் அணிந்திருக்கும் ஆன்மாக்களை, அவர்களது உத்தரிக்கிற நிலையின் காலத்தினை குறைத்து மிக விரைவில் மோட்சத்திற்கு கூட்டிச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
இந்த வாக்குறுதியானது, பாப்பரசர் 22 ஆம் அருளப்பரின் சுற்றுமடலின் வாயிலாக அறியலாம். அவருக்குத் தோன்றிய பரிசுத்த கன்னி மாமரி, தனது இரக்கத்தின் ஆடையினை அணிந்து மரிக்கும் தனது குழந்தைகளைக் குறித்து அவரிடம்,
“இரக்கத்தின் அன்னையாகிய நான், உத்தரியத்தினை அணிந்திருக்கும் என்னுடைய குழந்தைகள் இறந்த பின்னர் உத்தரிக்க நிலையில் வேதனைப்பட்டால், அவர்கள் இறந்த அடுத்த சனிக்கிழமை நானே உத்தரிக்க நிலைக்கு கீழே இறங்கி வந்து, அவர்களை நித்திய வாழ்விற்கு என்னுடன் பரிசுத்த மலைக்கு அழைத்துச் செல்வேன்” என கூறியுள்ளார்கள்.
இந்த சலுகையினை பெறுவதற்காக, தனது உத்தரிய பாதுகாப்பினை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஆன்மாவும், தாங்கள் இவ்வுலகில் வாழும் நாட்களில், பின்வரும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என பரிசுத்த கன்னி மாமரி கூறியுள்ளார்கள்.
1) எப்பொழுதும் உத்தரியத்தினை பக்தியுடன் அணிந்திருக்கவேண்டும்.
2) தான் வாழும் நிலைகேற்ற கற்பு நெறியினை கடைபிடிக்கவேண்டும். அதாவது, திருமணமானவர்கள் தங்கள் துணைக்கு உண்மையுள்ளவர்களாகவும், தனித்து வாழ்பவர்கள் இறைவனுக்கு உண்மையானவர்களாகவும் வாழ வேண்டும்.
3) தினமும் மரியாயின் ஜெபக்கிரீடமோ அல்லது திருச்சபையின் அறிவித்துள்ள நாட்களில் ஒருசந்தியும், புதன்கிழமை சனிக்கிழமைகளில் சுத்தபோசனமும் அல்லது குருவானவரின் அனுமதி பெற்று, நமதன்னையின் ஐம்பத்திமூன்று மணி ஜெபமாலையோ அல்லது குருவானவரின் அனுமதி பெற்று வேறு ஏதாவது நல்ல காரியங்களோ செய்ய வேண்டும்.
முதலாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் இருந்த, பாப்பரசர் பதினைந்தாம் ஆசிர்வாதப்பர் (Pope Benedict XV), உத்தரியத்தினை பக்தியுடன் முத்தி செய்பவர்களுக்கு 500 நாட்கள் பலன்கள் என அங்கீகரித்தார்கள்.