“இருபது விதிகள் “ ( மிகவும் பயனுள்ள விதிகள்)
சேசு தந்த வாழ்வியல் சட்டத் தொகுப்பு…
1593-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி, புனிதையை அவளுக்கு அறிமுகமான குரல் அழைத்தது. “ என் அன்புடையாளே வா, நான்தான் என் நினைவினின்று உன்னை எடுத்து உன் தாயின் உதிரத்தில் வைத்தேன். உன்னில் நான் மிகவும் மகிழ்ந்தேன்.” இந்த அழைப்புக் குரலைக் கேட்ட புனிதை சேசுவைத் தேடி மடம் முழுவதும் சுற்றித் திரிந்தாள். “ வா, உன் தாயின் உதிரத்திலிருந்து எடுத்து உன் அன்பரானேன். என் மகிழ்வே வா.” இரண்டாம் முறையும் இக்குரலைக் கேட்ட புனிதை, முன்னிலும் அதிக உருக்கத்துடன் தன் அன்பரைத் தேடித் திரிந்தாள். முன்றாம் முறையும், “ வா, தெரிந்தெடுக்கப்பட்டவளே, வாழ்வியல் சட்டத்தொகுப்பு ஒன்றை உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். அது உன் ஆசாபாசங்களை உன் வாழ்நாள் முழுவதும் வேரறுத்து இறுதியில் வாழ்வோர் நாட்டில் என்னுடன் மகிழ்வாக இருப்பதற்கு உன்னை அழைத்துச் செல்லும்” என்று அக்குரல் அழைத்தது.
உடனடியாக புனிதை பரவசமானாள். பின்பு தேவ வார்த்தையானவரின் வார்த்தைகளை கீழ்க்கண்டவற்றை கூறலானாள்:
“ நானே உன் ஆன்மாவின் மணவாளர். நித்திய பிதாவின் திருச்சுதன். என் அன்புடையாளே, இந்த சட்டங்கள் என்னுடையதும், உன்னுடையதுமாகும். நான் இந்த சட்டங்களைத் தருகிறேன். ஆகவே இது என்னுடையது. நீ இந்தச் சட்டங்களை பின்பற்ற வேண்டும். எனவே இது உன்னுடையது.
1. உன்னுடைய உள்ளரங்க வெளியரங்கச் செயல்களில் நான் உனக்கு வெளிப்படுத்திய தூய்மை மட்டுமே மையமாக இருக்க வேண்டும். என்ன பணி செய்தாலும், என்ன வார்த்தை பேசினாலும், அதுவே உனது கடைசியானது என்று கருத வேண்டும்.
2. நான் எத்தனை ஆன்மாக்களை வழிநடத்தும்படி உனக்குத் தருவேனோ, அத்தனை கண்களைப் பெற்றுக்கொள்ளும்படி உனது சக்திக்கு ஏற்பவும், நான் உனக்குத் தரும் வரப்பிரசாதத்திற்கு ஏற்பவும் முயற்சி செய்.
3. உனக்கு அனுமதியிருந்தாலும் கூட, நீ யாருக்காவது ஆலோசனை கூறுவதாகவோ, கட்டளையிடுவதாகவோ இருந்தால் சிலுவையில் தொங்கும் எனக்கு முதலில் தெறிவிக்கவேண்டும்.
4. எந்த படைப்பிடமும் எந்தக் குறையும் காணும் முன்பும், அதைப்பற்றி பேசும் முன்பும், அதனை சரிசெய்யும் முன்பும், அந்தப் படைப்பை விட நீ தரத்தில் குறந்த படைப்பு என்ற உண்மையை, நீ நினைவில் கொள்ள வேண்டும்.
5. உன் வார்த்தைகள் உண்மையானதாக, கலப்படமற்றதாக, ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். போலியானதாகவோ, முகத்தாட்சண்யம் உள்ளதாகவோ இருக்கக்கூடாது. இதில் நீயும் பிற படைப்புகளும் என்னை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
6. உனக்கு சமமானவர்களுடன் நீ கொள்ளும் நட்பும், அன்புறவும் ஒரு முக்கியமான காரியத்தின் தீவிரத்தை குறைத்துவிடக்கூடாது. அதே நேரத்தில் காரியத்தின் முக்கியத்துவம், சாந்தத்தையும் தாழ்ச்சியையும் புறந்தள்ளக்கூடாது.
7. உன் செயல்கள் சாந்தத்தோடும், கண்ணியத்தோடும், விவேகத்தோடும் இருக்கவேண்டும். அவை படைப்புயிர்களை நம்மிடம் ஒரு காந்தம்போல் ஈர்த்து வரட்டும். என் ஞான சரீரத்தின் உறுப்புகளுக்கும், உன்னைச் சுற்றிலுமிருப்போருக்கும் இதுவொரு வாழ்க்கை நெறியாக இருக்கட்டும்.
8. கலைமான் நீரோடையை நாடிச்செல்வதுபோல், என் ஞான சரீரத்தின் உறுப்புகளை நாடிச்சென்று, தேடிச்சென்று, அறச்செயல்களைச் செய். அதில் இரவு பகல் பார்க்காதே. இளைப்போ, களைப்போ உன்னை மேற்கொள்ளலாகாது. நீ நடந்து செல்லும் பூமி உன்னை சுமப்பதில் சலிப்படைவதில்லை.
9. உனக்கு நான் தரும் சக்திக்கேற்ப, பசித்தோருக்கு உணவாயிறு. தாகமுற்றோருக்கு தண்ணீராயிரு. ஆடையின்றி இருப்போருக்கு ஆடையாயிரு. சிறையுற்றோருக்கு தோட்டமாயிறு. ( கார்மேல் மடத்தில் கன்னியருக்காகத் தோட்டங்கள் அமைப்பது வழக்கம்)
10. நான் யாரைக் கடலில் எறிந்துவிட்டேனோ ( உலகாதயத்தை நாடிச்செல்ல அனுமதித்துவிட்டோனோ) அவர்களிடம் பாம்பைப் போல விவேகமாயிரு. நான் தெறிந்துகொண்ட என் மகள்களிடம் புறாவைப் போல கபடமற்றிரு. உலகாதாய மனிதர்களைக் கண்டு அஞ்சு. என் மகள்களிடம் புறாவைப்போல நேசம் கொண்டிரு. காரணம் அவர்கள் இஸ்பிரீத்துசாந்துவின் ஆலயம்.
11. நான் படைப்புயிர்களுக்கு ஆண்டவராயிருப்பதுபோல, நீ உன் உணர்வுகளுக்கு எஜமானியாயிரு.
12. நான் பூமிக்கு வந்தபோது எவ்வாறு உங்களுடன் இரண்டற கலந்துவிட்டேனோ அதுபோல நீயும் படைப்புகளுடன் உன்னையே ஐக்கியமாக்கு. நான் எவ்வாறு படைப்புகளை என்னிடம் ஈர்த்துக்கொள்கிறேன் என்று கண்டுபாவி. “ ஒருவன் பலவீனனானால் நானும்பலவீனன் ஆகிறதில்லையோ?” ( 2கொரி.11:20) என்ற என் அப்போஸ்தலரின் வார்த்தைகள் உன் நினைவில் இருக்கட்டும்.
13. மேலதிகாரிகள் அனுமதியுடன் உன்னிடம் ஏதேனும் கேட்போருக்கு எதையும் மறுக்காதே.
14. நீ என்னை எந்த அளவுக்கு மதிக்கவேண்டுமென்று விரும்புகிறேனோ, அந்த அளவுக்கு நீ உன் சபை விதிகளை மதிக்க வேண்டும். ஒவ்வொரு சகோதரியும் தன் அழைப்பின்மேல் பற்றுதல் உள்ளவளாக இருக்கட்டும். நான் அவர்களை எந்த சபைக்கு அழைத்தேனோ அந்த சபை மீது அவர்கள் பற்றுதல் கொள்ளவேண்டும்.
15. அனைவருக்கும் கீழ்ப்பட்டிருக்கவேண்டும் என்ற ஆசையை உன்னில் பெரிய அளவில் வளர்த்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் யாரையும்விட, மிகச்சிரியவரைவிட சிறந்தவள் என்று பெயரெடுப்பதைப் பற்றி மிகவும் அச்சம் கொள்ளவேண்டும்.
16. நீ நிம்மதி, ஓய்வு, ஆறுதல் இவற்றைத் தேடாதே. மாறாக புறக்கணிக்கப்படவும், அவமானப்படவும் விரும்பு.
17. இன்றிலிருந்து எப்படைப்பையும் தனிப்பட்ட முறையில் நேசிக்காதே. அவர்களுடன் நெருக்கமாயிருக்க விரும்பாதே. மாறாக, நான் உனக்கு நியமித்துள்ள மேலதிகாரிகளிடமும், உன் பாவசங்கீர்த்தன குருவிடமும் மட்டும் உன் உள்ளத்தை திறந்து காண்பி.
18. உனது விருப்ப பற்றுதல்களையும் செயல்களையும் எனது ஞான சரீரத்தின் உறுப்புகளுடன் சேர்த்து தொடர்ந்து எனக்கு ஒப்புக்கொடுத்து வா.
19. நான் எனது தாயாரின் பரிசுத்த உதரத்திலிருந்து வெளிவந்த நேரமான இரவு 10 மணியிலிருந்து மறுநாள் தேவநற்கருணை பெறுவதுவரை எனது பாடுகளை, துன்பங்களை என் பரம பிதாவுக்கு தொடர்ந்து ஒப்புக்கொடுத்து வா. நீ என் சரீரத்தையும், இரத்தத்தையும் வாங்குவதற்கு இதுவே சரியான தயாரிப்பாகும்.
20. இறுதியாக நான் உனக்குத் தரும் அனைத்து உள்ளரங்க, வெளியரங்க காரியங்களால், நீ எனக்கு ஏற்பவும், என்னிலும் மாற்றுரு பெற வேண்டும்.
நித்திய ஞானமானவரால் தரப்பட்ட இந்த விதிகளை நமது புனிதை மிக பிரமாணிக்கமாக பின்பற்றினாள். மாதம் ஒருமுறை மடத்தின் ஒதுக்குபுறமாக தனியிடம் தேடிச்சென்று இந்த விதிகளை எவ்வாறு பின்பற்றினாள் என்று ஆத்தும சோதனை செய்தாள். இதில் ஏதேனும் சிறிது தொய்வு இருப்பதாக அவள் நினைத்தால் தன்னையே நெடுநேரம் சாட்டையால் கடுமையாக அடித்துக்கொள்வாள்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !