“சேசுவின் திருஇரத்தம் “
1585-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ஆண்டவர் புனிதையிடம், “ தைரியமாக நட. இதுவரை நீ கொண்டிருந்த நம்பிக்கையைவிட இப்போது அதிக நம்பிக்கை கொண்டிரு. அப்போது நானும் உன்மீது அதிகப் பிரியம் கொள்வேன். சிறிதளவு அச்சமோ அல்லது தயக்கமோ கொண்டிருந்தாலும் அது என் வரப்பிரசாதத்தைத் தடுத்து நிறுத்திவிடுகிறது. ஏனெனில் நீ கொள்ளும் அச்சமும் தயக்கமும் நீ என்னிடம் வேகமாக ஓடி வருவதைத் தடுத்து நிறுத்திவிடுகிறது “ என்றார். நமதாண்டவர் மிகுந்த அன்போடு நமக்காக சிந்திய இரத்தமே புனிதையை அதிகமாக ஊக்கப்படுத்தியது. அர்ச். சியென்ன கேத்தரின் நமதாண்டவரின் தெய்வீக இரத்தத்தைத் தன் உதடுகளால் சுவைத்ததாக எழுதப்பட்டுள்ளது. நமது புனிதையும் ஆண்டவரின் இரத்தம் தோய்ந்த காயங்களில் தன் உதட்டைப் பதித்துள்ளாள்.
சேசுவின் திரு இரத்தமே புனிதைக்கு கிடைத்த மாமருந்து. பாவிகள் மீதான பரம பிதாவின் கோபத்தைத் தணிக்கப் புனிதை பரம பிதாவுக்கு சேசுவின் திரு இரத்தத்தை ஒப்புக்கொடுத்தாள். உத்தரிக்கிற ஸ்தலத்திலிருக்கும் ஆன்மாக்களை விடுவிக்கவும் அவள் அதே திருஇரத்தத்தை ஒப்புக்கொடுத்தாள். தேவநற்கருணை வாங்க தன்னையே ஆயுதப்படுத்த அவள் ஆண்டவரின் இரத்தத்தை நாடினாள். தவிர்க்க முடியாத தினசரி குறைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்த அதே திருஇரத்தத்தின் உதவியை தேடினாள்.
ஒருமுறை பிதாவாகிய சர்வேசுவரன் புனிதையிடம், “ எனது வார்த்தையானவரின் இரத்தத்தை நமக்கு ஒப்புக்கொடுப்பது உன் வேண்டுதலைப் பெற்றுக் கொள்ள மிகப் பெரிய வழியாகும். மனிதனைக் கடவுளுடன் இணைப்பதும், கடவுளை மனிதனுடன் இணைப்பதும் நமது வார்த்தையானவரின் இரத்தமே. நமது வார்த்தையானவரின் இரத்தத்தின் வல்லமையை பயன்படுத்தி சாத்தானால் கூட நம்முடன் இணையமுடியும். ஆனால் அவனது அகந்தை காரணமாக நமது இரத்தத்தின் வல்லமையை அவன் பெற்றுக்கொள்ள மாட்டான். எனவே நமது வார்த்தையானவரின் வல்லமையுள்ள உதவியை அவனால் பெற இயலாது.
மனிதர்கள் கூட அவர்களுக்காக சிந்தப்பட்ட இந்தத் திரு இரத்தத்தின் உதவியைப் பெறத் தகுதியற்றவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். இது மிகப் பெரிய வேதனையாகும். புனிதை வார்த்தைப்பாடு கொடுத்த பின்பு, அவள் மீது பொழியப்பட்ட ஏராளமான வரங்களுள் ஒன்று சிலுவைக் காட்சி. அக்காட்சியில், சேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தார். ஆண்டவரின் உடல் முழுவதும் இரத்தமாக இருந்தது. ஒவ்வொரு இரத்தத் துளியும் ஒரு நாவுபோல மனிதர்களை இந்த இரத்தத்தை பெற்றுக்கொள்ள அழைக்கிறது. ஆனால் மிகச் சிலரே இந்த அழைப்பை ஏற்றுக்கொள்கின்றனர். இது புனிதைக்கு மிகப் பெரிய வேதனையை அளித்தது. ஆகவே புனிதை ஆண்டவரிடம்,
“ ஆண்டவரே, உமது படைப்புகளால் எவ்வாறு உமது இரத்தத்தைக் கண்டுகொள்ளாதர்களாகவும், நன்றியில்லாதவர்களாகவும் இருக்க முடிகிறது?” என்று வியப்புடன் கேட்டாள். ஆனால் மிகச் சில ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மாக்கள் ஆண்டவரின் இரத்தத்தைப் பெற்றுக் கொண்டு, ஆண்டவர் மகிழ்ச்சியோடு இளைப்பாறும் இல்லிடமாகத் தங்கள் ஆன்மாவை மாற்றிக் கொள்கின்றனர். அவர்களும் ஆண்டவரில் தங்கி இளைப்பாறுகின்றனர்.
புனிதை மேலும் கூறுகிறாள் :
“ சேசு நமக்காகத் தம் காயங்களை திறந்தே வைத்திருக்கிறார். குறிப்பாக, தமது திருவிலாக் காயத்தை. நாம் விரும்புவதெல்லாம் அத்திருக்காயத்தில் நுழைந்து நமது பாவக் கறைகளையெல்லாம் கழுவி பரிசுத்தமாக்கலாம். ஆண்டவரின் இரத்தம் எவ்வளவு மகத்துவமானது, விலையேறப் பெற்றது என்பதை உணர்ந்துகொள்ளும் ஆன்மா அதன் இனிமையில் உருகிவிடுகிறது. ஆண்டவரின் திருஇரத்தம் நம்மை புனிதப்படுத்தும் ஒரு சிறப்பான இடம் பாவசங்கீர்த்தனத் தொட்டி.”
பாவசங்கீர்த்தனம் என்ற தேவதிரவிய அனுமானம் குறித்து தனது நவதுறவிகளுக்கு புனிதை பின்வருமாறு போதித்தாள் :
“ சகோதரிகளே, நீங்கள் பாவசங்கீர்த்தனத்தொட்டிக்கு செல்லும்போது, ஆண்டவரின் திருஇரத்தத்தைப் பெறச் செல்கிறீர்கள் என்பதனை நினைவு கூறுங்கள். உங்கள் ஆன்மா ஆண்டவரின் இரத்தத்தால் கழுவப்பட்டு அலங்கரிக்கப்படும்போது எவ்வளவு அழகுள்ளதாக, மதிப்பு மிக்கதாக, கண்ணியம் மிக்கதாக இருக்கும் என்றால், நீங்களே உங்கள் ஆன்மாவை ஆராதிப்பீர்கள். அவ்வளவு விலையேறப் பெற்றது. வல்லமை வாய்ந்தது நமதாண்டவரின் திருஇரத்தம்.”
“ வார்த்தையானவரே ! தேவரீர் விருத்தசேதனத்தின்போது சிந்திய உமது இரத்தத்தை, ஜெத்சமெனித் தோட்டத்தில் மிகுந்த மனவேதனையோடு ஜெபித்தபோது நீர் சிந்திய இரத்தத்தை, கற்றூணில் அடிபட்டபோது சிந்திய இரத்தத்தை, பாடுகளின் போது நீர் சிந்திய இரத்தத்தை உமக்கே ஒப்புக்கொடுக்கிறேன். பரம பிதாவே, அனைத்து வேத சாட்சிகளும் சிந்திய இரத்தத்தை உமது வார்த்தையானவர் சிந்திய இரத்தத்துடன் சேர்த்து உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். ஆண்டவரே, அனைத்து மனிதர்களுடைய தாழ்ச்சியையும், கற்பையும், கீழ்ப்படிதலையும், பொறுமையையும், இரக்கத்தையும், புண்ணியங்களையும் உமது வார்த்தையானவரின் திருஇரத்தத்துடன் சேர்த்து உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.” இவ்வாறு ஆண்டவரின் இரத்தத்தை பரம பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் பணியைப் புனிதை இடைவிடாமல் செய்துவந்தாள்.
நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479.
சிந்தனை : நம் ஆண்டவர் இயேசு சுவாமியின் திருஇரத்தத்தை நாமும் புனிதை போல அடிக்கடி ஒப்புக்கொடுக்கலாம்.. இது மிகவும் நல்ல பயனுள்ள, வல்லமையுள்ள பக்தி முயற்சி..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !