மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 16 : தாழ்ச்சி மற்றும் தூய்மை என்ற ஆடைகளை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்….
ஜனவரி 7-ம் தேதி பிறந்த புனித பெர்னதத் தான் பிறந்த இரண்டாம் நாளே ஞானஸ்தானம் பெற்றார். இவர் தந்தை நூற்பாலை மில் சொந்தமாக வைத்திருந்து வசதியாக வாழ்ந்த குடும்பம் தொழில் ஏற்பட்ட நஷ்ட்டத்தால் வீட்டுப்பொருட்கள் அத்தனையும் விற்கும் நிலைக்கு வந்து பின் சிறிய வீட்டிற்கு குடி புகுந்து அங்கும் வாடகை கொடுக்க முடியாத்தால் நண்பர் ஒருவரின் உதவியால் பழைய சிறைக்கூட அறை ஒன்றில் வாழ்ந்து வந்தனர். அது ஒரு மிகச்சிரிய அறை. அதில் ஒரே ஒரு ஜன்னல் அதுவும் குப்பை மேட்டுக்கு அருகில் இருக்கும். பெர்னதத்தின் பெற்றோருக்கு அவளையும் சேர்த்து மொத்தம் ஏழு பிள்ளைகள். அந்த சிறு அறையில் அடைபட்டுக்கிடந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்த அன்னை 18 தடவை காட்சி கொடுத்தார்கள் என்பது நம் இதயத்தை நெகிழச்செய்கிறது அன்றோ.. ?
புனித பெர்னதத் ஒரு சாதாரண நேர்மையுள்ள பெண்; இனிமையான குணம் படைத்தவள். சிறு வயதிலிலேயே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு மெலிந்து காணப்பட்டாள். நோயின் கொடுமையால் மூச்சு விட முடியாமல் திணறினாலும் வறுமையின் காரணமாக மருந்து வாங்கக்கூட இயலாத நிலை. கருப்பு ரொட்டி குறைந்த விலைக்கு கிடைத்தாலும் பெர்னதத்திற்கு ஜீரனிக்கவில்லை என்பதால் அவளுக்காக வெள்ளை ரொட்டி வாங்கிக் கொடுப்பாள். ஆனால் பெர்னதத்தின் தம்பி தங்கைகள் அதிலும் பங்கு கேட்டால் முகம் கோணாமல் பங்கிட்டு கொடுப்பாள். அவள் அதைச் சாப்பிட்டிருந்தால் கூட உடல் வலிமை பெற்றிருப்பாள்.
பெற்றோர் வேலைக்கு செல்வதால் பள்ளிக்கு செல்லவில்லை. அவளது முக்கிய அலுவல் தம்பி தங்கையரை கவனித்திக்கொள்வதாகும். பதிமூன்று வயது ஆகியும் எழுதவோ வாசிக்கவோ தெறியாது. ஆயினும் கிறிஸ்தவ பெற்றோர் என்பதால் நன்கு ஜெபிக்க அறிந்திருந்தார்.
1857-ம் ஆண்டு ஒரு சீமாட்டி பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது நாட்டுப்புற வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆடு மேய்க்க செய்தாள். ஆடு மேய்க்கும் வேளையிலும் சில மலர்களைக் கொய்து தானே தயார் செய்திருந்த பீடத்தில் வைத்து அலங்கரித்து ஜெபமாலை சொல்வாள். மிருகங்களின் மீது அதிகப் பிரியம். அவளது சிறிய ஆட்டுக்குட்டி அவளை முட்டித் தள்ளிவிடும்.
“ நான் மன்னித்துவிடுவேன்; அது மிகச்சிறிய ஆட்டுக்குட்டி; சிறியதாயிருப்பதெல்லாம் எனக்கு பிரியம் “ என்று சொல்வாள்.
ஒரு நாள் அவளைக் கண்டுபோக அவரது தந்தை வந்த போது, “ என் ஆடுகளைப் பாருங்கள், சிலவற்றில் முதுகில் பச்சையாய் இருக்கிறது “ என்று அவரிடம் சொன்னாள். அவளது தகப்பன் “ அவை தின்ற பச்சைப்புல் முதுகுக்கு வந்து விட்டது. அவை ஒருவேளை சாகக்கூடும்” என்று வேடிக்கையாகச் சொன்னதும் உடனே அழ ஆரம்பித்துவிட்டாள். அதன் பிறகு அவை எந்த வியாபாரிக்கு விற்க்கப்பட்டதோ அதற்குரிய அதன் அடையாளம் என்று விளக்கம் கொடுத்தார்.
“ பொய் சொல்வது இன்னதென்று தெறியாததால் சொன்ன வார்த்தைகளையெல்லாம் நான் நம்பினேன் “ என்று பின்னால் சொன்னாள். அவள் தனது 14-வது வயதில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினாள். அது அவள் புது நன்மை எடுக்க வேண்டிய வயது. அவளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுப்பது சிரமமான வேலை என்பதால் அவள் வீட்டிற்கு வந்து தயார் செய்து புது நன்மை வாங்க வேண்டியிருந்தது.
“ ஒன்றுமறியாத அறிவிலிப்பெண்ணாய் இருக்கிறாள் “ என்று சீமாட்டி புண்படுத்தும் சொற்களைச் சொன்னாலும்,
“ நான் எப்போதும் கடவுளை நேசித்துக் கொண்டாகிலும் இருப்பேன் “ என்று இனிய முறையில் பதில் சொல்லும் போது சீமாட்டி அவளை அணைத்துக்கொள்வாள்.
புது நன்மை பெறுவதற்காக மீண்டும் தனது சிறைக்கூட அறைக்கு வந்தாள். அந்த சிறிய அறையிலும் பெரிய இதயமுள்ள மனிதர்கள் மகிழ்வோடு அங்கு தங்கி நெவேர் என்ற பிறர் ஸ்நேக சபை சகோதரர்களிடம் புது நன்மைக்கு தன்னை தயாரித்து வந்தாள்…
( மாதாவின் காட்சி அடுத்த பதிவில் )…
நன்றி : நூல் - தேவனின் திருச்சபை மலர்கள், எழுதியவர்கள் அருட்தந்தை பால் பீட்டர், அருட்தந்தை M. டொமினிக்.
சிந்தனை : புனித பெர்னதத்தின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். கபடற்ற பாவமில்லாத உள்ளங்களையே கடவுள் தன் திட்டத்திற்காக பயன்படுத்துகிறார். அதே போல் மாதா காட்சி கொடுத்த அனைத்து குழந்தைகளும் கிட்டத்தட்ட ஒரே ரகம். கஷ்ட்டப்பட்ட குடும்பத்தில் உதிக்கும் மாசில்லா குழந்தைகள்.. ஆடுமாடு மேய்க்கும் சிறுவர்கள் ; கல்வி அறிவு அதிகம் இல்லாதவர்கள்; விவசாயிகள்…புனித பெர்னதெத் மற்றும் அவள் குடும்பத்தைப் பார்ப்போம்.
எத்தகைய வருமையான சூழலிலும் தங்கள் விசுவாசத்தை இழக்காதவர்கள். ஜெபிக்க மறவாதவர்கள். தாழ்ச்சி நிறைந்த சிறுமி பெர்னதத்தை எடுத்துக்கொண்டால் அப்படிபட்ட உடல் நலக்குறைவிலும், பசி பட்டினி மத்தியிலும், தன் உணவை தன் சகோதர சகோதரிகளுக்கு முகம் கோணாமல் பகிர்ந்து அளிப்பதிலும், பொறுமையோடு வாழ்வதிலும் சிகரமாக விளங்குகிறாள்… நாம் புனிதர்கள் வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொண்டு நம் குணநலன்களை மாற்றிக்கொள்ள வேண்டும்…
ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !